அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 2, 2010

பீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மனைவி, கூட்டத்தில் தேடிப்பாருங்கள்.

பீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மனைவி, கூட்டத்தில் தேடிப்பாருங்கள்

 

இயேசு இறைமகனா? புத்தகத்திற்கு மறுப்பு

 

மக்கள் அதிகமாக குழுமியிருக்கும் ஒரு விழாவில், ஒரு குறிப்பிட்ட நபரை பார்த்து, இந்த கூட்டத்தில் உன் மனைவி எங்கே இருக்கிறாள், அவளை எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு பெண் கேட்டாளாம். அதற்கு அந்த மனிதன், என் மனைவி சிகப்பு சேலை கட்டியிருப்பாள்  இது தான் அடையாளம் தேடிப்பாருங்கள் என்றுச் சொன்னானாம். சரி என்று தேடிப்பார்த்தால், சிகப்பு சேலை கட்டிய பெண்கள் அனேகர் விழாவில் இருந்தார்களாம்.

 இந்த மனிதனைப் போலத் தான் பீஜே அவர்களின் ஆராய்ச்சியும் உள்ளது.

பைபிளிலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டும்போது, அவ்வசனம் யாரைப் பற்றி பேசுகிறது,  அவ்வசனம் சொல்லப்பட்ட சூழல் என்ன? அதில் யார் பேசுகிறார், யாரைப்பற்றி பேசுகின்றார் போன்றவைகளையெல்லாம் கவனிக்காமல், ஏதோ நானும் புத்தகம் எழுதினேன், இதோ பாருங்கள் என்ற தோரணையில் விளக்கமளித்துள்ளார் பீஜே அவர்கள். குறைந்த பட்சம், அவர் மேற்கோள் காட்டும் வசனம் இடம்பெறும் அதிகாரத்தை மட்டும் படித்து இருந்தாலும் போதும், இப்படிப்பட்ட தரம்குறைந்த ஆராய்ச்சி நடந்திருக்காது.

இனி பீஜே அவர்கள் எழுதியவைகளைக் காண்போம்:

பீஜே அவர்கள் எழுதியது:

இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)

என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.

(முதலாம் நாளாகமம் 17:13)

பீஜே அவர்கள் "தாவீது இறை மகன்" என்று தலைப்பு  கொடுத்து, இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.  அதில் முதல் மேற்கோளாகிய சங்கீதம் 2:7ஐ பற்றி அனேக விவரங்கள் சொல்லலாம், எழுத்தின் படி தாவீது தான் இந்த வசனத்தில் வரும் "குமாரன்" என்று எடுத்துக்கொண்டாலும், இந்த வசனம் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி கூறுகிறது, இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

பீஜே அவர்கள் காட்டிய இரண்டாவது மேற்கோள் தான் பிரச்சனைக்குரியது (1 நாளாகமம் 17:13).

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.

(முதலாம் நாளாகமம் 17:13)


பீஜே அவர்கள் "தாவீது இறை மகன்" என்று தலைப்பு கொடுத்து, இந்த 1 நாளாகமம் 17:13ம் வசனத்தை காட்டுகின்றார். இதன் படி, அவர் சொல்ல வருவது என்ன? இந்த வசனத்தில் சொல்லப்பட்ட குமாரன் "தாவீது" ஆவார் என்பதாகும்.

நான் பீஜே அவர்களிடம் கேட்கிறேன்:

·          பீஜே அவர்களே உண்மையாகவே இந்த வசனத்தில் "அவன்" என்று குறிப்பிடுவது தாவீதையா சொல்லுங்கள்?

·          நீங்கள் முழுவதுமாக இந்த 1 நாளாகமம் 17ம் அதிகாரத்தை படித்தீர்களா?

·          இந்த வசனத்தின் முந்தைய பிந்தைய வசனங்களை படித்துப்பார்த்தீர்களா?

·          பீஜே அவர்களே முழு அதிகாரமும் வேண்டாம், குறைந்த பட்சம் 12ம் வசனத்தையாகிலும் படித்துப் பார்தீர்களா?

·          13ம் வசனத்தை காட்டிய நீங்கள், 12ம் வசனத்தை படித்து இருந்தாலே போதும், இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் தாவீது அல்ல என்பது விளங்கும்.

சரி, இவ்வசனத்தில் சொல்லப்பட்டவர் யார் என்று தெரிந்துக்கொள்வோம் (பீஜே அவர்கள் நீங்கள் கூட தெரிந்துக்கொள்ளுங்கள்):

 

1 நாளாகமம் 17:12,13

17:12 அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

17:13 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; உனக்கு முன்னிருந்தவனை விட்டு என் கிருபையை நான் விலகப்பண்ணினதுபோல, அவனை விட்டு விலகப்பண்ணாமல்,


இந்த வசனத்தில் சொல்லப்பட்ட நபர் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் ஆவார்.

பன்னிரண்டாம் வசனம் "அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்" என்றுச் சொல்கிறது. எருசலோமில் ஆலயத்தை கட்டியது தாவீது அல்ல, சாலொமோன் என்று பீஜே அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

17:13ம் வசனத்தில், "உனக்கு" என்பது தாவீதைக் குறிக்கும், "முன்னிருந்தவன்" என்பது சவுலைக் குறிக்கும், "அவனை" என்பது சாலொமோனைக் குறிக்கும்.

இந்த 17ம் அதிகாரம் ஆரம்பத்திலிருந்து படித்துப்பார்த்தல், இவ்வசனம் சொல்லப்பட்ட சூழல் மிகவும் தெளிவாகப் புரியும்.   சுருக்கமாக சொல்லவேண்டுமானால், தாவீது தேவனுக்கு ஒரு ஆலயத்தை கட்ட விருப்பம் கொண்டபோது, நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக தேவன் தாவீதுவிடம் பேசுகிறார். நீ ஆலயத்தைக் கட்டவேண்டாம், உன் குமாரன் எனக்கு ஆலயத்தை கட்டுவான் என்று சாலொமோனைக் குறித்து தேவன் கூறுகின்றார்.

1 நாளாகமம் 17: 1 – 4

17:1  தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

17:2  அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.

17:3  அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:

17:4  நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.

குர்‍ஆனைப் போல  பைபிளை படிக்கவேண்டாம் பீஜே அவர்களே:

பீஜே அவர்களே, குர்‍ஆனைப்போல அல்லாமல், பைபிளின் பெரும்பான்மையான வசனங்களின் சூழலை புரிந்துக் கொள்ளவேண்டுமானால், அவ்வசனம் சொல்லப்பட்ட அதே அதிகாரத்தையோ, அதைச் சுற்றியுள்ள வசனங்களையோ அல்லது இன்னும் ஒரு சில முந்தைய பிந்தைய அதிகாரங்களையோ படித்தால் புரிந்துவிடும்.

குர்‍ஆனைப்போல பைபிள் இல்லை. குர்‍ஆனின் ஒரு வசனத்தின் உண்மை பொருளை அறிந்துக்கொள்ளவேண்டுமானால், ஹதீஸ்களை தேடவேண்டும், விரிவுரைகளை தேடவேண்டும், இன்னும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்துகொள்ளவேண்டும், இன்னும் இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள் சொல்லும் விரங்களையும் தெரிந்துக்கொள்ளவேண்டும், இத்தனை விவரங்களை சேகரித்த பிறகும் இன்னும் இஸ்லாமிய அறிஞர்கள் சண்டை போட்டுக்கொள்ளும் வசனங்கள் குர்‍ஆனில் உண்டு.

இந்த உங்கள் மேற்கோளை பொருத்தமட்டில் (1 நாளாகமம் 17:13), முழு விவரமும் அந்த ஒரே அதிகாரத்தில் உள்ளது, உங்களைப் போல் உள்ள அறிஞர்கள் 12ம் வசனத்தை படித்து இருந்தாலே போதும் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள். ஆனால், இதனை செய்ய நீங்கள் தயாரா இல்லை.. ஆனால், புத்தகம் எழுத வந்துவிட்டீர்கள். அதுவும் மாற்று மத நம்பிக்கைகளை பற்றி எழுத வந்துவிட்டீர்கள்.

சரி, இந்த ஒரு வசனத்தில் தான் இப்படி தவறாக பீஜே அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்று பார்த்தால், இல்லை...இல்லை... இப்படி அனேக தவறுகள் பீஜே செய்வார்.  இதோ பீஜே அவர்களின்  இன்னொரு ஆராய்ச்சியின் தரம், மேலே காட்டப்பட்ட வரிகளுக்கு அடுத்த சில வரிகளில் பீஜே அவர்கள்  கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

பீஜே அவர்கள் எழுதியது:

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.

(இரண்டாம் சாமுவேல் 7:14)

இந்த வசனத்தை மேற்கோளாக‌ காட்டி, அடிப்படையில் எனக்கு பைபிள்  பற்றி ஒன்றுமே தெரியாது என்பதை பீஜே அவர்கள் ஒப்புக்கொண்டது போல ஒரு தவறை செய்துள்ளார்.

பீஜே அவர்கள் "சாமுவேல் இறை மகன்" என்று தலைப்பு கொடுத்து, 2 சாமுவேல் 7:14ம் வசனத்தை குறிப்பிடுகிறார். வசன எண்களை தவறாக எழுதினால், அது பெரிய பிழையில்லை, ஆனால் புரிந்துகொண்டதே தவறு என்றுச் சொன்னால், இப்படிப்பட்ட் பெரிய அறிஞருக்கு இது தகுதியாக இருக்குமா? சிந்தித்துப்பாருங்கள்?

 

பீஜே அவர்களே,

·          இந்த வசனத்தில் சொல்லப்பட்ட  குமாரன் "சாமுவேலா"?

·          முழு அதிகாரத்தை படித்துப்பார்க்கவில்லையா?  குறைந்தபட்சம் ஒரு சில வசனங்களையாவது படித்துப்பார்க்கவில்லையா?

·          சாமுவேல் புத்தகத்தில் "அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்" என்ற சொற்றொடர் வந்தால், சாமுவேல் தான் குமாரன் என்று நினைத்துவிடுவீர்களோ? இது தான் ஆராய்ச்சியா?

 

இந்த அதிகாரத்திலும் சொல்லப்பட்ட குமாரன் "சாலொமோன்" தான் "சாமுவேல்" இல்லை.

 

முடிவுரை:

வேண்டாம் பீஜே அவர்களே, வேண்டாம், இப்படி அறைகுறை ஆராய்ச்சி வேண்டாம். உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன், நேர்மையானவராக எழுத ஆரம்பியுங்கள், இல்லையானால், அதிகமாக இவ்வித கட்டுரைகள் உங்கள் உண்மை முகத்தை உலகிற்கு காட்டிவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

உங்கள் ஆராய்ச்சியின் படி, "இவன் என் குமாரனாக இருப்பான்" என்ற வசனம் "சாமுவேல்" என்ற  புத்தகத்தில் வந்தால், அந்த குமாரன் "சாமுவேல்" அப்படித்தானே?  கூட்டத்தில் சிகப்பு சேலை கட்டியிருக்கும் பெண் தான் என் மனைவி என்று யாரோ ஒருவர் சொன்னது போல, "இவன் என் குமாரனாக இருப்பான்" என்று சொற்றொடர் எங்கு வந்தாலும், அந்த புத்தகத்தை எழுதியவரே அந்த குமாரன் என்ற உங்கள் ஆராய்ச்சி மிகவும் போற்றுவதற்குரியது.  யார் பேசுகிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள் போன்றவைகளை எல்லாம் பார்க்கமாட்டீர்கள், சொந்தமாக அடிச்சுத் தள்ளவேண்டியது தான், யார் கேட்கப்போகிறார்கள்? என்ற நம்பிக்கை. சபாஷ். Keep it up.

 

[இந்த இலட்சனத்திலே, அனேக இஸ்லாமியர்கள் எனக்கு மெயில் அனுப்புவார்கள், பிஜே அவர்கள் புத்தகம் எழுதி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னும் ஒருசில பதில்தான் கொடுத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்பார்கள். நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், கிறிஸ்தவர்கள் பதில் தர கேள்விகள் கேட்க‌ தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு  தரப்படுகிறது, "பார்த்தீர்களா எங்களுக்கு பதிலே வரவில்லை என்று நீங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், நீங்கள் தைரியமாக பேசலாம், எழுதலாம்",  ஆனால், நாங்கள் பதில் தர ஆரம்பித்தால், உங்களுக்கு நிற்கவும் இடமிருக்காது]

 

பீஜே அவர்களே, ஒரு அதிகாரத்தில் தெளிவாக விவரங்கள் சொல்லியிருக்கும் போது, அதனை படித்து புரிந்துக்கொண்டு எழுத தவறிவிட்டீர்கள், அடுத்த பதிப்பிலாவது, இந்த விவரங்களை சரி படுத்தி உங்கள் ஆராய்ச்சி புத்தகத்தை பிரிண்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

 

 

நீங்கள் எழுதிய இதர விவரங்களுக்கு ஒரு பகுதி பதிலாக கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 

இயேசு இறைமகனா? புத்தகத்திற்கு மறுப்பு  -   இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன் (JESUS IS THE UNIQUE SON OF GOD)

 

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்:

இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2 

இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1 

பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்
 

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)


  http://isakoran.blogspot.com/2010/07/blog-post_8261.html

 



0 comments: