அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 10, 2015

சிலுவை மறுதலிப்பு: இஸ்லாமியரின் இழப்பு ”இரட்சிப்பு”

(Missing Cross: Muslim Lost)

ஆசிரியர்: ஆஸ்கர்

''ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை
உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத்
தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட
கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக்கிறேன். பின்னர்
என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. (ஸூரா 3:55 பி ஜைனுல் ஆபிதீன்
தமிழாக்கம்)

முன்னுரை:

ஈஸ்டர் திருநாள் வேதாகமம் குறிப்பிடுவது போல, கிறிஸ்துவைப் பின்பற்றும்
எவருக்கும் மிக முக்கியமான ஒரு பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின்போது,
மேசியாவாகிய இயேசு சிலுவையில் மரித்த சம்பவங்களை நினைவுகூர்வது மிக
முக்கியமானதாக இருந்து வருகிறது. 1 கொரிந்தியர் 15:1-20 சொல்வது போல,
இதுவே ஈஸ்டர் திருநாளின் மையப் பொருளாக இருக்கிறது.

அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை
மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை
ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்…கிறிஸ்துவானவர்
வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு,
வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும்,
பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு
அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர்
இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், …கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால்,
எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா…கிறிஸ்து
எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும்
உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்… கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து,
நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

இந்த வசனங்கள் இறைவனுடைய வார்த்தையான இஞ்சிலில் இருந்து
எடுக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமின் தீர்க்கதரிசியான முஹம்மது அவர்கள்
ஆறாம் நூற்றாண்டில் தவ்ராத்துடன் கூட சேர்த்து இஞ்சிலும் இறைவனுடைய
வார்த்தைதான் என்பதை உறுதி செய்திருக்கிறார்1. தவ்ராத்தையும் இஞ்சிலையும்
பின்பற்றும்படி அவர் மக்களை உற்சாகப்படுத்தினார். அவை இன்றைய
வேதாகமத்தில் நாம் காண்கிற பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு வசனங்களே அன்று
தவ்ராத் மற்றும் இஞ்சில் என அறியப்பட்டிருந்தது2. ஆகவே அவை திருத்தப்
படாததாகவே இருந்திருக்க வேண்டும். முஹம்மது அவர்களின் காலத்திற்குப் பின்
அவை திருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானிப்பவர்கள், ஒரு கையில்
இப்பொழுது உள்ள வேதாகமத்தையும், மறுகையில் ஆறாம் நூற்றாண்டிற்கு முன்
எழுதப்பட்ட வேதாகமத்தையும் வைத்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது
அனைத்து போதனைகளும் மாற்றப்படாமலேயே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது!
வேதாகமத்தின் செய்தி திருத்தப்பட்டுவிட்டது என்று சொல்லும் முஸ்லீம்கள்
உண்மையில் குர்-ஆனின் கூற்றுக்கு முரண்படுகின்றவர்களாக இருக்கிறார்கள்.

கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை முக்கியமான நிகழ்வாகக்
காண்பதும், இவைகளை மறுதலிப்பதால் இஸ்லாமியர்கள் ஏன் தாங்கொணா இழப்பை
அடைகிறார்கள் என்பதைப் பார்ப்பதுமே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

முக்கியமான காரியம்

முக்கியமானவைகளுக்கு முக்கியமான (முதல்) இடம் கொடுப்பதே
முக்கியமானதாகும்" என்று பெயர் அறியப்படாத ஒருவர் சொல்லி இருக்கிறார்.
மேசியாவாகிய இயேசுவின் சிலுவையின் முக்கியத்துவத்தை புரிந்து
கொள்வதற்கு, வேதாகமத்தின் முக்கியமான போதனையை சுருக்கமாகக் கூறுவது
அவசியம் ஆகும்.

இறைவன் தமக்கு மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் (கனமும்) உண்டாகும்படியாக
இவ்வுலகத்தைப் படைத்தார். தன் உடன் உறவைப் பேணும்படியாக மனிதனைப்
படைத்தார். ஆனால் முதல் மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் இறைவனுக்குக்
கீழ்ப்படியவில்லை. அவர்கள் செய்த பாவத்தின் விளைவாக அவர்கள் ஏதேன்
தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அதன் பின் மனிதனை மறுபடியும்
தன் உறவுக்குள் கொண்டுவருவதற்கான இறைவனின் திட்டத்தை வேதாகமம்
விளக்குகிறது. தொடர்ந்து மனிதனின் பாவம் அதிகரித்து, நோவா மற்றும்
அவனுடைய குடும்பத்தினருடன் அனைத்து மிருகங்கள் தங்கள் துணையுடன்
பேழைக்குள் நுழைய, மீதி அனைவரையும் படைத்த இறைவன் வெள்ளத்தால்
அழிக்குமளவுக்கு ஆனது என்பதை நாம் காண்கிறோம். சீக்கிரத்திலேயே இந்த
உலகம் மறுபடியும் கறைபட்டது. ஏனெனில் மனிதன் தொடர்ந்து தன்னை
உண்டாக்கியவருக்கு விரோதமாக கலகம் செய்து கொண்டிருந்தான். தேவன் ஆபிரகாமை
தெரிந்தெடுத்து, ஆபிரகாமின் சந்ததி மூலமாக உலகில் உள்ள அனைவரையும்
ஆசீர்வதிப்பேன் என வாக்குப் பண்ணினார். பின்பு ஆபிரகாமின் வழித்
தோன்றல்களில் யூத மக்களை தெரிந்து கொண்டார். இஸ்ரவேலருடனான அவருடைய
கிரியைகள் மூலமாக, இறைவன் யார், அவர் என்ன செய்கிறார், மற்றும் அவர்
எப்படி செயல்படுகிறார் என்பதை இந்த உலகம் அறிந்து கொண்டது. இறைவன் தம்
வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் தம் மக்களுடன் ஒரு உறவைக்
கொண்டிருக்கிறார். இதன் மத்தியில் எருசலேம் தேவாலயத்தை மையமாக வைத்து
முறையான பலிகள் செலுத்தும் முறை விவரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது3.
அப்பலிகள் மூலமாக இறைவன் ஜனங்களின் அசுத்தம் மற்றும் பாவங்களில் இருந்து
சுத்திகரிப்பதாக வாக்குப் பண்ணி இருக்கிறார். இவைகள் எல்லாம் வரப் போகிற
பரிபூரண பலிக்கு முன்னடையாளமாக இருந்தது.

பண்டைய இஸ்ரவேலைச் சேர்ந்த யூதர்கள் தேவனுக்கு கீழ்ப்படியவும் மற்றும்
தங்கள் பங்கைச் செய்யவும் முடியாதவர்களாக இருந்தார்கள். அதைத் தொடர்ந்து,
இறைவனின் வாக்குத்தத்தங்கள் எவ்வாறு இயேசுகிறிஸ்துவின் மரணம்,
உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலில் நிறைவேறின என்பதைப் பற்றிய குறிப்பை
இஞ்சில் தருகிறது. தம் சிலுவை மரணம் மூலமாக, நம் பாவங்களுக்கான தண்டனையை
எடுத்துப் போடுவதற்கு அவரே இறுதியான மற்றும் பரிபூரண பலியாக இருக்கிறார்.
இயேசு திரும்ப வரும்போது, அவர் இறைவனின் அரசை என்றென்றுமாக நிலை
நிறுத்துவார். அந்நேரம் வரைக்கும், இறைவனின் ஆவியானவர் மக்களின் கண்கள்
இறைவனின் அரசை காணும்படியாக திறக்காவிடில், அது அவர்களுக்கு
காணக்கூடாததாகவே இருந்துவிடும். தற்போது, இயேசு தங்கள் பாவங்களுக்காக
மரித்தார் என்று விசுவாசிப்பவர்கள் மட்டுமே இறைவனின் அரசில் உள்ளவர்களாக
இருக்கிறார்கள். (இஞ்சிலில் குறிப்பிடப் பட்டிருப்பது போல) நன்றி
உணர்வோடு அவர்கள் இறைவனுடைய வல்லமையில் அவருடைய சித்தத்தைச்
செய்கிறார்கள். இயேசு உயிர்த்தெழுந்தபின் தன் இரு சீடர்களிடம் பேசிய
வார்த்தைகளின் மூலமாக தேவனுடைய திட்டத்தில் அவர் வகிக்கும் முக்கிய பங்கை
உறுதிப் படுத்தி இருக்கிறார்:

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும்
விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து
இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா
என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின
வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை
அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். (லூக்கா 24:25-27)

சிலுவை மறுதலிப்பால் உண்டாகும் பயங்கர பின்விளைவுகள்

இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என முஸ்லீம்களுக்குச்
சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும். ஸூரா ஆலு இம்ரான் 55ம் வசனம் (தலைப்பில்
மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது), ஈஸா மஸிஹ்விற்கு (மேசியாவாகிய
இயேசுவிற்கு) நேர்ந்ததை குறிப்பிடுவதற்கு 'mutawaffīka' என்ற அரபி பதத்தை
பயன்படுத்துகிறது. ஒரு நபரின் சரீர மரணத்தைப் பற்றிச் சொல்வதற்கு இந்த
பதம் இன்றளவும் அரபி மொழி பேசுபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதே
வார்த்தை மற்றும் இதனை மூலமாகக் கொண்ட வார்த்தைகள் குர்-ஆனில் 25க்கும்
அதிகமான இடங்களில் வருகிறது. இரண்டு இடங்களைத் தவிர, மற்ற அனைத்து
இடங்களிலும் அவை மரணம் அல்லது மரணத்துடன் தொடர்புடையவைகளைக் குறிக்கிறது.
விதிவிலக்காக வரும் இரு இடங்களில் ஸூரா 6:60 மற்றும் 39:42ல்,
mutawaffīka' என்பது உறக்கத்தை உருவகமாகக் குறிப்பதாக வசனத்தின் பிண்ணனி
வெளிப்படுத்துகிறது. ஆனால் இயேசுவின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடும்
வசனமானது, உருவகம் அல்ல, அது நேரடி பொருளிலேயே காணப்படுகிறது. ஆகவே அது
உறக்கத்தை அல்ல, மரணத்தையே குறிப்பிடுகிறது.

சிலுவையையும், சிலுவை மரணத்துடன் தொடர்புடைய சம்பவங்களையும் மறுதலிக்கும்
முஸ்லீம்கள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கக்
கடமைப்பட்டிருக்கிறார்கள்:

முந்தைய வேதங்களை உறுதிப் படுத்துவதாகக் கூறும் குர்-ஆன் முந்தைய
வேதங்களின் மைய போதனையை புறக்கணிப்பது என்பது எப்படி?
இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு புறம்பே பாவங்களுக்கான மன்னிப்பைப்
பற்றிய நிச்சயம் பெறுவது பற்றி வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. ஆதலால்,
நரகத்துக்குச் செல்லக் கூடிய ஆபத்துடன் நீங்கள் எப்படி வாழமுடியும்?
மேசியாவாகிய இயேசுவின் அழைப்பை நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில்
வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும்
மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு,
என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு
இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும்
இருக்கிறது என்றார். (மத்தேயு 11:28-30)

கட்டுரை முற்றுப்பெற்றது

________________________________

அடிக்குறிப்புகள்:

1. ஸூரா 5:43 – 47, 66-69; 10:64, 94; 19:12; 3:48; சில கெட்ட யூதர்கள்
வார்த்தைகளின் பொருளை மட்டுமே மாற்றினார்கள், தவ்ராத்தை அல்ல, ஸூரா 3:78
ஐ பார்க்கவும். வேறு சில யூதர்கள் இஸ்லாத்தின் தீர்க்கதரிசியிடம் இருந்து
கேட்ட வார்த்தைகளை மாற்றினார்கள், ஸுரா 2:75-79; 4:46 ஐ பார்க்கவும்.

2. யூத தீர்க்கதரிசியான ஹசரத் தாவூது அவர்களுக்கு சபூர் அருளப்பட்டது
(ஸூரா 4:163). ஸூரா 3:3ல் இது குறிப்பிடப்படாதது அதுவும் தவ்ராத்தில் ஒரு
பகுதி என்பதைக் குறிக்கிறது. இது பின்வரும் ஹதீஸ் இக்கருத்திற்கு துணையாக
இருக்கிறது, ( ħadīŧ, ābīħMişkāt al-Mas, vol.2,p.1237): ஏசாயா
தீர்க்கதரிசன புத்தகத்தில் உள்ளதை, தவ்ராத்தில் உள்ளதாக காப் கூறினார்.
இயேசுவும் அவருடைய சீடர்களும் முழு பழைய ஏற்பாட்டையும்
குறிப்பிடும்படியாக நியாயப் பிரமாணங்களும் தீர்க்கதரிசனங்களும் என்ற
பதங்களைப் பயன்படுத்தினார்கள். யோவான் 10:34 ஐ சங்கீதம் 82:6 உடனும், 1
கொரிந்தியர் 14:21 ஐ ஏசாயா 28: 11,12 உடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
ஆதிச் சபையானது இஸ்லாம் வருவதற்கு முன்பாக இஞ்சில் மற்றும் தவ்ராத் ஆகிய
பதங்களை முழு வேதாகமத்தையோ அல்லது அதன் பகுதியையோ குறிப்பிட
பயன்படுத்தியதை அனேக வரலாற்று ஆவணங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன. R.K.
Harrison, Introduction to the New Testament, p.99; Philip S. Schaff
(ed.), A Select Library of Nicene and Post-Nicene Fathers of the
Christian Church: First Series. vol.8, p.7; B.B. Warfield, The
Inspiration and Authority of the Bible, p.413; Ignatius (A.D. 115) in
Pros Filadelfeis 5; Pros Smurnaious 7.

3. தேவாலயம் மற்றும் பலி இவ்விரண்டிற்கும் குர்-ஆன் ஒரு சாட்சியாக
இருப்பதை ஸூரா 17:1-7லும், 2:67-74லும் காணலாம்.

மூலம்: http://www.answering-islam.org/authors/oskar/missing_cross.html

ஆஸ்கார் அவர்களின் இதர கட்டுரைகள்

மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/oskar/missing_cross.html




--
Source : http://isakoran.blogspot.in/

April 8, 2015

அத்தியாயம் 1 - பவுலடியாரின் இரத்தின சுருக்கம் – அன்பு, அல்லாஹ்வின் நிலைப்பாடு என்ன?

அல்லாஹ்வைவிடவும், முஹம்மதுவைவிடவும் பவுலடியார் எப்படி மேன்மையானவராக இருக்கிறார்?

அத்தியாயம் 1 - பவுலடியாரின் இரத்தின சுருக்கம் – அன்பு, அல்லாஹ்வின்
நிலைப்பாடு என்ன?

ஆசிரியர்:உமர்

இப்புத்தகத்தின் முன்னுரையை முதலாவது படிக்கவும்: முன்னுரை –
இப்புத்தகத்தின் நோக்கமென்ன?

முஸ்லிம்களின் மனசாட்சிக்கு ஒரு சவால். உரை கல்லில் தங்கத்தை உரசி
உண்மையை கண்டறிவது போன்று, இஸ்லாமிய இறையியல் கோட்பாடுகளின் உண்மை நிலையை
அறிய முதலாவது நாம் அவைகளை அன்பு என்னும் சக்தியோடு
உரசிப்பார்க்கவேண்டும். குறைந்த பட்சம் அன்பு பற்றி அல்லாஹ் என்ன
சொல்கின்றான் என்பதை கவனிக்கவேண்டும். உலகில் உள்ள மதங்கள் எல்லாம் அன்பை
போதிக்கின்றது என்ற பொதுவான நம்பிக்கை மக்களுக்கு உண்டு. இந்த பொதுவான
நம்பிக்கை இஸ்லாமுக்கு பொருந்துமா?

முஸ்லிம்கள் குற்றப்படுத்தும் பவுலடியாரின் போதனையையும், அதே
முஸ்லிம்களின் இறைவனாக இருக்கும் அல்லாஹ்வின் போதனையையும் "அன்பு" என்ற
நற்பண்புடன் ஒப்பிட்டுப் பார்ப்போமா!

கிறிஸ்தவர்களால் "பவுலடியார்" என்றும், "அப்போஸ்தலர்" என்றும் அன்புடன்
அழைக்கப்படும் பவுல் அவர்கள் அன்பு பற்றி என்ன சொல்கிறார் என்பதை இப்போது
படிப்போம்:

1 கொரிந்தியர் 13ம் அத்தியாயம்:

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு
எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற
கைத்தாளம்போலவும் இருப்பேன்.

நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல
அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல
விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச்
சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப்
பிரயோஜனம் ஒன்றுமில்லை.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு
தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும்,
சகலத்தையும் சகிக்கும்.

அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய
பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச்
சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ
குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது
முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது
நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;
இவைகளில் அன்பே பெரியது.

முஸ்லிம்களே, மேற்கண்ட வசனங்களை ஒருமுறையல்ல, பலமுறை படித்துப்பாருங்கள்.
அதன் பிறகு, இவைகளுக்கு இணையான அல்லது மேலான வசனங்களை குர்-ஆனில் உண்டா
என்று தேடிப்பாருங்கள்.

குர்-ஆனை அரபியில் படித்தால் தான் அதிக நன்மையென்று அறியாமையில்
முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் குர்-ஆன் வசனங்களில்
என்ன சொல்ல வருகிறார்? என்பதை புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல்,
புரியாவிட்டாலும் பிரச்சனையில்லை, கண்களை திறந்து கொண்டு, மனதை
மூடிக்கொண்டு, கண்மூடித்தனமாக படிக்கும் ஒவ்வொரு அரபி எழுத்துக்கும்
அல்லாஹ் பல நன்மைகளைத் தருவான் என்று நம்பி குர்-ஆனை படிக்கும்
முஸ்லிம்களே, மேற்கண்ட பவுலடியாரின் வசனங்களை தமிழில் கொடுத்துள்ளேன்
அவைகளை படியுங்கள்.

இவ்வசனங்கள் ஒவ்வொன்றிற்கும் நான் விளக்கத்தை எழுத ஆரம்பித்தால், அதுவே
ஒரு புத்தகமாக ஆகிவிடும், எனவே, அதனை நான் இப்போது செய்ய விரும்பவில்லை.

பவுலடியாரின் மேற்கண்ட வசனங்கள், குர்-ஆனின் வசனங்களைக் காட்டிலும்
மேன்மையானதாக உங்களுக்குத் தெரியவில்லையா?
பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் காணப்படும் அன்பு, கணவன் மனைவிக்கு
இடையில் காணப்படும் அன்பு, நண்பர்களுக்கு இடையில் காணப்படும் அன்பு,
சகோதர சகோதரிகளின் மத்தியில் காணப்படும் அன்பு என்று பலவாறு அன்பு
காணப்படுகின்றது. "இப்படிப்பட்ட உண்மையான அன்பு என்ன செய்யும்?" என்பதை
சுருக்கமாக பவுலடியார் மேற்கண்ட வசனங்களில் சொல்லியுள்ளார். முஸ்லிம்களே!
இவைகளா மனித வார்த்தைகள்? இவைகளா ஒரு கள்ள அப்போஸ்தலரின் வார்த்தைகள்?
அப்படியானால், அன்பு பற்றி இவைகளை காட்டிலும் மேலான குர்-ஆன் வசனங்களைக்
காட்டுங்கள்.
உண்மையாகவே குர்-ஆன் இறைவனின் வார்த்தை என்றுச் சொன்னால், பவுலடியாரின்
வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்றுச் சொன்னால், குர்-ஆனில் உள்ள 6236
வசனங்களில் ஒரு வசனமும் பவுலடியாரின் வசனங்களைக் காட்டிலும் அற்பமானதாகக்
காணப்படக்கூடாது. குர்-ஆனின் அனைத்து வசனங்களும், பவுலடியாரின் மேற்கண்ட
வசனங்களைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கவேண்டும். முஸ்லிம்கள் இந்த
சவாலை ஏற்க தயாரா?
அன்பு என்ன செய்யும், அது என்ன செய்யாது என்பதை இரத்தினச் சுருக்கமாக
பவுலடியார் வடித்துள்ளார், உங்கள் குர்-ஆனில் அன்பு என்னச் செய்யும்?
அன்பு என்னச் செய்யாது? என்பதைப் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று
உங்களால் குர்-ஆன் வசனங்களை மேற்கோள் காட்டமுடியுமா?

இப்போது குர்-ஆனில் அல்லாஹ் இறக்கிய சில வசனங்களைப் பார்ப்போமா?

குர்-ஆன் அத்தியாயம் 111ஐ படிப்போம்:

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும்
அழிவாள்). (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மேற்கண்ட வசனங்கள் "அபூ லஹப்" என்பவரை அல்லாஹ் சபித்த சாப வசனங்கள்
ஆகும். முஸ்லிம்களே, பவுலடியாரின் வசனங்களோடு உங்கள் குர்-ஆனின்
வசனங்களை ஒப்பிட்டுப் பார்ப்பீர்களா? பவுலடியார் எப்படி அல்லாஹ்வை விட
மேன்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை இப்போது உங்களால்
கவனிக்கமுடிகின்றதா?

[குர்-ஆனின் இந்த வசனங்களை மட்டும் ஏன் எடுத்து ஒப்பிடுகிறீர்கள் என்று
கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கு உரிமையில்லை, ஏனென்றால், குர்-ஆனின்
அனைத்து வசனங்களும் அல்லாஹ் இறக்கியது தானே! அவைகள் அனைத்தும் மனித
வார்த்தைகளைக் காட்டிலும் சிறப்பானது தானே! பவுலடியார் ஒரு மனிதர் தானே!
எப்படி ஒரு மனிதரின் வார்த்தைகள், சர்வ ஞானியாகிய அல்லாஹ்வின்
வார்த்தைகளைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கமுடியும்? எனவே, அல்லாஹ்வின்
அனைத்து வசனங்களையும் ஒப்பிட மற்றவர்களுக்கு உரிமையுண்டு]

பவுலடியாரின் இன்னொரு வசனம்: ரோமர் 13:8

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும்
ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன்
நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.

ஒருவன் மற்றொருவனிடம் அன்பு கூறும் போது, அவன் பழைய ஏற்பாட்டின்
கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். எக்காலத்துக்கும்
பொருந்தக்கூடிய விதமாக, மோசே மூலமாக தேவன் பத்து கட்டளைகளைக் கொடுத்தார்.
அவைகளைப் பற்றி இயேசு கீழ்கண்டவாறு கூறினார்:

மத்தேயு 22:37- 40

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு
இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும்
அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ
அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு
கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும்
அடங்கியிருக்கிறது என்றார்.

இதையே பவுலடியாரும் விளக்கி கூறுகின்றார், இயேசு சொன்னவைகளின்ன்
விளக்கவுரையாக பவுலடியாரின் வார்த்தைகள் காணப்படுகின்றது என்பதை
கவனியுங்கள், ரோமர் 13:9

எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக,
களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக,
இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும்,
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

மோசே மூலமாக தரப்பட்ட 10 கட்டளைகளில், முதல் 4 கட்டளைகள் மனிதனுக்கும்
தேவனுக்கும் சம்மந்தப்பட்டது. ஐந்தாம் கட்டளை முதல் பத்தாம் கட்டளை
வரையுள்ளது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் சம்மந்தப்பட்டது. இந்த
இரண்டாம் பாகத்தில் உள்ளதைப் பற்றிய விளக்கத்தை சுருக்கமாக பவுலடியார்
மேற்கண்ட வசனங்களில் விவரிக்கிறார். இந்த ஆறு கட்டளைகளை எப்படி
நிறைவேற்றுவது என்று பவுலடியாரிடம் கேட்டுப்பாருங்கள்? அவர் சொல்லுவார்
"பிறனிடம் அன்பு செலுத்து, அப்போது அவைகள் அனைத்தும் தானாக நிறைவேறும்".

"பிறன்" என்பவன் யார்?

முஸ்லிம்களே! ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிக்கவேண்டும் என்பதில் "பிறன்" என்பது
இன்னொரு கிறிஸ்தவனை மட்டும் குறிக்காது, அது எல்லோரையும் குறிக்கும்.
அவன் யாராக இருந்தாலும் சரி, அவன் ஒரு முஸ்லிமாக இருக்கலாம், ஒரு
இந்துவாக இருக்கலாம், அவ்வளவு ஏன் அவன் இறை நம்பிக்கை இல்லாத ஒரு
நாத்தீகனாகவும் இருக்கலாம், அவனிடம் அன்பு செலுத்தும் படி பவுலடியார்
கட்டளையிடுகிறார்.

முஸ்லிம்களுக்கு ஒரு கேள்வி: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை நேசிப்பான்,
இதில் முஸ்லிம்கள் சிறப்பாக செய்வது ஒன்றுமில்லை. இயேசு இதைப் பற்றிச்
சொல்லும் பொது இவ்வாறு கூறினார்:

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால்
உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு
செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும்
வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச்
செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? (மத்தேயு
5:46,47 பொது தமிழாக்கம்)

முஸ்லிமல்லாத இனத்தவரை முஸ்லிம்கள் நேசிக்கவேண்டும் என்று குர்-ஆன்
எங்கேயாவது சொல்கிறதா? யூதர்களை முஸ்லிம்கள் நேசிக்கவேண்டும்,
அவர்களுக்காக ஜெபம் (துவா) செய்யவேண்டும் என்று குர்-ஆன் சொல்கிறதா?
ஆனால் எல்லோரையும் நேசிக்கவேண்டும் என்று பவுலடியார் சொல்கிறார். இப்போது
சொல்லுங்கள், யார் மேன்மையானவர்? பவுலடியாரா அல்லது அல்லாஹ்வா?

இப்படிப்பட்ட வார்த்தைகளை பவுலடியாரின் மூலமாக எழுதவைத்து,
கிறிஸ்தவர்களின் கையில் ஒரு வேதமாக தவழும்படி செய்த எங்கள் தேவனுக்கு
கிறிஸ்தவர்கள் கோடி கோடி நன்றிகளைச் சொன்னாலும் அது போதாது என்பது எங்கள்
கருத்து. இப்படிப்பட்ட வசனங்களை நாங்கள் படிக்கும் ஒவ்வொரு வேளையும்,
எங்கள் போதகர்கள் மற்றும் ஊழியர்கள் அவைகளை விளக்கி பிரசங்கம் செய்யும்
போதெல்லாம், நாங்கள் அன்பு என்ற விஷயத்தில் குறைவுள்ளவர்களாகவே
காண்கிறோம், இன்னும் எப்படி அன்பில் முழுமை அடைய முடியும் என்று
சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். இப்படிப்பட்ட வசனங்களே கிறிஸ்தவர்களின்
நித்திய வாழ்க்கைக்கான வெற்றிக்கு வழி வகுக்கிறது.

இயேசு போட்டு வைத்திருந்த அஸ்திபாரத்தின் மீது சீடர்களும், பவுலடியாரும்
அழகான மாளிகையை கட்டி எழுப்பினார்கள். ஆனால், இயேசுவின் வழியில் வந்தவன்
நான் என்றுச் சொல்லிக்கொண்ட முஹம்மதுவோ, இயேசு போட்டு வைத்திருந்த
அஸ்திபாரத்தை நாசமாக்கும் செயலைச் செய்தார். பைபிளின் தேவன் என்று தன்னை
அடையாளம் காட்டிக்கொண்ட அல்லாஹ், அந்த பைபிளின் தேவன் அமைத்திருந்த அழகான
தோட்டத்தை அழிக்கும் செயலைச் செய்தார்.

பவுலடியாரை குற்றப்படுத்தும் முஸ்லிம்கள், அவரின் வசனங்களை குர்-ஆன்
வசனங்களோடு ஒப்பிடுவார்களா? அந்த தைரியமும், உண்மையும் முஸ்லிம்களிடம்
உண்டா? உண்டென்றுச் சொல்பவர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளட்டும்.

இயேசுவின் சீடர்கள் மற்றும் பவுலடியார் மூலமாக தேவன் எழுதி வைத்த
வார்த்தைகள் தான் புதிய ஏற்பாட்டில் கணப்படுகின்றது. 1 கொரிந்தியர் 13ம்
அத்தியாயத்திற்கு இணையான ஒரு அத்தியாயத்தை முஸ்லிம்கள் குர்-ஆனிலிருந்து
எடுத்துக் காட்டமுடியுமா?

பிற இனத்தவர்களையும், பாவம் செய்பவர்களையும் நேசிக்கும் விதமாக பைபிளின்
தேவனும், இயேசுவும் பவுலடியாரும் போதித்தார்கள். பாவத்தை தேவன்
வெறுக்கின்றார், ஆனால், பாவியை நேசிக்கிறார், அவன் தன் தீய வழியை விட்டு
வரவேண்டும் என்று விரும்புகிறார், அவன் நேர் வழியில் வரும்வரை அவனுக்கு
நேராக தன் கரங்களை நீட்டி அவர் காத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால்,
அல்லாஹ்வோ, பாவிகளை நேசிப்பதில்லை, அவர்கள் திருந்தி வந்தால் மட்டுமே
நேசிப்பேன் என்று நிபந்தனை விடுக்கிறார்:

குர்-ஆன் 2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்)
அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு)
பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள்
எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

குர்-ஆன் 22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின்
தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம்
செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ்
நேசிப்பதில்லை.

இயேசு சொன்னது போல, நல்லவர்களை மட்டுமே அல்லாஹ் நேசித்தால், அவர்
விசேஷித்துச் செய்வது என்ன? திருடன் கூட தன்னை நேசிப்பவனை நேசிக்கிறான்,
தனக்கு விரோதியாக இருப்பவனை நேசிப்பதில்லை. திருடனுக்கும்
அல்லாஹ்விற்கும் வித்தியாசமில்லையா?

1 கொரிந்தியர் 13ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட பவுலடியாரின் போதனையை ஒரு
மனிதன் பின்பற்றினால், அவன் முழு மனிதனாக மாறுவான், ஒருவனுக்கும் அவன்
தீங்கு இழைக்கமாட்டான், மற்றவர்கள் நஷ்டமடையச் செய்யமாட்டான்.

முடிவுரை:

இதுவரை பவுலடியாரின் போதனைகளிலிருந்து ஒரு சில வசனங்களை ஒப்பிட்டுப்
பார்த்தோம். அன்பு பற்றி பவுலடியார் சொல்வது போலவோ அல்லது அதை விட
மேன்மையான வசனங்களையோ அல்லாஹ் குர்-ஆனில் சொல்லவில்லை என்பதை
கண்டுக்கொண்டோம். இது முஸ்லிம்களுக்கு ஆச்சரியமாகவும், தர்மசங்கடமாகவும்
இருக்கக்கூடும். பவுலடியாரின் வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாக உள்ளது.
பழைய ஏற்பாட்டு கட்டளைகள் அனைத்தையும், அன்பு என்ற ஒன்றை பரிபூரணமாக பின்
பற்றுவதினால் நிறைவேற்ற முடியும் என்பதை விளக்கினார். ஒரு மனிதன்
பவுலடியாரின் வார்த்தைகளை பின் பற்றினால், அவனும், அவன் சார்ந்த
சமுதாயமும் மேன்மையடையும். அல்லாஹ்வின் வார்த்தைகள் பவுலடியாரின்
வார்த்தைகளுக்கு முன்பு தோற்றுப் போகிறது. இஸ்லாமியரல்லாதவர்களையும்
நேசிக்கவேண்டும் என்ற கருத்துடைய வசனங்களை குர்-ஆனிலிருந்து முஸ்லிம்கள்
காட்டுவார்களா?

அடுத்த அத்தியாயத்தில், பவுலடியாரின் இதர வசனங்களை எடுத்துக் கொண்டு,
அவைகள் எப்படி குர்-ஆன் வசனங்களைக் காட்டிலும் மேன்மையுள்ளதாக இருக்கிறது
என்பதைக் காண்போம்.

முஸ்லிம்களே, பைபிளை படிக்க ஆரம்பியுங்கள், மேன்மை அடைவீர்கள்.

இப்புத்தகத்தின் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/paul_and_islam/chapter_1_paul_on_love.html


--
Source : http://isakoran.blogspot.in/

April 6, 2015

அல்லாஹ்வைவிடவும், முஹம்மதுவைவிடவும் பவுலடியார் எப்படி மேன்மையானவராக இருக்கிறார்?

ஆசிரியர்: உமர்

முன்னுரை – இப்புத்தகத்தின் நோக்கமென்ன?

கிறிஸ்தவத்திற்கு பிறகு 600 ஆண்டுகள் கழித்து மக்காவில் முஹம்மது என்ற
பெயரில் ஒருவர் தோன்றி, தன்னை தீர்க்கதரிசி என்று சுயபிரகடனம் செய்து
கொண்டார். அல்லாஹ் என்ற இறைவன் தன்னை இறைத்தூதுவராக அனுப்பினார் என்றுச்
சொல்லிக்கொண்டார். அந்த அல்லாஹ் தனக்கு கொடுக்கும் வார்த்தைகள் தான்
குர்-ஆன் என்றும் சொன்னார். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வணங்கும்
இறைவன் தான் தன்னையும் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டார். அவர்கள்
தன்னை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினார், ஆனால்
அவரது விருப்பம் நிறைவேறவில்லை.

யூத கிறிஸ்தவர்களின் வேதத்திலிருந்து அனேக நிகழ்ச்சிகளை குர்-ஆனில்
மறுபதிவு செய்தார், சிலவற்றை மாற்றியும் மறுபதிவு செய்தார். இயேசு ஒரு
தீர்க்கதரிசி மட்டுமே என்று குர்-ஆனில் எழுதிவிட்டார். இயேசுவிற்கு
இறைத்தன்மையில்லை, அவர் சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை
என்றார். இந்த முஹம்மதுவையும், அவர் கொண்டு வந்த புத்தகத்தையும்
பின்பற்றும் மக்கள் தான் நாம் காணும் முஸ்லிம்கள். இவர்களின் மதம் தான்
இஸ்லாம்.

முஸ்லிம்களின் குற்றச்சாட்டுகள்: கிறிஸ்துவை மட்டுப்படுத்தவும்,
கிறிஸ்தவத்தை குற்றப்படுத்தவும் முஸ்லிம்கள், முக்கியமாக தமிழ் நாட்டில்
உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்:

இயேசு போதித்த போதனை பவுல் என்பவரால் திருத்தப்பட்டுவிட்டது. இயேசு
போதித்தது இஸ்லாமைத் தான்.
இன்று கிறிஸ்தவர்கள் பின்பற்றும் கோட்பாடுகளை போதித்தவர் பவுல்
என்பவராவார். இயேசுவின் சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார்
போன்ற போதனைகள் பவுலின் போதனைகளாகும்.
புதிய ஏற்பாட்டில் பவுலின் வார்த்தைகளே மிகுந்து காணப்படுகிறது, பவுல்
ஒரு கள்ள அப்போஸ்தலர் ஆவார்.

இப்படி அனேக குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள். ஆனால்,
இயேசு போதித்ததும், இயேசுவின் சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் போதித்ததும்,
பவுலடியார் போதித்ததும் ஒரே செய்தியைத் தான் என்பதை கிறிஸ்தவர்கள்
அறிவார்கள், ஆய்வு செய்யும் ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்வார்கள்.
முஸ்லிம்கள் உண்மையாக ஆய்வு செய்தால், இதே முடிவிற்குத் தான் வருவார்கள்,
ஆனால் அவர்கள் ஆய்வு செய்து உண்மையை அறிந்துக்கொள்ள தயாராக இல்லை என்பது
தான் கசப்பான உண்மை.

பவுலடியாரைப் பற்றி இப்படிப்பட்ட தவறான கண்ணோட்டத்தை குர்-ஆனோ, ஹதீஸ்களோ
அல்லது இதர இஸ்லாமிய சரித்திர நூல்களோ கொண்டிருக்கவில்லை என்பது
முஸ்லிம்களுக்கு பிடிக்காத இன்னொரு கசப்பான உண்மையாகும். எல்லா
உண்மைகளும் இனிக்காது, சில உண்மைகள் கசப்பாக இருக்கும், இருந்தபோதிலும்,
நித்தியத்தைக் கருதி முஸ்லிம்கள் ஆய்வு செய்து சத்தியத்தை அறிந்துக்
கொள்ளவேண்டுமென்பது தான் எங்கள் விருப்பம்.

முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி:

அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய புத்தகம் தான் குர்-ஆன்.
குர்-ஆன் போதிக்கும் போதனையை விட மேன்மையான போதனையை உலகில் எந்த ஒரு
புத்தகத்திலும் காணமுடியாது.
இதே போல, முஹம்மதுவின் செயல்களும், பேச்சுக்களும் அல்லாஹ்வின்
வெளிப்பாடுகளாக உள்ளன.
முஹம்மது சுயமாகப் பேசவில்லை, சுயமாக எதையும் செய்யவில்லை, அல்லாஹ்வின்
சொற்படியே அவர் பேசினார் மற்றும் நடந்துக்கொண்டார். ஆக, முஹம்மதுவின்
போதனைகளையும், செயல்களையும் நாம் காணும்போதெல்லாம், அவைகள் அல்லாஹ்வின்
வார்த்தைகளே, அல்லாஹ் செய்யச் சொன்ன செயல்களே என்று கருதவேண்டும்.

இப்படி முஸ்லிம்கள், குர்-ஆனைப் பற்றியும், முஹம்மதுவின் செயல்கள்
பற்றியும் அதிக மேன்மையாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இதுவரை நாம் மேலே பார்த்த விவரங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையை
பிரதிபலிக்கும் விவரங்களாகும். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி புதிய
ஏற்பாட்டில் பவுலடியார் எழுதிய கடிதங்களின் போதனைகள் மனித சிந்தனையில்
உதித்த சிந்தனைகளாகும், அவைகள் தேவனின் வார்த்தைகள் அல்ல. அவைகள் பவுல்
என்ற ஒரு கள்ள அப்போஸ்தலரின் போதனைகளாகும்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி, பரிசுத்த ஆவியானவர் தான் அப்போஸ்தலர்
பவுலடியார் மூலமாக அனேக கடிதங்களை எழுதவைத்தார். அப்போஸ்தலர் பேதுரு,
யோவான் மற்றும் இதர நபர்களை எப்படி பரிசுத்த ஆவியானவர்
பயன்படுத்திக்கொண்டாரோ அதே போல பவுலடியாரையும் பயன்படுத்திக்கொண்டார்,
கிறிஸ்தவர்களுக்கு இதில் ஒரு அணு அளவும் சந்தேகமில்லை.

இப்போது அல்லாஹ்விற்கு/முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்கள் விடுக்கும் சவால் என்ன?

ஒரு வாதத்திற்காக பவுலடியாரின் வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்று நாம்
ஏற்றுக்கொள்வோம். அப்படியானால், "பவுலடியாரின் போதனைகள் அல்லாஹ்வின்
போதனைகளைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கக்கூடாது. அதாவது குர்-ஆன்
மற்றும் முஹம்மதுவின் போதனைகள் பவுலடியாரின் போதனைகளைக் காட்டிலும்
மேன்மையானதாக இருக்கவேண்டும்". இதனை இஸ்லாமிய அறிஞர்கள்
ஒப்புக்கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.

ஆனால், உண்மையில் இப்படி இருக்கின்றதா? என்பது தான் கேள்வி?

பவுலடியாரின் போதனைகள் முஹம்மதுவின் போதனைகளைக் காட்டிலும் சிறப்பாக
இருக்கிறது என்பதை நாம் காணப்போகிறோம்.
பவுலடியாரின் வார்த்தைகள் அல்லாஹ்வின் வார்த்தைகளைக் காட்டிலும் இமய மலை
அளவிற்கு உயர்ந்து காணப்படுகின்றது என்பதை நாம் காணப்போகிறோம்.

பவுலடியாரின் வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்றும் கள்ள அப்போஸ்தலரின்
வார்த்தைகள் என்றும் கருதும் முஸ்லிம்கள் இந்த சவாலை மனமுவந்து
மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் வேதம் என்று நம்பும்
தங்கள் குர்-ஆன் வசனங்களை பவுலடியாரின் வசனங்களோடு ஒப்பிடவேண்டும்.
பவுலடியாரின் வார்த்தைகள் முஹம்மதுவின் வார்த்தைகளோடு ஒப்பிடவேண்டும்.
முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி பவுலடியாரின் ஒரு போதனை கூட
முஹம்மதுவின் மற்றும் அல்லாஹ்வின் போதனையைக் காட்டிலும் சிறப்பானதாக,
மேன்மையானதாக இருக்கக்கூடாது.

முஸ்லிம்களுக்கு தங்கள் அல்லாஹ்வின் வார்த்தைகள் மீது நம்பிக்கை
இருந்தால், பவுலடியாரின் கீழ்கண்ட புத்தகங்களை (கடிதங்களை) படித்துப்
பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் பவுலடியாரின் புத்தகங்களை படிக்க
முன்வரவில்லையென்றால், அவர்களுக்கு தங்கள் அல்லாஹ்வின் வார்த்தைகள்
அடங்கிய குர்-ஆன் மீது நம்பிக்கையில்லை, பவுலடியாரின் ஞானத்திற்கு முன்பு
அல்லாஹ்வின் ஞானம் தோற்றுவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று
அர்த்தமாகிவிடும்.

இந்த புத்தகத்தை ஒரு இஸ்லாமிய விமர்சனமாக கருதாமல், உண்மையான இறைவனை
கண்டுபிடிக்கும் ஒரு தேடலாக இருக்கிறது என்று முஸ்லிம்கள் கருதுவார்கள்
என்று எண்ணுகின்றேன். முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவது எமது
நோக்கமில்லை, அதற்கு பதிலாக பொய்யான மார்க்கமாகிய இஸ்லாமை விட்டு விட்டு,
உண்மை இறைவனையும், மெய் மார்க்கத்தையும் முஸ்லிம்கள் கண்டு கொண்டு மேன்மை
அடைவார்கள் என்பது தான் எமது விருப்பமாகும். முஸ்லிம்கள் தேவனின்
இராஜ்ஜியத்தின் குடிமக்களாக மாறவேண்டும், தேவனின் அன்பையும்
பாதுகாப்பையும் இவ்வுலகத்தில் இருக்கும் போதே பெற்றுக்கொள்ளவேண்டும்.
முஸ்லிம்கள் உண்மை தெய்வத்திடம் வருவதற்கு தடையாக இருப்பது "பவுலடியார்
பற்றி முஸ்லிம் அறிஞர்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டமாகும்" எனவே,
இந்த தவறான கண்ணோட்டத்தை தகர்த்தெறிவது தான் இந்த புத்தகத்தின் நோக்கம்.

புதிய ஏற்பாட்டில் காணப்படும் பவுலடியாரின் கடிதங்கள் / புத்தகங்கள்:

1) ரோமர்

2) 1 கொரிந்தியர்

3) 2 கொரிந்தியர்

4) கலாத்தியர்

5) எபேசியர்

6) பிலிப்பியர்

7) கொலோசெயர்

8) 1 தெசலோனிக்கேயர்

9) 2 தெசலோனிக்கேயர்

10) 1 தீமோத்தேயு

11) 2 தீமோத்தேயு

12) தீத்து

13) பிலேமோன்

14) அப்போஸ்தலருடைய நடபடிகள் (இந்த புத்தகத்தை பவுலடியார் எழுதவில்லை,
ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் இதில் உள்ளதால், இந்த பட்டியலோடு
இணைத்துள்ளோம்).

குறிப்பு: பி ஜைனுல் ஆபிதீன் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இன்னும் ஒரு படி
மேலே சென்று, மேற்கண்ட கடிதங்கள் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில் உள்ள
அனைத்து புத்தகங்களிலும் பவுலடியாரின் தவறான போதனைகள் உள்ளது என்றுச்
சொல்கிறார்கள். முதலாவது பவுலின் கையெழுத்துள்ள மேற்கண்ட
புத்தகங்களிலிருந்து விவரங்களைக் காண்போம், அதன் பிறகு இதர புதிய
ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து குர்-ஆனை உரசிப்பார்ப்போம். இப்படி
செய்யும் போது தான், எது சுத்த தங்கம், எது இரும்பு என்பது தெளிவாக
விளங்கும்.

அத்தியாயம் 1 ஐ படிக்கவும்

இப்புத்தகத்தின் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/paul_and_islam/introduction.html




--
Source : http://isakoran.blogspot.in/

April 4, 2015

பாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்

பாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்

(கற்பனை நாடகம் : முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு,
யோவான், லூக்கா மற்றும் பவுல்)

இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில்
நடிக்கிறார்கள். ஒரு முஸ்லிம் அரசர் ஆட்சி செய்யும் நாட்டில், அவரது அரச
சபையில் இந்த நாடகம் நடக்கிறது. முஹம்மதுவின் காலத்திற்கு பின்பு அவரது
தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை "கலிஃபா" என்று
அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த
உரையாடல் நடப்பதாக நாம் கற்பனை செய்துள்ளோம். இயேசுவின் சீடர்கள்
அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இஸ்லாமிய ஆட்சி
நடக்கும் அந்த நாட்டில் இயேசுவின் சீடர்களாகிய பேதுரு, யோவான், லூக்கா
மற்றும் பவுலடியார் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்பட்டு, காவலில்
வைக்கப்பட்டார்கள். இந்த நாடகம் கற்பனைத் தான் ஆனால், அரசருக்கும்,
இயேசுவின் சீடருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்களில், குர்-ஆன்
மற்றும் பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டி பேசப்படுகின்றது. முஸ்லிம்கள்
சத்தியத்தை அறியவேண்டும், மெய்யான வழியை பின்பற்றவேண்டும் என்பதற்காக
இந்த தொடர் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன.

அந்த இஸ்லாமிய அரசர் முதலாவது பேதுருவை அழைத்து பேசுகிறார், அதனை முதல்
பாகத்தில் இங்கு சொடுக்கி படிக்கவும்.

பாகம் 2

[இஸ்லாமிய அரச சபைக்கு அப்போஸ்தலர் பவுல் கொண்டு வரப்படுகின்றார்.
பவுலடியாரிடம் இஸ்லாமிய அரசர் கேள்விகளை தொடுக்கிறார், இவர்கள் மத்தியிலே
நடைப்பெற்ற சூடான உரையாடலை படியுங்கள்.]

அரசர்: பவுல் அவர்களே, உம்மை இஸ்லாமிய அரச சபைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.

பவுல்: அரசர் வாழ்க, என்னை அன்புடன் வரவேற்றதற்காக நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அரசருக்கு ஒரு கேள்வி: "எங்களை கைது
செய்து, சிறைச்சாலையில் அடைத்து, குற்றவாளிகளை நடத்துவதைப் போல
நடத்திவிட்டு, இப்போது அரச சபைக்கு அன்புடன் வரவேற்கிறேன் என்றுச்
சொல்வது ஏற்புடையதாக இருக்கின்றதா அரசே?".

அரசர்: ம்ம்ம். . . உங்களுக்கு கொஞ்சம் வாய் நீளம் என்று
கேள்விப்பட்டுள்ளேன், அது உண்மை என்பதை இப்போது அறிந்துக் கொண்டேன்.

பவுல்: உங்கள் மனது புண்படுத்தப்பட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும்.
ஆனால், "இஸ்லாம் ஆட்சி செய்யும் நாட்டில் சொல்லப்படும்
வார்த்தைகளுக்கும், செய்யப்படும் செயல்களுக்கும்" இடையே மிகப்பெரிய
வித்தியாசம் இருப்பதினால் தான் நான் கேள்வி கேட்டேன். என்னை எதற்காக
அழைத்தீர்கள் என்பதை நான் அறிந்துக்கொள்ளலாமா?

அரசர்: நேற்று நான் பேதுருவிடம் பேசினேன். உங்களிடம் கூட சில
கேள்விகளைக் கேட்கலாம் என்று எண்ணி இன்று உங்களை அழைத்தேன்.

பவுல்: ஒரு இஸ்லாமிய அரசருக்கு முன்பாக இயேசுவின் நற்செய்தியைக் குறித்து
பேச எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக, நான் கர்த்தரை துதிக்கிறேன். என்னை
அழைத்த உங்களுக்கும் என் நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசர்: நீங்கள் நான்கு பேரும் என் நாட்டில் அதாவது இஸ்லாமிய ஆட்சி
நடக்கும் நாட்டில் எதற்காக வந்தீர்கள்?

பவுல்: உலக இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை உங்களுடைய
நாட்டில் வாழும் மக்களுக்குச் சொல்ல நாங்கள் வந்தோம்.

அரசர்: எங்கள் இஸ்லாமிய நாட்டில் உங்கள் நற்செய்தியைச் சொல்ல உங்களுக்கு
அதிகாரம் கொடுத்தது யார்?

பவுல்: இயேசு எங்களுக்கு கட்டளை கொடுத்துள்ளார். அவரது கட்டளையின் பேரில்
நாங்கள் உலகமெங்கும் அவரது நற்செய்தியை பரப்பிக்கொண்டு இருக்கிறோம்.

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல
ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே
அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்
அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின்
முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று
இயேசு கட்டளையிட்டுள்ளார் (மத்தேயு 28: 18-20).

அரசர்: பவுல் அவர்களே, உங்களிடம் இயேசு அந்த கட்டளையைக் கொடுத்தாரா?
நீங்கள் அவரை பார்த்தீர்களா? இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராக நீங்கள்
இருந்தீர்களா? எனக்கு தெரிந்த வரை நீங்கள் இயேசுவை சந்திக்கவே இல்லை
என்பது தானே உண்மை.

பவுல்: அரசே, நான் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவனல்ல. ஆனால் நான் இயேசுவை
சந்தித்து இருக்கிறேன். இயேசுவின் சீடர்களையும் நான் சந்தித்து
இருக்கிறேன், அவரது தாயாரையும் சந்தித்து பேசும் பாக்கியத்தையும் நான்
பெற்றுள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எப்படி இயேசுவை சந்தித்தேன் என்பதை உங்களுக்கு விவரிக்கிறேன்.
ஆரம்பத்தில் நான் இந்த கிறிஸ்தவ மார்க்கத்தாரை வெறுத்தேன்.

நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி,
சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். . . .
நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும்
தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி
அவ்விடத்திற்குப் போனேன். அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச்
சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி
உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன்.
அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று
என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற
நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனேகூட இருந்தவர்கள்
வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ
அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும்
என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ
செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார். அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப் போனபடியினால்,
என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு
வந்தேன்.

அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற
சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்;
அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அப்பொழுது
அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும்,
நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர்
உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும்
குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்
என்றான். [அப்போஸ்தலர் 22:4-15]

இப்படித்தான் நான் இயேசுவை சந்தித்தேன்.

அரசர்: அருமையான கற்பனை! பவுலடியாரே உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகம்
என்பதை நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சொல்லும் இந்த கற்பனைக் கதையை
நான் எப்படி நம்புவது? நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர் என்பதற்கு என்ன
ஆதாரம்?

[அரசர் சரியான கேள்வியை கேட்டுவிட்டார் என்றுச் சொல்லி, அந்த
சபையிலிருந்த மக்கள் எல்லோரும் தலையை அசைத்து, தங்கள் மகிழ்ச்சியை
தெரிவித்துக் கொள்கிறார்கள்]

பவுல்: அரசே! நானும் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், கோபப்படாமல்
பதில் சொல்லுங்கள்.

அரசர்: நான் கோபம் கொள்ளமாட்டேன், நீங்கள் எந்த கேள்வியையானாலும் கேட்கலாம்.

பவுல்: முஹம்மது யார்?

அரசர்: அவர் இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசி ஆவார்.

பவுல்: உங்களுக்கு எப்படித் தெரியும்?

அரசர்: அவரே எங்களுக்குச் சொன்னார். முஹம்மது (ஸல்) அவர்கள் ஹிரா
குகையில் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, (ஒருநாள்) ஒரு
வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத்
தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். "அவர்
என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு
என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத்
தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து
நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு
மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே!
என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி
அணைத்துவிட்டுவிட்டு, 'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால்
ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து
படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." . . .
(ஸஹீஹ் புகாரி எண் 3).

ஜிப்ராயீல் தூதனை மேற்கண்ட விதமாக எங்கள் இறைத்தூதர் சந்தித்தார்,
அப்போது தான் அவர் குர்-ஆனின் முதல் வசனத்தைப் பெற்றார்.

பவுல்: முஹம்மது அவர்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?

அரசர்: ஆம், நிச்சயமாக நம்புகிறேன்.

பவுல்: அரசே! முஹம்மது அவர்கள் சொன்ன இந்த கதையை நீங்கள் எப்படி
நம்புகிறீர்கள்? முஹம்மது அவர்கள் சொல்வது ஒரு கற்பனைக் கதையாகக் கூட
இருக்கலாம் அல்லவா? அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என்பதற்கு என்ன
ஆதாரம்?

அரசர்: இல்லை இல்லை, அவர் சொன்னது உண்மை தான்.

பவுல்: அதைத் தான் நான் கேட்கிறேன், அவர் சொன்னது உண்மைத் தான் என்பதை
எப்படி நாம் கண்டுபிடிப்பது? இயேசு என்னை சந்தித்தார் என்பதை நம்ப
மறுக்கும் நீங்கள், எப்படி முஹம்மது சொன்னதை மட்டும் நம்புகிறீர்கள்?

ஒரு முறை நான் இயேசுவை சந்தித்ததை நம்ப மறுக்கும் நீங்கள், 100க்கும்
அதிகமான முறை காபிரியேல் தூதன் வந்து முஹம்மதுவிற்கு வசனங்களை கொடுத்தார்
என்பதை மட்டும் எப்படி நம்புகிறீர்கள்? இது இரட்டை வேடம்
போடுவதாகுமல்லவா?

அரசர்: அவர் இறைத்தூதர், ஆகையால் அவரை நாங்கள் நம்புகிறோம்.

பவுல்: அவர் இறைத்தூதர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் பொய்
கூட சொல்லியிருக்கலாம் அல்லவா?

அரசர்: எங்கள் இறைவேதம் குர்-ஆன் தான் "அவரை இறைத்தூதர்" என்றுச்
சொல்கிறது, இது போதாதா நாம் நம்புவதற்கு?

பவுல்: குர்-ஆன் இறைவேதம் என்று யார் சொன்னார்கள்? தான் சொன்ன வசனங்கள்
இறைவன் கொடுத்த வசனங்கள் என்று யார் சொன்னார்கள்?

அரசர்: எங்கள் முஹம்மது (ஸல்) தான் சொன்னார்.

பவுல்: குர்-ஆனுக்கு முஹம்மது சாட்சி, முஹம்மதுவிற்கு குர்-ஆன் சாட்சி.
இது எப்படி உண்மையாக இருக்கும்? மெய்யான இறைவன் தான் குர்-ஆனை கொடுத்தார்
என்றும், அதே இறைவனுடைய தீர்க்கதரிசி தான் முஹம்மது என்பதற்கு ஏதாவது
ஆதாரங்களை அல்லாஹ் கொடுத்துள்ளாரா? முந்தைய தீர்க்கதரிசிகள் போல
முஹம்மது ஏதாவது அற்புதங்கள் செய்தாரா?

அரசர்: குர்-ஆன் தான் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதம்.

இயேசு உங்களை சந்தித்ததைப் பற்றி கேட்டால், காபிரியேல் தூதன் முஹம்மதுவை
சந்தித்தது பற்றி கேள்வி கேட்பது சரியில்லையே!

பவுல்: இவ்விரண்டும் வெவ்வேறானவை அல்லவே! காபிரியேல் தூதன் முஹம்மதுவை
100 முறைக்கும் அதிகமாக சந்திக்க முடியுமானால்! இயேசு ஏன் என்னை ஒரு முறை
சந்திக்க முடியாது?

இயேசு என்னை சந்தித்தது உண்மை, தம்முடைய சீடனாக என்னை மாற்றிக் கொண்டது
உண்மை, அவருடைய நற்செய்தியை சுமந்துச் செல்லும் அப்போஸ்தலனாக மாற்றியது
உண்மை. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?

அரசர்: நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள்! நடக்க முடியாத நிகழ்ச்சி நடந்ததாக
சொல்கிறீர்கள்? இது அசாத்தியம்.

பவுல்: உங்கள் முஹம்மதுவும் நடக்க முடியாத நிகழ்ச்சிகள் நடந்ததாக, 23
ஆண்டுகள் சொல்லிக்கொண்டு இருந்தார், அவர் சொல்வதையெல்லாம் உண்மையென்றுச்
சொல்லி, அனேகர் நம்பினார்கள். ஒரு முறையாவது, "முஹம்மது சொன்னது பொய்யாக
இருந்திருந்தால் என்னவாகும்?" என்ற கேள்வியை நீங்கள் உங்களுக்குள்
கேட்டுக்கொண்டதுண்டா? ஒரு வேளை காபிரியேல் தூதன் அல்லாமல், வேறு ஒரு
தீய சக்தி முஹம்மதுவை சந்தித்து இருந்திருக்கலாம் அல்லவா?

[அரச சபையில் இருந்த மக்கள், எழுந்து நின்று "நிறுத்து, நிறுத்து" என்று
சத்தமிட்டனர், அரசரின் முகம் சிவந்துவிட்டது, கண்களில் கோபம் தென்பட்டது,
அவர் தன் கைகளை அசைத்து அமருங்கள் என்று சைகை காட்டினார். சில நொடிகளில்
அரச சபை அமைதியாயிற்று]

அரசர்: எங்கள் சபையில் வந்து எங்கள் இறைத்தூதர் பற்றி பேச உங்களுக்கு பயமில்லையா?

பவுல்: அரசே! உண்மை பேசுபவன் ஏன் பயப்படவேண்டும்?

அரசர்: உங்களுக்கு திமிரு அதிகம் என்று நினைக்கிறேன்.

பவுல்: ஆம், இயேசு மீது நான் வைத்திருக்கும் என் பக்திக்கு கொஞ்சம்
திமிரு அதிகம் தான்.

அரசர்: உங்களுக்கு, அதிக படிப்பு பைத்தியமாக்கியுள்ளது பவுலடியாரே!

பவுல்: உங்களின் அறியாமை, உங்களை ஏமாற்றிவிட்டது அரசரே!

[அரசருக்கு மறுபடியும் கோபம் வருகிறது… ஆனால் அதை கட்டுப்படுத்திக்
கொண்டு தொடர்கிறார்]

அரசர்: நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உங்களை இப்போதே கொடுமையாக
தண்டிக்கமுடியும், கொல்லவும் முடியும்?

பவுல்: அரசே, கொலை செய்வதைத் தவிர உங்களால் வேறு எதைத் தான் செய்யமுடியும்?

சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத்
திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப்
பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு
நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே
பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு சொல்லியுள்ளார்.
(லூக்கா 12:4,5)

எனவே, கிறிஸ்தவர்களை பயப்படை வைத்து ஏதாவது சாதித்து விடலாம் என்று
மனப்பால் குடிக்காதீர்கள் அரசரே! கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு
ஆதாயம் (பிலிப்பியர் 1:21)

அரசர்: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பைத் தருகிறேன், ஒரு சிறப்பான
நன்மையை உங்களுக்குத் தருகிறேன், அதை ஏற்றுக்கொண்டால் பிழைப்பீர்கள், அதை
ஏற்றுக்கொள்ள மறுத்தால், மரணம் நிச்சயம் என்பதை மட்டும் அறிந்துக்
கொள்ளுங்கள்.

என் பேச்சைக் கேட்டு, நீங்கள் ஒரு முஸ்லிமாக மாறினால், உங்களுக்கு ஒரு
உயர்ந்த பதவியை என் அரச சபையில் தருவேன். மேலும் உங்களுக்கு பிடித்தமான
நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம், நல்ல அழகான குடும்பத்தை
அமைத்துக் கொள்ளலாம். இந்த நாட்டில் பணம் பதவி அதிகாரத்தோடு வாழலாம்.
உங்கள் முடிவை இப்போது சொல்லவேண்டாம், உங்கள் நண்பர்களோடு பேசி முடிவு
எடுங்கள்.

பவுல்: இதைப் பற்றியெல்லாம் முடிவு எடுக்க அவகாசம் தேவையில்லை இஸ்லாமிய
நாட்டு அரசரே. இயேசுவின் அன்பை விட்டு எங்களை பிரிக்க நீங்கள் எடுத்த
முயற்சி தோல்வி அடையும்.

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ,
வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்
கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும்,
தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும்,
நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும்,
தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து
இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று
நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:36-39).

உங்கள் இறைத்தூதர் உயிரோடு இருந்த காலத்தில், உயிருக்கு பயந்து
முஸ்லிம்களானவர்கள் உண்டு, பண ஆசையினாலும், பதவி ஆசையினாலும்
முஸ்லிம்களானவர்களும் உண்டு, அப்படியே கிறிஸ்தவர்களும் இருப்பார்கள்
என்று நீங்கள் நினைப்பது தவறு.

உங்கள் இஸ்லாமை விட்டுவிட்டு, உண்மை மார்க்கத்தை பின் பற்றும் படி உங்களை
அழைக்கிறேன். முந்தைய தீர்க்கதரிசிகளின் வழியில் நடக்க வாருங்கள் என்று
உங்களை அழைக்கிறேன். முந்தைய வேதங்களின் வழியில் நடக்க வாருங்கள் என்று
உங்களை அழைக்கிறேன். கொலைகள், வன்முறைகள் போன்றவற்றை விட்டுவிட்டு,
அன்புடன் வாழ உங்களை அழைக்கிறேன்.

அரசர்: நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்... என் பொறுமைக்கும் ஒரு
எல்லையுண்டு, இப்போதே என்னை கிறிஸ்தவனாக மாற்றி, இங்கேயே எனக்கு
ஞானஸ்நானம் கொடுத்துவிடுவீங்க போல இருக்கே!

பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும்,
கொஞ்சங்குறைய மாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்
போலாகும்படி தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன் அரசரே (அப்போஸ்தலர் 26:29)

[அரசரின் கோபம்… உச்சக் கட்டத்தை அடைகிறது… ]

அரசர்: யாரங்கே! உடனே… இவரை அழைத்துச் செல்லுங்கள்… நாம் மறுபடியும்
சொல்லும் வரை இவர்களை என் முன்னே கொண்டு வராதீர்கள்….

[மயான அமைதி அரச சபையை சூழ்கிறது. அரசர் பவுலடியாரை கண்சிமிட்டாமல்
பார்த்துக்கொண்டு இருக்கிறார். காவலாளிகள் பவுலடியாரை மறுபடியும்
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். சிறைச்சாலையில் பேதுரு, யோவான்
மற்றும் லூக்கா ஜெபித்துக்கொண்டு இருக்கிறார்கள். பவுலடியாரைக்
கண்டதும், என்ன நடந்தது என்று விசாரித்தார்கள், பவுலடியாரும் நடந்ததைச்
சொல்கிறார். அனைவரும் முழங்கால் படியிட்டு, தங்கள் கைகளை வானத்துக்கு
நேராக நீட்டி, ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள்…..]

அடுத்த பகுதியில், இந்த இஸ்லாமிய அரசர், இயேசுவின் அன்பான சீடனாகிய
யோவானை அழைத்துப் பேசுகிறார்….

"முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள்" கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/disciples_at_islamic_court/paul_at_islamic_court.html



Source : http://isakoran.blogspot.in/