அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 6, 2008

இவருக்கு கையும் இல்லை காலும் இல்லை ஆனாலும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.!!!! ஆனா எல்லா இருக்கிற நமக்கு????????????




இந்த படங்களைக் கவனியுங்கள். இந்த மனிதனுக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இடுப்புக்கு கீழ் பிறக்கும்போது இல்லை. ஒரு பலகையை வட்டமாக வெட்டி எடுத்து அதற்குள் அவனை சொருகிவைத்தால்தான் கீழே சாயாமல் பொம்மைப்போல் இருக்க முடியும். உரல் போன்ற ஒரு விசேஷ ஆசனத்தில்தான் இப்போது இவர் உட்கார வைக்கப்படுகிறார். எங்காவது போகவேண்டுமானால் அதே மாதிரியான ஓட்டை வடிவமைத்த பலகை உள்ள வாகனத்தில் சொருகி நான்கு பேர் உதவியாளர்கள் வண்டியை தள்ளிக்கொண்டு போகவேண்டும். காரில் சென்றாலும் இந்த நான்கு பேர் கூடச் செல்வது மிக அவசியம். அவரை தூக்கிச் சுமந்து செல்லவும் அமர வைக்கவும் நான்கு பேர்களின் உதவி இல்லாமல் முடியாது.

இவர் பெயர் Mr.NICK VUJICIC என்பது. ஆஸ்ட்ரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரில் 1982ல் பிறந்தவர். இவர் பெற்றோர் இவனைப் பெற்று இவன் உடல் கண்டவுடன் மிகவும் நொந்து போனார்கள். இவனைத் தாங்கள் வீட்டில் வைத்துப் பராமரிக்க இயலாது என்று தனியார் உதவி சங்கம் மூலம் இவரை பராமரிக்க நான்கு பேர்களை ஏற்பாடு செய்தார்கள். இவன் வாழ்வது ஆஸ்ட்ரோலியா நாடு ஆனபடியால் அரசாங்கமும் இவன் பராமரிப்புக்கு உதவி செய்தது.

நிக் வளர்ந்து வாலிபனாகியபோது தன் எதிர்காலத்தைக் குறித்து யோசித்து மிகவும் சோர்ந்து போனான். மற்றவர்களுக்கு தான் ஒரு பாரமாக இருப்பதை உணர்ந்தான். ஒவ்வொரு சின்ன காரியத்துக்கும் மற்றவர் உதவியில்லாமல் ஒன்றும் செய்ய முடியாத தன் நிலையைக் கண்டு வாழ்க்கையில் வெறுப்புற்றான். தன் நண்பர்களிடம் தற்கொலை செய்து கொள்ள உதவி செய்யும்படி மன்றாடினான் யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை.

அவன் சொல்கிறான்: ஒருநாள் தனக்கு மிக அருகே உள்ள தூக்க மாத்திரைப் பாட்டிலில் உள்ள மாத்திரைகளை அனைத்தையும் விழுங்கி தற்கொலை செய்ய எண்ணினேன். தன் படுத்திருக்கும் நிலையில் தன் உடலின் மிக அருகில் உள்ள மாத்திரையைக்கூட எடுக்க கைகள் இல்லை, கால்கொண்டு எடுக்க ஆசைப்பட்டாலும் கால்கள் இரண்டும் இல்லை. வாய்கொண்டு எடுக்கலாம் ஆனால் மூடியைத் திருகி எடுக்கவோ மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்ளவோ முடியாத அந்த நிலையில் அந்த விஷ பாட்டிலை விடிய விடிய பார்த்தவாரே பெருமூச்சு விட்டு கண்ணீர் விட்டு அழுதான். சாவதற்கு சகல உபகரணங்களும், விஷ மாத்திரைகளும் உடலின் மிக அருகேயிருந்தும் தன்னால் சாகவும் முடியவில்லை, வாழவும் முடியவில்லை. இது ஏன்?

அவன் ஞாயிறுபள்ளிக்கு (Sunday School) சென்றபோதுதான் இயேசு தன்னையும் நேசிக்கிறார் என்று போதிக்கப்பட்டான். யோவான் 9-ஆம் அதிகாரம் தான் அவனை இயேசுவிடம் மனம் திரும்பவைத்தது. வெறுப்பு-சந்தோஷமாக மாற்றியதும் அந்த அதிகாரம் மூலமாகதான் என்கிறான். அப்போதெல்லாம் அவனை ஆறுதல் படுத்தியது கர்த்தரின் வேதவசனம். காலண்டரிலும், சுவரிலும் எழுதப்பட்ட வசனம் அவனை இயேசுவுக்கு நேராக வழி நடத்தியது. தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டான். டி.வியில் ஊனமுற்ற பலரையும் அவர்கள் பல சாகசங்களை செய்வதையும் கண்டான். கைகள் இல்லாத ஒருவன் கால்களாலேயே படம் வரைவதையும், கால்களில் கரண்டியை பிடித்து சாப்பிடுவதையும் கண்டான். ஆனால் தனக்கோ அந்த மாதிரியாக இரண்டு கால்களோ-கால்களுக்கு பதில் இரண்டு கைகளோ! இரண்டு கைகள்கூட வேண்டாம். ஒரே ஒரு கை இருந்தால்கூட போதும். பலவிதங்களில் தன்னைத்தான் கவனித்துக்கொள்ள முடியுமே!

அந்த நிலையில் அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான். கர்த்தர் நல்லவர். தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர் என்பதையும், அப்படிப்பட்ட தேவன் ஒரு நோக்கமில்லாமல் தான் இப்படிப்பட்ட நிலையில் பிறக்க அனுமதித்து இருக்கமாட்டார் என்பதை உறுதியாக நம்பினான். ஆகவே கர்த்தாவே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? என்று கேட்டு ஜெபித்தான். பள்ளிப்படிப்பை முடிக்க அரசாங்க சட்டம் அனுமதிக்கவில்லை? பல போராட்டத்துக்குபின் அனுமதி பெற்றுப் படித்தான். தனக்குமுன் புத்தகம் ஸ்டான்டில் வைக்க அதை புரட்ட ஒரு ஆள் உதவுவான். இப்படியாக படித்து பரிட்சை எழுதும்போது அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் இவனுக்கென இவன் எழுதும் பரீட்ச்சையை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப் பட்டார். கேள்வி பேப்பரில் உள்ள கேள்விகளுக்கு இவன் சொல்லச் சொல்ல எழுதி உதவி செய்ய ஒரு ஆள் நியமிக்கப்பட்டார். இப்படியாக படித்து கல்லூரிப் படிப்பையும் முடித்தான். ஆனால் இனி அவனால் வேலை ஏதும் செய்ய முடியாது. ஆகவே ஆறுதல் அற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் சிறு ஊழியம் மேற்கொண்டான். 4 ரோடுகள் சந்திக்கும் முக்கியத் தெருமுனைகளில் இவனுக்கென்று விசேஷமாக செய்யப்பட்ட டேபிள் போடப்படும் அந்த டேபிளில் உள்ள குழியில் இவன் சொருகி வைக்கப்படுவான். பாட்டுப் பாட ஆட்கள் கூடும்.

அவனின் சுவிசேஷ ஊழியத்தில் அவன் உபயோகிக்கும் முக்கிய வாசகம் இதுதான். எனக்கு கைகள் இல்லை, எனக்கு கால்கள் இல்லை, எனக்கு கவலையும் இல்லை. இப்படி ஆரம்பித்து இயேசு இந்த சூழ்நிலையிலும் எனக்கு போதுமானவராக என் கவலையை நீக்குகிறவராக இருக்கிறார்.

என்னை எப்போதும் சந்தோஷம் உள்ளவனாக வாழவைக்கிறார். வாழ்க்கையில் இதுபோதுமே! எல்லாம் இருந்தும் சமாதானம் இல்லாதவர்கள் என்னைக் கவனியுங்கள் என்பான். எனக்குள் இருக்கும் சமாதானத்தை கவனியுங்கள் என்பான். அந்த சமாதானம் உலகம் தராதது. அது இயேசு கிறிஸ்துவால் மட்டுமே தரவல்ல சமாதானமாகும். அது உங்களுக்கும் வேண்டுமானால் இயேசுவிடம் வாருங்கள். அவர் வழி சிலுவை வழி. இடுக்கமான வழி. ஆனால் சந்தோஷம், சமாதானம், மனநிம்மதி யாவும் உள்ள வழியாகும் என்று கூறி தன் பிரசங்கத்தை முடித்து எல்லாருக்காகவும் ஜெபிப்பானாம்.

கடைசியாக கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலையும் இல்லை பிரைஸ் த லார்ட் என்று துதித்து முடிப்பானாம்.

இப்படிப்பட்ட வெறும் முண்டமாக உள்ள என்னையும் திருமணம் செய்து என்னை சந்தோஷப்படுத்த எனக்கு வாழ்க்கை கொடுக்க சில பெண்கள் முன் வந்தார்களாம். அவனோ மறுத்துவிட்டான். அதன் ஒரு காரணம் அப்படி திருமணம் புரிந்து குழந்தை பிறந்தால் அந்த குழந்தையும் என்னைப்போல் முண்டமாக பிறந்துவிட்டால்! போதும் இப்படிப்பட்ட பிறப்பு இது என்னோடு முடியட்டும். எனக்கு சரீர சந்தோஷத்தைவிட கிறிஸ்துவுக்குள் வாழும் சந்தோஷமே உன்னதமான அதன் இனிமை வேறெதிலும் இல்லை என்கிறான்.

இதை வாசிக்கும் அருமையான வாசகர்களே! நம்மில் எத்தனை பேர் இவரைப்போல் விசுவாசத்தில் நிலைக்க முடியும்.

ஒரு கல்லூரி மாணவி தன் நிறம் கருப்பாக இருக்கிறது என்று மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் தற்கொலை செய்து கொள்ளாமலே தன் நிறத்தையும், தன் அழகையும் குறித்து குறைப்பட்டு மனதிற்குள் சந்தோஷமில்லாமல் இருப்பவர்கள் எத்தனைப்பேர்.

தேவன் அவரவர்களுக்கு ஏற்ற நிறத்தையும், அழகையும் இயற்கையாக அளித்துள்ளார். மற்றவர்களோடு ஒப்பிடாமல் தன்னை மட்டும் புரிந்து கொண்டால் தான் அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அனைவரும் நிறத்தில் எப்படி என்றும், தலைமுடி எப்படி என்றும் நம் எல்லாருக்கும் அறிந்ததே. நிறம்-மிக மிக கருப்பு. தலைமுடி ஸ்பிரிங் போல் சுருண்டு இருக்கும். அதை நீளப்படுத்த எந்த விஞ்ஞான கலவையாலும் இதுவரை முடியவில்லை. அதை அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சாபம் போன்று கருதுகிறார்கள். ஆனால் அந்த நாட்டில் உள்ள எல்லாரும் அப்படி நினைப்பதில்லை. நமக்கு அவர்களின் அகன்ற உதடுகள், அளவுக்கு மீறிய உடல் பருமன் இவைகள் அவலட்சணமாகத் தோன்றும். ஆனால் அவர்களுக்கோ அது பெருமை. தங்கள் நிறத்தைப் பற்றியும், தலைமுடி பற்றியும் பெருமையாய் எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம். அதை வாசிக்கும் போதே தங்கள் நிறம் தங்கள் கோர உருவம் ஆகியவைகளை அவர்கள் அசிங்கமாக நினைப்பதில்லை. பெருமைகொள்கிறார்கள். இது தேவசிருஷ்டிப்பில் ஒருவகையாகும். ஆகவேதான் உன்னத பாட்டு புத்தகத்தில் ஆவியானவரே எழுதுகிறார். நீ கருப்பாய் இருந்தாலும் அழகாய் இருக்கிறாய், ஆம். கர்த்தரின் பார்வையில் நீ அழகுதான். அதனால்தான் தமிழ் மொழியில் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கூறப்படுகிறது. உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். கர்த்தர் உங்களை தன்கென்று தன் இஷ்டப்படி உன்னை குயவனைப்போல் அழகாய் வனைந்திருக்கிறார். ஏன் என்னை இப்படி வனைந்தாய் என்று குயவனைப் பார்த்து கேட்க மண்ணுக்கு என்ன அதிகாரம் உண்டு? எத்தியோப்பியன் தன் தோலை மாற்ற முடியுமா? என்று இயேசு கேட்கிறார்? அதன் அர்த்தம் அந்த நிறத்தை மாற்ற முயல்வதே என்பதாகும்.

கர்த்தரின் சிருஷ்டிப்பில் பல விதங்கள் உண்டு. அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் ஒரு திடட்டமும் உண்டு. அந்தந்த தேசத்து ஜனங்களுக்கு அங்குள்ளவர்கள் அழகாய் காணப்படுகிறார்கள். அந்த நிறத்தையும் அந்த சப்பை மூக்கையும் அல்லது நீளமூக்கையும் ரசிக்கிறார்கள். விரும்புகிறார்கள்.

இரண்டு கால்களை இழந்தவர்கள் உண்டு, ஒரு கண்ணை மட்டும் இழந்தவர்கள் உண்டு, ஒரு கால், ஒரு கை, தீ புண் ஏற்பட்டு முகம் கழுத்து விகாரப்பட்டவர்கள் உண்டு. இவர்கள் எல்லாருக்கும் கர்த்தர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். இவர்களை மற்றவர்கள் பார்வைக்காக, மற்றவர்களை உணர்த்த, திருத்த இவர்களைப் பார்க்கிறவர்கள் தன்னையும் ஒப்பிட்டு தேவனை துதிக்க வைக்கிறார். அதே சமயம் அவர்கள் வாழ்க்கையைக் குறித்து தேவன் வேறு திட்டத்தையும் வைத்திருப்பார். அது என்ன? என்று நமக்குத் தெரியாது.

அவர் மனபூர்வமாய் மனுபுத்திரரை சிறுமையாக்கிச் சஞ்சலப் படுத்துகிறதில்லை. புல 3:33.

ஆகவே இதை வாசிக்கிறவர்கள் குழந்தை இல்லையே என்று சோர்ந்து போகவேண்டாம். எனக்கு வாழ்க்கை அமையவில்லையே என்று சோர்ந்து போகவேண்டாம். நான் இன்னும் ஏழ்மையிலேயே இருக்கிறேனே என்றும் சலித்துக் கொள்ளவேண்டாம். தேவன் அறியாமல் உன் வாழ்க்கையில் எதுவும் சம்பவிக்கவில்லை.

. தேவனுக்கு இதிலும் ஒரு நோக்கம் இருக்கும். டோனாவூர் ஸ்தாபகர்.எமிகார்மைக்கல் என்ற மிஷனரி முதுகு எலும்பு முறிந்து 20 வருடம் படுக்கையில் இருந்தார். தன்னை எடுத்துக் கொள்ளும் நான் இங்குள்ளவர்களுக்கு பாரமாக இருக்கிறேன். இனி என்னால் ஊழியம் செய்ய முடியாது. ஆகவே என்னை எடுத்துக் கொள்ளும் கர்த்தாவே என்றார். ஆனால் கர்த்தரோ மகள் உன் இடுப்பு எலும்பு முறிந்தபோதே வலியால் துடித்தாயே அப்போதே உன்னை எடுத்துக் கொண்டிருப்பேன். நீ இந்த நிலையில் இருப்பது ஒரு நோக்கம் உண்டு. என் படுக்கை நிலையும் உன் புன்சிரிப்பும் படுக்கையிலிருந்து கொண்டே என்னைப் பற்றி சுவிசேஷம் அறிவித்ததின் மூலம் எத்தனை ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். எத்தனைப்பேர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள் தெரியுமா? என்றார்.

வாழ்க்கை வாழ்வதற்கே! வேதத்தில் வயது முதிர்ந்த நிலையில் வியாதியுடன் படுத்த படுக்கையில் உள்ள எமி கார்மைக்கல் போன்ற பக்தர்கள் பலரை பார்க்கிறோமே! தேவன் அவர்களை எடுக்கவில்லை.

இயேசு கூறுகிறார். தன்னை நம்பி வாழ்ந்தவர்கள் உலகத்தால் பகைப்பட்டு வேதனைகளை அனுபவிக்கும்போது அந்த வேதனைகளை அல்லது பிரச்சனைகள் நீங்கிப் போகவும், உலகத்திலிருந்து விடுபட்டு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளவும் பிதாவிடம் வேண்டிக்கொள்ளவில்லையாம். யோ 17:15. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களை தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

பிரச்சனையுள்ள உலகத்தில் ஊனமுற்று, தோல்வியுற்று சோர்ந்து போகும் வேளையில் இவ்வுலகத்தில் வாழ்வதைவிட சாவதேமேல் என்று பலர் நினைக்கிறோம். நாம் கஷ்டப்படுவது அவமானப்படுவது தேவனுக்கு புரிகிறது. ஆனால் பிதாவிடம் இயேசு வேண்டிக்கொள்வதென்ன? என் பிள்ளைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆகவே இந்த வேதனையிலிருந்து அவமானத்திலிருந்து மரணத்தின் மூலம் எடுத்துக் கொள்ளும் என்று ஜெபிக்க இயேசுவுக்குப் பிரியமில்லை. அந்த சூழ்நிலையிலேயே நாம் வாழ்ந்து ஜீவிப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

இயற்கையின் விதிகளை இரட்சிக்கப்பட்டவர்களானாலும், ஊழியர்களானாலும், விசுவாசிகளானாலும் சந்தித்துதான் ஆகவேண்டும். அதை தவிர்க்க முடியாது. சில சமயங்களில் நான் கூட நினைத்ததுண்டு. என் தாயார் 94ம் வயதில் படுக்கையில் சுயநினைவு இன்றி, மற்றவர்களால் குளிப்பாட்டப்பட்டு, உடுத்தப்பட்டு இருந்த நிலையில், கர்த்தாவே இப்படிப்பட்ட என் அம்மா நிலைபோல் என் கடைசிக் காலம் இருக்கக்கூடாது. என் வீட்டிலாவது 94 வயதிலும் என் தாயாரை ஒரு குறையும் இல்லாமல், நாற்றம் உண்டாக விடாமல் மிக சுத்தமாக என் அம்மாவை கவனித்துக் கொண்டோம். ஆனால் எல்லா மருமகளும் இப்படி கவனிப்பார்களா?

இங்கே நீங்கள் கண்ட ஆஸ்ட்ரோலியா வாலிபன் நிக் என்பவனின் நிலை பாருங்கள். மிகப் பரிதாபம். ஆனால் கர்த்தருக்குள் தான் அனுபவிக்கும் வித்தியாசமான சந்தோஷத்தையே சுவிசேஷமாக அறிவிக்கிறான். எத்தனைப்பேர் அவன் செய்தியை கேட்டு, அவன் உருவத்தைக் கண்டு ஆறுதல் அடைந்திருப்பார்கள். மனம் திருந்தியருப்பார்கள்.

சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் சோர்ந்து போகும் விசுவாசியே! உன்னைவிட மோசமான நிலையில் உள்ளவர்களைக் கண்டு உன்னை தேற்றிக்கொள். எந்த நிலையிலும் நான் மனோரம்மியமாக இருக்க கற்றுக்கொண்டேன் என்று பவுல் கூறியதைப்போல, உன் சரீர குறைகளைக் கவனிக்காதே! உன் பலவீனத்தைப்பற்றி யோசிக்காதே!

உன் சரீர ஊனங்களைக் குறித்து சிந்திக்காதே! இப்போதுள்ள உன் குறையுள்ள நிலையிலேயே ஆண்டவருக்கு எதையாவது செய். உன் சக்திக்கு மீறியதை செய்ய கர்த்தர் ஒருபோதும் உன்னிடம் எதிர்பார்க்கமாட்டார்.

தன்னால் இயன்றதை அவள் செய்தாள் என்று புகழ்ந்தைப்போல் உன்னால் இயன்றதை உன் ஊனமுள்ள சரீரத்தினாலேயே தேவனை மகிமைப்படுத்தலாம்.

மோசே தன் திக்குவாயைக் கூறி தன்னால் இயலாது என்று வாதித்தான். ஆனால் ஆண்டவர் மோசேவை விடவில்லை. அதைப்பற்றி கவலைப்படாதே உன் வாயை எனக்கு விட்டுக்கொடு பேசுகிறது நீ அல்ல ஆவியானவரே பேசுவார் என்றார்.

ஆகவே இரு கைகள் இரு கால்கள் இல்லாத வெறும் முண்டமான நிக் என்ற வாலிபனுக்காக தேவனைத் துதிப்போம். இதன் மூலம் நாம் படிக்க வேண்டிய பாடங்களைப் படித்துக்கொள்வோம்.

நிக் சொன்னான். எனக்கு கை, கால் இல்லை, கவலையும் இல்லை.

0 comments: