அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 29, 2008

சூரியனை நிரூபிக்க முடியுமா?

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா,இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா,இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!

அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது"என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.

நல்லவோர் நிரூபணம் அன்றோ!!

சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

0 comments: