அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 4, 2013

"இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு

"இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு

அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் வைராக்கியத்துடன் இயேசுவின் தனித்தன்மை மற்றும் தெய்வீக தன்மையைப் பகிர்ந்து கொள்ளும்போது இயேசு தேவனாக இருக்கிறார் என்று சீக்கிரத்தில் உரக்கக் கூறிவிடுகிறார்கள். ஆனால் அது இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரிய தடையாக ஆகிவிடுகிறதை அவர்கள் உணர்வதில்லை. இஸ்லாமானது ஏக இறைவனை – ஒரே இறைவனைக் கொண்ட மதம் ஆகும். ஒரே மெய்யான இறைவனுக்கு நிகராக வேறு யாரையாவது, எதையாவது கருதுவது இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் அவர்களின் மதத்தை மீறுகிற ஒரு செயலாகவும், பயங்கரமான பாவச் செயலாகவும் இருக்கிறது. ஆகவேதான் ஒன்றாகிய மெய்த்தெய்வத்தைத் தவிர இயேசுவும் ஒரு தெய்வமாக இருக்கிறார் என்ற இருகடவுள் கொள்கைக்கு எதிராக குர்-ஆன் தெளிவாக பின்வருமாறு கூறுகிறது:

"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. ஸூரத்துல் அல் மாயிதா (5):72

நாம் திரும்பவும் வைராக்கியமான கிறிஸ்தவரிடம் வருவோம். அவர் எப்பொழுதெல்லாம் இயேசு தேவனாக இருக்கிறார் என்று சொல்கிறாரோ, அப்பொழுது இஸ்லாமியர் தன் மனதுக்குள், " கிறிஸ்தவர் சொல்வது போல இயேசு தேவனாக இருக்கிறார் என்றால், இயேசு இறைவனை நோக்கி "பிதாவே" என்று ஜெபித்திருக்கிறார் எனில். குறைந்தது இரு கடவுள்களாவது இருக்கிறார்கள் என கிறிஸ்தவம் போதிக்கிறது" என நினைத்துக் கொள்கிறார். அதன் பின்னர் அந்த இஸ்லாமியர் மேற்கொண்டு கிறிஸ்தவ சாட்சிக்கு இடம் கொடுக்காமல் விலகிச் சென்றுவிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் தங்களிடமே கேட்டுக் கொள்ள வேண்டியது என்னவெனில், இஸ்லாமியர்கள் நினைப்பது போல உண்மையிலேயே இரு கடவுள்களை வணங்குகிறோமா அல்லது மாற்கு 12:29ல் இயேசுதாமே போதித்தபடி ஒரே மெய்தேவனை விசுவாசிக்கிறோமா என்பதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள் என்ற தவறான புரிதல் இஸ்லாமியருக்கு உண்டாக்காதபடி இருப்பது மிக முக்கியமானதாகும். அப்படிச் செய்வார்கள் எனில், இயேசு இரட்சகராக இந்த பூமிக்கு தேவனுடைய இரக்கத்தை வெளிப்படுத்தவும், விழுந்து போன மனுக்குலத்தை மீட்கவும் வந்தார் என்ற எளிமையான நற்செய்தியை கேட்பதில் இருந்து இஸ்லாமியரைத் தடுத்து அவர் இடறுவதற்கேதுவான கல்லாக கிறிஸ்தவர்கள் இருந்துவிடக் கூடும். ஆகவேதான் வேதாகம அறிவிப்பான "நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் " என்ற வசனம் பற்றி குழப்பம் வேண்டாம்.

வேதாகமத்தில் இயேசு தேவனாக இருக்கிறார் என்ற நேரடி வாசகம் இடம் பெறவைக்காமல் மாறாக இயேசுவின் தெய்வீகத்தன்மையைச் சுட்டிக்காட்டும் பின்வரும் குறிப்புகளை நாம் காண்கிறோம்:

தேவனுடைய வார்த்தை (வெளிப்படுத்தல்.19:13);

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து…. (எபிரேயர் 1:3);

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் ( கொலோசேயர் 1:15); மற்றும்

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்து (2 கொரிந்தியர் 4:4).

இந்த குறிப்புகள் இயேசுவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட ஒரே மெய்யான தேவனைக் குறித்து பேசுகின்றன. நாம் இப்படிப்பட்ட அணுகுமுறையில் வேதாகமத்தை பயன்படுத்தி, நம் வேத வசனப் பிரயோகங்களை பயன்படுத்துவோமாகில், நாம் ஒரே தேவனில் உள்ள நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த முடியும், அதேவேளையில் நம் இஸ்லாமிய நண்பரிடம் பைபிளும் குர்-ஆனும் இரண்டுமே இயேசுவை தேவனுடைய வார்த்தை என குறிப்பிடுகின்றன என்று நினைவுபடுத்துவதன் மூலம் இயேசுவின் தெய்வீகத் தன்மையில் உள்ள நம் விசுவாசத்தை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெரும்பாலான முஸ்லீம்கள் தேவனுடைய வார்த்தையானது ஒருபோதும் உண்டாக்கப்பட்டிருக்க முடியாது, அது மரிக்கவும் முடியாது, அது தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்பதை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விதத்தில் நாம் இயேசுவின் தெய்வீகத்தன்மையை, ஜீவனுள்ள தேவ வார்த்தையைக் குறித்து நாம் பேச முடியும்.

இயேசுவின் தன்மையைப் பற்றி உள்ள இரகசியத்தை உங்கள் இஸ்லாமிய நண்பரிடம் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தெய்வீகத்திற்க்கடுத்த காரியங்களை சாதாரண மனிதர்களாகிய நம்மில் யார் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்! ஆனால் நற்செய்தியின் எளிமையை சிக்கலானதாக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கயாக இருங்கள். மேலும், மிகவும் சிக்கலான இறையியல் புரிதல் தேவைப்படுகிற காரியங்களைச் சொல்ல முயற்சிக்க வேண்டாம். இரட்சிப்பைப் பெறுவதற்கு இயேசுவின் தன்மையைப் பற்றிய முழு அறிவுக்கு நாம் வரவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவே இல்லை. இயேசுவின் தெய்வீகத்தைப் முழுமையாக விளக்கக் கூடிய திறமையின் அடிப்படையில் இரட்சிப்பு இல்லை, மாறாக, இயேசு தேவனால் அனுப்பப்பட்ட மனுக்குல இரட்சகர் என்றும் தேவனால் அனுப்பப்பட்ட இவர் மூலமாக மட்டுமே நமக்கு மீட்பும் பாவ மன்னிப்பும் உண்டாகிறது என்று ஏற்றுக் கொள்கிற இருதயத்தின் அடிப்படையிலேயே இரட்சிப்பு இருக்கின்றது. அதுவே நற்செய்தி ஆகும்.

ஆங்கில மூலம்: The Objection to the claim "Jesus is God"

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
 


Tamil Source : http://isakoran.blogspot.in/2013/02/blog-post_437.html


 

February 15, 2013

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்


இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்

இயேசுவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமியர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தின் அடிப்படையில், முஹம்மது மட்டுமே எல்லா காலத்திற்கும், அனைத்து மக்களுக்குமான உலகளாவிய நபியாக வந்தார் என்று முஸ்லிம்கள் கூறுவதில், அவர்கள் கிறிஸ்தவர்களை முஹம்மதுவைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமியர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்:

இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். மத்தேயு 10:5-6

அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24

ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களின் வம்சத்தில் இயேசு பிறந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்வது முக்கியமானது ஆகும். அனேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக அவர் இருந்தார். தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஒப்புக் கொடுத்தலின் நிமித்தம் ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தமானது இரண்டு தன்மைகளை உடையதாக இருந்தது. முதலாவதாக, ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் பிள்ளைகளை (சந்ததியினர்) ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். இரண்டாவதாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு எனும் அந்த வம்சத்தில் அனைத்து தேசத்தாருக்கும், அதாவது அனைத்து மக்களுக்குமான ஆசீர்வாதத்தை எழுப்புவேன் என்று வாக்களித்தார். (பார்க்க: அப்போஸ்தலர் 3:25-26 மற்றும் கலாத்தியர் 3:8,14).

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தத்தில், இஸ்ரவேலரின் சந்ததியினரும், புறஜாதியாரும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) ஆகிய இருவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். இது அனேக நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு பிறந்தபோது உறுதிப் படுத்தப்பட்டது. குழந்தை இயேசுவை அர்ப்பணிப்பதற்காக ஆலயத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கே ஜெபித்துக் கொண்டிருந்த பக்தியுள்ள வயது சென்ற ஒரு மனிதர் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு அங்கு வந்தார். அவர் தன் கைகளில் அந்தக் குழந்தையை ஏந்தி பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் ஜெபத்தில் சொன்னார்:

(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், (2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். லூக்கா 2:30-32

மேற்கண்ட வேதபகுதியில் இருந்து, இயேசுவின் ஊழியமும் இரண்டு தன்மையுடையது என்பதை நாம் அறிகிறோம். முதலாவது, அவர் இஸ்ரவலரிடத்தில் பிறந்தபடியால், இஸ்ரவேலரிடம் தன்னையும் தேவனையும் வெளிப்படுத்துவது அவருடைய முதல் ஊழியமாக இருந்தது. அவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்- ஆபிரகாம், ஈசாக்கும் மற்றும் யாக்கோபின் சந்ததியினர். குர்-ஆனும் இந்த வித்தியாசத்திற்கு சாட்சி பகருகிறது:

வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம். ஸூரத்துல் ஸாத் (38):45-46

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! ஸூரத்துல் அல்-பகரா (2):47

மிகவும் வருந்தத்தக்கதாக, இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர் தேவனைப் பற்றிய காரியங்களில் கடினப்பட்டவர்களாகவும் வேறுபட்டவர்களுமாக மாறியிருந்தனர். இதன் விளைவாக, நீண்ட காலமாக இஸ்ரவேலர்கள் எதிர்பார்த்திருந்த ஆசீர்வதிக்கப்பட்டவரும், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக தேவனால் அபிசேகிக்கப்பட்டவருமான மேசியா, நானே என்று இஸ்ரவேலரிடம் உறுதிப்படுத்தும் படியாக, இயேசு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்வது அவசியமானதாக இருந்தது. இந்தக் காரணத்தினால் தான் அவருடைய தனிப்பட்ட ஊழிய காலத்தில், இயேசு தம் சீடர்களை இஸ்ரவேலரிடத்திற்கு மட்டுமே போகும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் முதலாவது செய்தியைக் கேட்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பற்றிய வாக்குத்தத்த உடன்படிக்கையின் மக்களாக இருந்த படியினால், இது அவர்களின் பாக்கியமாக இருந்தது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவருடைய சீடர்களில் ஒருவர் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு பேசினார்:

நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 3:25-26

இயேசுவின் ஊழியத்தின் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்வது மிக முக்கியமானது ஆகும். இந்த ஊழியமானது எல்லா மனிதரின் பாவங்களுக்கான பரிகார பலியாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாக இருந்தது. (1 தீமோத்தேயு 2:4-6). இது எல்லா தேசத்தவருக்குமான ஆசீர்வாதமாக இருந்தது. இயேசு சிலுவையில் பாடுபட்டு சிந்திய இரத்தத்தினாலே எல்லா மனிதரின் பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார் என்ற நற்செய்தியே அந்த ஆசீர்வாதம் ஆகும். இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொள்கிற எவருகுக்கும் தேவனுடன் நித்தியமான வாழ்வு உறுதியாக உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து (அல்-மஸீஹ்) பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:46-47

மேசியாவாகிய இயேசுவில் இந்த இரட்சிப்பு அனைவருக்கும், யூதருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இயேசு பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம் சீடர்களை இஸ்ரவேலரிடம் மட்டுமே போகும்படி சொன்னார் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அவருடைய ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்து முடித்த பின் (ஒப்புரவாக்குதலின் தியாக சிலுவை மரணத்திற்குப் பின்), அப்பொழுது அவர் சீடர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:

நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ….. மத்தேயு.28:19

இந்த வார்த்தைகளை இயேசு அறிவித்தபோது, அவர்தாமே தம் உலகலாவிய தன்மையை உறுதிப்படுத்தினார்:

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12

மீண்டுமாக இயேசு தன்னை அனைத்து மக்களுக்குமான இரக்கத்தில் சிறப்பான ஆசீர்வாதம் அல்லது வெளிப்பாடு என குறிப்பிடுகிறார். குர்-ஆனும் இதேபோல இயேசுவின் உலகளாவிய ஊழியத்தைப் பற்றிக் கூறுகிறது. அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு வருகிறது:

'அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும் (ஆயத்-அல் லின்னாசி), நம் அருளாகவும் ஆக்குவோம்.... ஸூரத்துல் மர்யம் (19):21

கவனியுங்கள், "இஸ்ரவேலருக்கு மட்டுமேயான அடையாளம்" என்று சில இஸ்லாமியர்கள் நம்புவது போல இங்கு இல்லை. உண்மையில் அரபியில் இந்த வார்த்தை "அனைத்து மக்களுக்குமான அடையாளம்" என்று வருகிறது.

ஆங்கில மூலம்: The Claim that Jesus was a Prophet Only to Israel

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
 
 

Tamil Source : http://isakoran.blogspot.in/2013/02/blog-post.html

February 1, 2013

ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்


ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்

தங்கள் நபியான முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் யூத மற்றும் கிறிஸ்தவர்களின் கறைபடுத்தப்பட்ட, காலாவதியான மத அமைப்புக்குப் பதிலாக புதிய சட்ட திட்டங்களோடு கூடிய ஒரு புதிய மதத்தை நிறுவுவதே என சில இஸ்லாமியர்களால் கூறப்பட்டது. இந்தக் காரணத்தினால், அனேக முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிய செய்திக்கு எவ்வித கவனமும் செலுத்தத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவ மதமானது புதிய மற்றும் சிறந்த மதத்தினால் மேற்கொள்ளப்பட்டுவிட்டது, இஸ்லாம் என்ற மதம் கிறிஸ்துவுக்குப் பின் 600 வருடங்கள் கழித்து முஹம்மதுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிந்தனை இஸ்லாமியர்கள் அனேகருக்குள் பரவியிருந்தாலும், அது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆனின் போதனைக்கு எதிரானதாக இருக்கிறது.

குர்-ஆனின் படி, முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் முற்றிலும் ஒரு புதிய மதத்தை நிறுவுவது அல்ல, மாறாக ஆபிரகாமின் மதத்தில் தொடர்ந்து நிலைநிற்பது ஆகும்.

'(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. ஸூரத்துல் அந்நஹ்ல் (16):123.

எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை' என்று கூறுவீராக! ஸுரத்துல் அல் அன்ஆம் (6):161.

''அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக! ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):95.

'யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்' என்று கூறுகின்றனர். 'அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்று வோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் பகரா (2):135.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க் கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். ஸூரத்துல் அன்னிஸா (4):125

மேற்சொன்னவைகளைத் தவிர, குர்-ஆனும் கூட முகம்மது அவர்கள் புதிதாக எதையும் போதிக்க வரவில்லை எனச் சொல்கிறது. உண்மையைச் சொல்வதானால், ஏற்கனவே அருளப்பட்ட வெளிப்பாடுகளை உறுதிப்படுத்தும் படிக்கே அவருக்கு வெளிப்பாடு அருளப்பட்டது என குர்-ஆன் நமக்குச் சொல்கிறது. முன்னமே அருளப்பட்டதை திருத்தவோ, மாற்றவோ, அதில் சேர்க்கவோ அல்லது அதை செல்லாதது என அறிவிக்கவோ அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்படாமல், அவைகளை உறுதிப்படுத்தவே அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்பட்டது.

இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருக் கிறது. இது அநீதி இழைத்தோரை எச்சரிப்ப தற்காகவும், நன்மை செய்வோருக்கு நற் செய்தி கூறுவதற்காகவும் அரபு மொழியில் அமைந்த வேதமாகும். (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது. ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):12

(முஹம்மதே!) உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.உமது இறைவன் மன்னிப்புடையவன்; துன்புறுத்தும் வேதனையுடையவன். ஸூரத்துல் ஃபுஸ்ஸிலத் (41):43.

நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!' என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான். (ஸூரத்துல் அஷ்ஷூரா (42):13.

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):9

நம்பிக்கை கொண்டவர்களின் சமுதாயத்திற்கு தீர்க்கதரிசி மோசே மூலமாக தேவனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுக்க மற்றும் சமூகச் சட்டங்களின் அடிப்படையில் ஆபிரகாமின் மார்க்கம் விரிவுபடுத்தப்பட்டது என்பதைக் கவனிப்பது முக்கியமானது ஆகும். அதன் விளைவாக, இஸ்லாம் பொதுவில் காணப்பட்ட பல பழக்க வழக்கங்களை அதிலும் குறிப்பாக முஹம்மதுவின் வருகைக்கு முன் பல நூறாண்டுகளாக யூதர்கள் மத்தியில் இருந்த பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டது. வேதாகமத்தில் காணப்படுவதற்கொத்த இஸ்லாமிய பழக்கவழக்கங்களில் சில கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும் என்று சில முஸ்லீம்கள் நினைப்பதற்கு மாறாக, இவை ஒரு புதிய மதத்திற்கான புதிய சட்டதிட்டங்கள் அல்ல, அவை முன்னமே இருந்தவையாகும்.

  1. சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
  2. தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
  3. தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
  4. ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
  5. விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
  6. எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
  7. பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6)
  8. விருத்தசேதனம் (லூக்கா 2:21)
  9. முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
  10. நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
  11. பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
  12. பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)

ஆங்கில மூலம்: The Claim that Muhammad Came to Establish a New Religion


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.