இந்தியாவில் பிறந்த "இப்ராஹிம் யூசுஃப் ஜேம்ஸ்" தனக்கு ஆறு வயதிருக்கும் போது குடும்பத்துடன் குவைத் தேசத்துக்கு குடிபெயர்ந்தவர். தனது சிறுவயது முதலே அவரது மூத்த சகோதரனுடன் வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் சுமார் 20 வயதிலேயே பல சொத்துக்களுக்கு அதிபதியானார். குவைத் தேசத்திலேயே அதிகமாக தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் அவருக்கு சொந்தமானதாக இருந்தது.
கட்டுக்கோப்பான இஸ்லாமிய பின்னணியில் வளர்ந்த "இப்ராஹிம் யூசுஃப் ஜேம்ஸ்" முறைப்படி "குர்ஆனை" பயின்றதுடன் பாரம்பரிய இஸ்லாமியக் கடமைகள் அனைத்தையும் கடைபிடித்து வந்தார். ஏழைகளுக்கு தான தருமங்கள் செய்ததுடன் "மெக்கா" புனித யாத்திரைக்கும் பலமுறை சென்று வருவார்.
அனைத்திலும் வெற்றியாளராக விளங்கியபோதிலும் ஒரு விஷயத்தில் தோற்றுப்போனார், அதாவது தற்கொலை செய்துகொள்ள முயன்றார், அதிலும் நான்குமுறை தோல்வி ஏற்பட சமாதானமும் கிடைக்காமல் தவித்தவர். தனது புனித வேதமான "குர்ஆனில்" தனது பிரச்சினைகளுக்கான பதிலைத் தேடினார்; ஆனால் "குர்ஆன்" மூலம் அவரால் சரியான பதிலைப் பெறமுடியவில்லை.
இந்த நிலையில் 'எலக்ட்ரானிக் இஞ்சினியரிங்' (மின்னணு தொழில் நுட்ப) கல்வி கற்க இங்கிலாந்து தேசத்துக்குச் சென்றார். ரமலான் நோன்பு காலத்தின் கடைசி வாரத்தில் "இன்ஸோம்னியா" எனும் உறக்கம் வராத வியாதியினால் பீடிக்கப்பட்டார். தூங்குவதற்கு அவர் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில் தனது ஓட்டல் அறையில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது தனது கண்களில் பட்ட "பைபிளை" எடுத்து வெறுமனே புரட்டிக் கொண்டிருந்த போது "தேவையின் போது தேடி வாசிக்க" எனும் வரிசைக் குறிப்பிலிருந்து "உறக்கம் தேவை" எனும் தலைப்பின் கீழிருந்த "சங்கீதம் நான்காம் அதிகாரத்தினை" எடுத்து வாசித்தார்.
பின்னர் இவ்வாறாக பிரார்த்தனை செய்தார்,"இது (பைபிள்) தான் உண்மையான தெய்வத்தின் வேதமானால் அதற்கு அடையாளமாக என்னை தூங்கச் செய்யும்". இப்படியாக பிரார்த்தனை செய்தபின் தனது கட்டிலின் குறுக்காக அப்படியே சாய்ந்தவர் தன்னையுமறியாமல் தூங்கிப்போனார். அது கனவுகள் கூட இல்லாத ஆழ்ந்த உறக்கம்! அடுத்த நாள் காலையில் பைபிளையும் ஆண்டவரையும் மறந்து போனார்.
பின்னர் அதே வாரத்தில் ஒருவர் "இயேசு ஒருவரே இறைவனை அடையும் வழி" என தெருவில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். அதைக் கண்ட இப்ராஹிம் தனது மனதில், "இதெல்லாம் வெறும் குப்பை, இயேசு தேவனுக்கு குமாரனாக இருக்கமுடியாது, தேவனுக்கு குமாரனும் கிடையாது" என சொல்லிக் கொண்டார். ஏற்கனவே ஒரு அமெரிக்க தம்பதி இப்ராஹிமிடம் "உனது கேள்விகளுக்கான பதில்களை தேவனிடம் கேள், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார், உன்னுடன் பேசுவார்" எனக் கூறியிருந்தனர். 'தேவன் நம்முடன் பேசுவார்' என்பதை இதுவரை ஒருவரும் இப்ராஹிமுக்கு சொன்னதில்லை. ஐந்து இரவுகளுக்குப் பிறகு ஓர் இரவில் இப்ராஹிமின் கனவில் பேரொளி ஒன்று சிலுவை வடிவில் தோன்றி அதிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு, "இதுவே என் வழி, இயேசுவானவர் என்னுடைய குமாரன், நான் என்னுடைய சமாதானத்தையே உனக்குக் கொடுக்கிறேன், எனது சந்தோஷத்தினால் உன்னை நிரப்புகிறேன்" என உரைத்தது.
இப்ராஹிம் தேவனால் கேட்கப்பட்டு, இயேசுவானவரைப் பின்பற்றுவதன் விளைவுகளைக் குறித்து ஒரு நாள் முழுவதும் யோசித்தார். தான் குடும்பத்தாரால் முற்றிலும் புறக் கணிக்கப்படுவோம் என்பதனை அறிந்திருந்தும் இயேசுவைக் குறித்து அறியும் ஆவல் அவருக்குள் இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒரு நாளில் கிறிஸ்தவ பெண்மணி ஒருவரை சந்தித்து இயேசுவானரைக் குறித்து முழுவதும் கேட்டறிந்தார். அன்று மனம் விட்டுக் கதறி அழுது தன் வாழ்க்கையினை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார். உடனே அவர் செய்த முதற் காரியம் தனது நம்பிக்கையினை - மனமாற்றத்தினை தனது குடும்பத்தாருக்கு தெரிவித்தது தான். எதிர்பார்த்தபடியே அவர்கள் கடுங்கோபத்துடன் எச்சரித்ததுடன் இனி அவரிடமிருந்து இது போன்ற காரியங்களை ஒருபோதும் கேட்க விரும்பவில்லை எனக் கூறிவிட்டனர்.
இப்ராஹிமோ பைபிளைத் தீவிரமாகக் கற்கத் துவங்கியதுடன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணையும் திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை துவங்கினார்; அவருடைய குடும்பத்தாரோ அவரை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இந்த நிலையில் அவருடைய சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள அழைத்து ஒரு தந்தி வந்தது, "உன்னை மன்னித்து விட்டேன், அவசியம் வரவும்" என அவரது தந்தை அழைத்திருந்தார்.
இந்த எதிர்பாராத அழைப்பைக் குறித்து ஆண்டவரிடம் கேட்டபோது இப்ராஹிம் தனது மனைவியை அழைத்துச் செல்லவேண்டாம் என ஆண்டவரால் எச்சரிக்கப்பட்டதால் தனியாகவே தனது குடும்பத்தார் தற்சமயம் வசிக்கும் இந்தியாவின் மும்பை நகருக்குச் சென்றார். அவரது நண்பர்களும் உறவினர்களும் அன்போடு வரவேற்றனர். ஆனால் இது அவரது தகப்பனாரின் கண்மூடித்தனமான தாக்குதல் துவங்கும் வரையில்தான். ஆம், இப்ராஹிமின் தகப்பனார் தனது கோபமெல்லாம் தீரும் வண்ணம் அடித்தும் உதைத்தும் மிதித்தும் வெறித்தனமாக - இரத்தக்களறியாகும்வரை தனது மகனைத் தாக்கினார். குடும்பத்தார் அனைவரும் அவருடைய செயலுக்குத் துணை நின்றனர். ஆனாலும் இத்தனை உடல் - மன வேதனையிலும் இப்ராஹிம் மன உறுதியுடனிருந்து "நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்" எனக் கூறிக் கொண்டே இருந்தார்.
அவருடைய தகப்பனார் கடுங்கோபத்துடன் துப்பாக்கியினால் அவரை சுட்டுத் தள்ள ஆவேசத்துடன் எழும்பி விசையினைத் தட்டும் வேளையில் இப்ராஹிமின் மாமா அதைத் தடுத்து அந்த துப்பாக்கியினை தகப்பனாரின் கரத்திலிருந்து பிடுங்கி எறிந்தார். இப்ராஹிம் தொடர்ந்து வீட்டிலேயே கைதியைப் போல் அடைபட்டிருந்தார். அவரது திருமண புகைப்படங்களையும் வேதாகமத்தையும் கிறிஸ்தவ புத்தகங்கள் மற்றும் அவருக்குப் பிரியமான ஒலிநாடாக்களையும் அழித்தனர். இப்படியே நாட்கள் செல்ல செல்ல அவருடைய தகப்பனாருக்கு இப்ராஹிம் மனம் மாறிவிட்டது போலத் தோன்றியது. ஆனாலும் அவரை கைதி போலவே வைத்திருந்து அவர் தப்பியோட முயற்சித்தால் அவரை சுட்டுத் தள்ள பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இன்னும் கொஞ்ச நாள் சென்றதும் பாதுகாவலர்களுடனே அவரது நண்பர்களைப் பார்த்துவர அனுமதிக்கப்பட்டார்.
ஒரு நாள் தனது பள்ளித் தோழனைப் பார்த்துவர வேண்டுமென கேட்கவும் அவரது தகப்பனார் அவரை வெளியே அழைத்துச் சென்றார். ஆண்டவர் இப்ராஹிமிடம்,"நீ உன் குடும்பத்தை விட்டு வெளியேறும் நாள் இதுவே" என்று சொன்னார். அவரது தகப்பனாரும் போகும்வழியில் ஏதோ வேலையிலிருந்ததால் இப்ராஹிமை தனியே சென்றுவர அனுமதித்தார். இந்த அருமையான வாய்ப்பினை இழக்க விரும்பாத இப்ராஹிம் நேராக ஒரு கிறிஸ்தவப் போதகரிடம் சென்று அவருடைய உதவியுடன் பத்திரமாக வெளியேறி தனது தேசத்துக்குச் சென்று மனைவியுடன் சேர்ந்தார்.
சமீபத்தில் இப்ராஹிம் தொலைபேசி மூலம் தனது தகப்பனாருடன் பேசியபோது அவர் சொன்னது, "நீ வணங்கும் தெய்வமே உண்மையான தெய்வம், காரணம்.உன்னைத் துன்புறுத்த கடந்த பத்து வருடங்களாக எடுத்த முயற்சிகள் தோற்றுப் போய்விட்டது".
The Price of Peace, an article published in The Believer's Voice of Victory' Magazine, April 1998, published by Kenneth Copland and Gloria Copland from the UK. Ibrahim's story took place around the year 1986-87.
0 comments:
Post a Comment