திருமறையை விளக்கும் முறை – அறிமுகம்
வில்பிரட் கர்ட் , பக்கங்கள், 76
தமிழ்நாடு நற்செய்தி பட்டதாரிகள் ஐக்கியம்
குரு மெடிக்கல் ஹால், திருச்சி 600 010
இந்நூலாசிரியரான வில்பிரட் கர்ட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் பாப்திஸ்து திருச்சபை ஊழியத்தில் செலவிட்டார். தெளிவான. அடிப்படை விதிகளைப் பயன்படுத்தி, வேதத்தைத் தமிழ் கிறிஸ்தவர்கள் முறையாக அறிந்துகொள்ள வேண்டும், என்ற இவரது அடங்காத் தாகத்தின் விளைவே இந்நூல் 1977 இல் வெளிவந்த திருமறை விளக்கம் வேதத்தை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசியமான விதிகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்குகின்றது.
திருமறையை சரிவரப் படித்து, வாழ்வில் கைக்கொள்ளாது, எவருமே கிறிஸ்துவில் அன்பு செலுத்தவோ, தம்வாழ்வில் நன்மையடையவோ முடியாது. அவ்வாறு திருமறையை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதை விளங்கிக் கொள்ள அவசியமான வேதத்தில் காணப்படும், பல விதிமுறைகளை நாம் கவனத்தோடு அவதானித்து, அவற்றைப் பயன்படுத்தி, வேதப்பகுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். வேதத்தைப் படிக்கும்போது மற்ற சாதாரண புத்தகங்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் விதிகளைப் பயன்படுத்தல் அவசியம். இலக்கணம், எழுதப்பட்ட சந்தர்ப்பம், சொற்பிரயோகங்கள், படிக்கும்பகுதி சரித்திர சம்பவமா? உவமானமா? அல்லது போதனையா? என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். பலர், இன்று இவ்விதிமுறைகளைக் கருத்தில் எடுக்காது தாம் நினைத்த விதத்தில் வேதவிளக்கமளிக்க முற்படுகின்றனர். இது திருமறையையும் அதை நமக்குத் தந்த தேவனையும் அவமதிக்கும் செயலாகும்.
வில்பரட் கர்ட் தமிழ்மக்கள் மத்தியில் பல வருடங்கள் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. வேதத்தை தவறான முறையில் விளக்குவதற்கு உதாரணமாகத், தமிழ்நாட்டில் தான் ஒரு கூட்டத்தில் கேட்டப் பிரசங்கத்தை அவர் ஓரிடத்தில் இவ்வாறு விளக்குகிறார். "ஆன்மீகக் கூடாரம்" என்ற தலைப்பில் அக்கூட்டத்தில் பேசிய அருளுரையாளர் வேதத்தில் எங்கெங்கு "கூடாரம்" என்ற வார்த்தை காணப்படுகின்றதோ அப்பகுதியெல்லாம் பயன்படுத்தி, அவற்றுக்கு ஆன்மீக விளக்கமளித்ததாகக் கூறுகிறார். இது சொல்லாகரதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு. இவ்வருளுரையாளர் இச்சொற்கள் காணப்படும் சந்தர்ப்பத்திற்கேற்ற விதத்தில் அவற்றைப் பயன்படுத்தத் தவறிவிட்டார். அதுமட்டுல்லாது வெறும் தலைப்பை மட்டும் முதலில் தேடிப் பின்னால் அத்தலைப்புக்கேற்ற பேச்சுப்பொருளைத் தேடமுயன்றதால் அவர் வேதத்தைத் தவறான விதத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
திருமறையை விளக்கும்போது நான்கு அடிப்படை விதிகளை நாம் அவதானித்தல் அவசியம் என்கிறார்.
1. வேதப்பகுதிகளை விளக்கும்போது, அப்பகுதிகளை, அவற்றில் காணப்படும் வார்த்தைகளின் சாதாரண அர்த்த்தின்படியும்,
இலக்ணத்தின்படியும் விளக்க வேண்டும்.
2. எந்தவொரு வேதப் பகுதியும், அது காணப்படும் உடனடிச் சந்தர்ப்பத்திற்கேற்ப (Immediate Context) விளக்கப்பட வேண்டும்
3. அத்தோடு அவ்வேதப்பகுதி அமைந்துள்ள முழுப்பகுதியின் (Large Context) அமைப்பிற்கேற்ற முறையிலும் அது விளக்கப்பட வேண்டும்
4. அவ்வேதப்பகுதி திருமறையின் பொதுவான போதனைகளுக்கேற்பவும் அவற்றிற்கு முரண்படாத வகையிலும் விளக்கப்பட வேண்டும்.
ஏனெனில் வேதமே வேதத்தை விளக்குகின்றது. வேதம் வேதத்த்தோடு ஒப்பிட்டுப் விளக்கப்பட வேண்டும்.
தீர்க்கதரிசனங்கள், முன்னடையாளங்கள், உவமானங்கள், உவமானங்கள், உருவகங்கள், எபிரேய பாடல்கள், அக்காலத்து கலாச்சாரம், நாகரிகம் போன்றவை எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் இந்நூலில் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். முக்கியமாக தீரக்கதரிசனங்கள் எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்ற பகுதி இன்றைய சூழ்நிலையில் அக்கறையோடு படிக்க வேண்டிய ஒரு பகுதி. தமிழில் இத்தகைய நூல்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்துள்ள ஆசிரியருக்கு தமிழ்கிறிஸ்தவர்கள் நிச்சியம் கடமைப்பட்டுள்ளார்கள்.
1983ல் இந்நூல் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. இலகுவான ஆங்கிலத்தில் எல்லோரும் புரிந்துகொள்ளும் படியாக அதனையும் ஆசிரியரே எழுதியுள்ளார்.
கேட்பவர்கள் உணர்ச்சிவசப்படும்படி கதை சொல்லுதல், சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வேத விளக்கமளித்தல் என்ற பாணியில், பொதுவாக பிரசங்கங்களும் போதனைகளும் அமைந்திருக்கும் இந்நாட்களில் அருளுரையாளர்களும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களும், கிறிஸ்தவர்கள் அனைவருமே தவறாது வாங்கி பயனடைய வேண்டிய புத்தகமிது. வேத்த்தின் மூலமாக மட்டுமே கர்த்தர் இன்று நம்மோடு பேசுவதால் அவருடைய வார்த்தையைத் தெளிவாக சந்தேகமில்லாமல் புரிந்கொள்ள வேண்டியது அவசியமல்லவா?
(நன்றி : திருமறைத் தீபம்)
Thanks : Br.Colvin :
0 comments:
Post a Comment