அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 11, 2016

பைபிள் வழியாக அரபியை ஏன் கற்கவேண்டும்?

பைபிள் வழியாக அரபியை ஏன் கற்கவேண்டும்?


எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்

அரபியில் படிக்க மற்றும் புரிந்துக்கொள்ள

ஒரு மொழியை புதிதாக கற்றுக்கொள்வது என்பது மிகவும் சலிப்பான விஷயம்.
இதனை நாம் நம்முடைய ஆரம்ப பள்ளி காலத்திலிருந்தே அறிந்திருக்கிறோம்.
அன்று நமக்கு மொழியைக் கற்றுக்கொள்வது ஏன் கடினமாக தெரிந்தது? அதற்கு
இரண்டு காரணங்களை கூறலாம்:

1) நமக்கு மொழியை கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்ததில்லை அல்லது கட்டாயத்தின்
பேரில் வேறு வழியில்லாமல் நாம் மொழியை கற்க முன் வந்தோம் (நம்
பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால் பள்ளிக்கு கட்டாயத்தின் பேரில்
அழுதுக்கொண்டே சென்றோம்).

2) நமக்கு மொழியை கற்றுக்கொடுத்தவர்களில் சிலர் பின்பற்றிய பாணியும்,
அவர்களுக்கு இருந்த ஆர்வமின்மையும் தான் காரணம். (சில அரசு பள்ளிகளில்
இதனை நாம் கண்கூடாக காணலாம்).

ஆனால், இன்று நமக்கு அரபியை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் (!)
இருக்கிறது, தேவையும் இருக்கிறது. எனவே, ஒரு புதிய மொழியை
கற்றுக்கொள்ளும் பாணியை மாற்றி இந்த பாடத்திட்டங்கள் தயார்
செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் சில
மணித்துளிகளை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும், சலிப்பில்லாமல் அரபியை
கற்றுக்கொள்ளவும் இப்பாடங்கள் உதவும். வாருங்கள் தொடருவோம்.

ஒரு மொழியை முழுவதுமாக நாம் கற்றுக்கொள்ள கீழ்கண்ட அனைத்தையும் நாம் கற்கவேண்டும்:

1 படிக்க (Read)

2 புரிந்துக்கொள்ள (Understand)

3 எழுத (Write)

4 பேச (Speak)

ஆனால், நம்முடைய முக்கிய நோக்கம், குர்-ஆனை அரபியில் படித்து, அதனை
புரிந்துக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமேயாகும். ஆகையால், இத்தொடர்
கட்டுரைகளின் மூலமாக, நாம் அரபியை படிக்கவும், புரிந்துக்கொள்ளவுமே
கற்றுக்கொள்ளப் போகிறோம், அரபி மொழியில் எழுதவோ, அல்லது சரளமாக பேசவோ
அல்ல. ஆகையால், நாம் மேற்கண்ட நான்கு தலைப்புகளில் முதல் இரண்டை
மட்டுமே கற்றுக் கொள்ளப்போகிறோம் (படிக்கவும், புரிந்துக்கொள்ளவும்).

அரபியில் பேசவும், எழுதவும் வேண்டுமென்றால் என்ன செய்வது?

நாம் அரபி மொழியை படிக்கவும், படித்ததை புரிந்துக்கொள்ளவும் செய்தால்,
தானாகவே ஓரளவிற்கு அரபியில் பேசவும் கற்றுக்கொண்டு விடுவோம். மேலும்,
விருப்பமுள்ளவர்கள் சிறிது அதிக நேரத்தை ஒதுக்கி அரபியில் எழுதவும்
கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்தின் கடைசியில் அரபியில் பேசவும்,
எழுதவும் விருப்பமுள்ளவர்களுக்கு தனியாக பயிற்சிகள் தரப்படும், அவைகளை
கோர்வையாக பின்பற்றினால், நாம் சரளமாக பேசலாம் மற்றும் எழுதலாம்.

ஆக, இத்தொடர் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட பாடங்களை ஒழுங்காக நாம்
கற்றுக்கொண்டால், குர்-ஆன் வசனங்களை நாமும் அரபியில் படிக்கலாம், அவைகளை
புரிந்துக் கொள்ளலாம்.

ஏன் பைபிள் வழியாக அரபியை கற்கவேண்டும்?

நான் இத்தொடர் கட்டுரைகளுக்கு கொடுத்த உப தலைப்பை கவனியுங்கள்: "பைபிள்
வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்பதாகும். இதனை படித்தவுடன்
நமக்கு சில கேள்விகள் எழும்:

• அரபி மொழிக்கும் பைபிளுக்கும் என்ன சம்மந்தம்?

• அரபி குர்-ஆனை படிப்பதற்கும், பைபிளை படிப்பதற்கும் என்ன சம்மந்தம்?

• "பைபிள் வழி அரபி குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்றால் என்ன பொருள்?

இவைகளுக்கான பதில்களை அறிந்துக் கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

ஒரு மொழியை இரண்டு வகையாக கற்கலாம்:

1. முதலாவதாக அரபி எழுத்துக்களை கற்றுக்கொண்டு, அதன் பிறகு வார்த்தைகளைக்
கற்றுக்கொண்டு, பிறகு வாக்கியங்கள் மற்றும் இலக்கணம் என்று கோர்வையாக
கற்பது முதலாவது வகையாகும். இந்த வழிமுறையில் தான் நாம் அனைவரும்
மொழிகளை பள்ளிக்கூடங்களில் கற்கிறோம். இந்த பாணியில் ஒரு மொழியைக் கற்பது
பலருக்கு சலிப்பை உண்டாக்கும். முதல் நாள் பாடத்திலேயே எல்லா உயிர்
எழுத்துக்களை கற்றுக்கொண்டு, ஒவ்வொரு எழுத்தையும் பத்து முறை
வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று வாத்தியார் சொன்னால்,
பிஞ்சு உள்ளங்களுக்கு சலிப்புண்டாகாமல் இருக்குமா!

2. இரண்டாவதாக, ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு, அந்த வார்த்தையில் வரும்
எழுத்துக்களை மட்டும் கற்றுக்கொள்வது. அதன் பிறகு இன்னொரு வார்த்தையை
எடுத்துகொண்டு, அதில் வரும் எழுத்துக்களை கற்றுக் கொள்வது. இவ்விதமாக,
அனைத்து எழுத்துக்களையும் கற்றுக் கொள்வது மிகவும் சுலபமான வழியாகும்.
மேலும் தேவையான இடங்களில், இலக்கணங்கள் மற்றும் இதர விவரங்களை
கற்றுக்கொள்வோம்.

இந்த இரண்டாம் வகையில் தான் நாம் இப்போது அரபி மொழியை கற்றுக்கொள்ளப்
போகிறோம். மேலும், நாம் கற்றுக்கொள்ளப் போகும் வார்த்தைகள், பைபிள்
மற்றும் குர்-ஆனில் காணப்படும் வார்த்தைகளாக இருக்கும். அதாவது A for
Apple, B for Ball என்று கற்காமல், A for Allah, B for Bethlahem என்ற
முறையில் கற்கப்போகிறோம். இதன் மூலம், பைபிள் மற்றும் குர்-ஆனில் வரும்
அரபி வார்த்தைகளை கற்றுக்கொள்வோம்.

இந்த இரண்டாம் வகையில் ஒரு மொழியை கற்றுக்கொள்வது சலிப்பை உண்டாக்காது,
மேலும் சுவாரசியமாகவும் இருக்கும். இந்த வகையில் நாம் கற்கும் போது,
ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் போதும், அதன் பலன் நமக்கு உடனே கிடைக்கும்.
அதாவது, ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் நேரத்தில் நாம் பல வார்த்தைகளை
கற்றுக்கொண்டு இருப்போம், சில இலக்கண விதிகளை கற்றுக்கொண்டு இருப்போம்.
அரபியில் முதல் வார்த்தையை கற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டிய
அவசியமில்லை, அரபியின் எல்லா எழுத்துக்களை கற்கவேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் போதும், நாம் பல வார்த்தைகளை சுலபமாக
கற்றுக்கொண்டிருப்போம். இதனை நீங்கள் முதலாவது அத்தியாயத்தை படித்ததும்
புரிந்துக் கொள்வீர்கள்.

ஒரு மொழியை சீக்கிரமாக கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அந்த மொழியை
பேசும் மக்களின் மத்தியில் வாழ்ந்தால் சீக்கிரத்தில் கற்றுக்
கொள்ளமுடியும். இந்தியாவில் இருந்துக்கொண்டு அரபிமொழியை புத்தகங்கள்
மூலமாக கற்றுக்கொள்பவர்களைக் காட்டிலும், அரபு நாடுகளில் சென்று வேலைச்
செய்பவர்கள் சீக்கிரமாக அதனை கற்றுக்கொள்வதை காணமுடியும். ஏனென்றால்,
எவ்வளவுக்கு அதிகமாக அந்த புதிய மொழியை நாம் கேட்கிறோமோ, படிக்கிறோமோ
அவ்வளவு சீக்கிரமாக அதனை கற்றுக்கொள்ளமுடியும்.

ஆனால், கிறிஸ்தவ ஊழியர்களாகிய நம்மை பொறுத்தமட்டில், அரபியை கற்க நாம்
அரபு நாடுகளுக்குச் சென்று கற்கமுடியாது. இதனை மனதில் வைத்து தான் இந்த
"பைபிள் வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்ற தொடர் கட்டுரைகள்
எழுதப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பைபிளை வாசிக்கிறோம், அதனை
தியானிக்கிறோம், மற்றவர்களிடம் பேசும் போதும், சபைகளிலும் பைபிள்
வசனங்களை பயன்படுத்துகிறோம். எனவே, அரபி பைபிளை அடிப்படையாகக் கொண்டு
நாம் அரபி மொழியை கற்றுக்கொண்டால், சீக்கிரத்தில் அதனை
கற்றுக்கொள்ளமுடியும். எனவே, அரபி மொழியை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ள,
குர்-ஆனை அதன் மூல மொழியில் படித்து புரிந்துக்கொள்ள இத்தொடர் கட்டுரைகள்
வகை செய்யும்.

நினைவில் வையுங்கள்

இந்த அரபி பாடங்களை கற்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை மனதில் வைக்க வேண்டும்:

1) நம்முடைய நோக்கம் அரபியில் புலமை பெற்று, முஸ்லிம்களுக்கு அரபியில்
சவால் விடவேண்டும் என்பதல்ல, அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பது
தான்.

2) அரபியைக் கற்றுக்கொண்டு, அரபி குர்-ஆனை அதற்கான இராகத்தில்
முஸ்லிம்களைப் போல ஓதவேண்டும் என்பது நம் நோக்கமல்ல. நம்முடைய
நம்பிக்கையின் படி, குர்-ஆனை நாம் இராகத்தில் ஓதுவதினால் எந்த நன்மையும்
இல்லை. இதே போல, பைபிளை எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் நாம்
படிப்பதினால், தமிழில் படிப்பவர்களைக் காட்டிலும் அதிகபடியான நன்மையை
தேவன் நமக்கு கொடுப்பது இல்லை. வேதத்தை புரிந்துக் கொண்டு அவைகளுக்கு
கீழ்படிவதையே தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். எனவே, குர்-ஆனின் அரபி
வசனங்களை இராகம் போட்டு, மெட்டு போட்டு வாசிக்க நாம் முயலப்போவதில்லை,
அது நம் நேரத்தை வீணடிக்கும். ஆனால், விருப்பமுள்ளவர்கள் நேரமுள்ளவர்கள்
குர்-ஆனை இராகமாக வாசிக்க முயற்சி எடுக்கலாம் இதில் தவறில்லை. முயன்றால்
முடியாதது எதுவுமில்லை, விசுவாசிக்கிறவர்களால் எல்லாம் கூடும்.

3) சில அரபி வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதற்கு நமக்கு மிகவும் கடினமாக
இருக்கும். ஒரு ஆசானை வைத்துக் கொண்டு அவைகளை படித்தால் தான் நாம் சரியாக
அவைகளை உச்சரிக்கமுடியும். நாம் அதிகமாக அவ்வார்த்தைகளை கேட்டு நம்
உச்சரிப்பை சரி செய்துக் கொள்ளலாம். நீ ஏன் குர்-ஆன் அரபி வசனங்களை,
பைபிள் அரபி வசனங்களை சரியாக உச்சரிக்கவில்லை என்று தேவன் நம்மிடம்
கேள்வி கேட்கமாட்டார் என்பதை மனதில் வையுங்கள். (எத்தனை முறை நம்
சபைகளில் "இயேசுவே வழியாக இருக்கிறார்" என்ற சொற்றொடரை "இயேசுவே வலியக
இருக்கிறார்" என்று சிலர் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்காக நாம்
கோபித்துக்கொண்டு சபையை விட்டு சென்றுவிட்டோமா என்ன? அல்லது இயேசு தான்
நம்மோடு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாரா? எனவே மனம் தளராதீர்கள்! நம்
தாய் மொழியே நமக்கு பிரச்சனையென்றால், அரபி மொழி என்ன விதிவிலக்கா
நமக்கு? அரபி நம்மிடம் என்ன பாடுபடப்போகிறதோ? - அல்லாஹ் தான்
காப்பாத்தனும்!)

4) முஸ்லிம் அறிஞர்களில் சிலர் குர்-ஆன் வசனங்களை தங்கள் விருப்பத்திற்கு
ஏற்றவாறு பொருள் கூறுகிறார்கள். நம்முடைய நோக்கமெல்லாம், முடிந்த
அளவிற்கு அரபியை கற்றுக்கொண்டு, குர்-ஆனின் வசனங்களின் உண்மை பொருளை
புரிந்துக்கொள்வதாகும். இதன் மூலமாக, முஸ்லிம்களோடு நாம் புரியும்
உரையாடல்கள் பயனுள்ளதாக மாறும்.

5) இன்னும் பல இஸ்லாமிய நூல்கள் அரபி மொழியிலேயே உள்ளன, அவைகள் தமிழில்
மொழியாக்கம் செய்யப்படவில்லை. கிறிஸ்தவர்கள் அரபியை கற்றுக்கொண்டு,
அரபியில் புலமைப்பெற்று இந்த அரபி புத்தகங்களை தமிழாக்கம்
செய்யமுடியும். புதிய மொழிகளை கற்றுக்கொள்வதும், அம்மொழிகளில் புலமைப்
பெற்று, மொழியாக்கம் செய்வதும் கிறிஸ்தவர்களுக்கு புதிதான மற்றும்
கடினமான ஒன்றல்லவே!

6) கடைசியாக, முஸ்லிம்களை பரலோகின் பிரஜைகளாக்க, கர்த்தரின் ஊழியத்தை
அவர்களின் மத்தியில் சிறப்பாக செய்ய, அரபி மொழியைக் கற்றுக்கொள்வது
பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதை மனதில் வைக்கவும்.

இப்போது முதல் அத்தியாயத்திற்குச் செல்வோம்.

________________________________

முன்னுரை பொருளடக்கம் அத்தியாயம் 1 - ஆமீன்

________________________________
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/learn_arabic/why_arabic.html




--
Source :http://www.isakoran.blogspot.in/2015/12/blog-post_20.html

0 comments: