அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 11, 2016

எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள் (பைபிள் வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்)

New article - How to learn Arabic in easy way? for Christians.

எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள் (பைபிள் வழி அரபிக்
குர்-ஆனை கற்றுக்கொள்வோம்)



முன்னுரை:

இந்த தொடர் கட்டுரைகள் மூலமாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை சந்திப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன். சமீப காலமாக கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியில்
"இஸ்லாம்" பற்றிய உரையாடல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் இஸ்லாமை
கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், இஸ்லாமிய நூல்களையும்,
குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களையும் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னும்
சிலர் ஒரு படி மேலே சென்று "நாங்கள் அரபியில் குர்-ஆனை படிக்க
விரும்புகிறோம்" என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம்
செய்ய, அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொண்டாக வேண்டும் என்ற நிலை இல்லை
என்றாலும், அரபியை கற்றுக்கொண்டு ஊழியம் செய்தால், அதிக பலன் கிடைக்கும்
என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமியர்களின் வேத நூலாகிய "குர்-ஆன்" அரபி மொழியில் இருப்பதினாலும்,
இம்மொழிக்கு இஸ்லாமியர்கள் அதிக முக்கியத்துவம் காட்டுவதினாலும், இதனை
அறிந்துக்கொள்வது கிறிஸ்தவ ஊழியர்களுக்கு அதிக நன்மையாக இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகள் செலவழித்து,
அரபியைக் கற்றுக்கொண்டு, அதன் மூலமாக குர்-ஆனை சுலபமாக அறிந்துக்கொள்ள
இத்தொடர் கட்டுரைகள் உதவும் என்று நம்புகிறேன்.

சவால்களும் வழிமுறைகளும்

அரபி மொழியை கற்றுக்கொள்ள ஒரு அரபி ஆசிரியரை நியமித்து, தினமும் அவரோடு
சில மணித்துளிகள் அமர்ந்து, அவர் முலமாக அரபியைக் கற்றுக்கொண்டால், அதி
சீக்கிரமாக அரபியைக் கற்றுக் கொள்ளமுடியும். ஆனால், உலகம் முழுவதும்
இருக்கும் தமிழ் பேசும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு அரபியை கற்றுக்கொடுக்க
எத்தனை ஆசிரியர்களை நியமிப்பது? நம் ஊழியர்களுக்கு இம்மொழியை
கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் ஒதுக்க நேரமிருக்கின்றதா? நாடோடிகள் போல
அங்கும் இங்கும் சென்று சுவிசேஷத்தைச் சொல்லும் ஊழியர்களை எப்படி ஒரே
இடத்தில் ஒவ்வொரு நாளும் உட்காரவைப்பது? இப்படி அனேக சவால்கள் தற்கால
ஊழியர்களுக்கு உள்ளன. எனவே, இணையத்தில் இப்படிப்பட்ட ஒரு பாடத்திட்டத்தை
சேர்த்து, ஊழியர்களுக்கு அரபியைக் கற்றுக் கொடுத்தால், நம்முடைய இலக்கை
அடைய இது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். இக்காலத்தில்
எல்லோரும் ஸ்மார்ட் போனை (Smart Phone) பயன்படுத்துகிறார்கள், அவைகளில்
தினமும் மெயில்களை பார்க்கிறார்கள் பதில்களை அனுப்புகிறார்கள். பிரயாணம்
செய்யும் போதும், இணையத்தில் எப்போதும் இணைந்திருக்கிறார்கள். எனவே, இதே
இணையத்தை பயன்படுத்தி அவர்கள் தமிழ் மூலமாக அரபியை கற்றுக்கொள்ள வழி
உண்டாக்கவும் மேலும் அவர்களின் அரபி மொழி தாகத்தை தீர்ப்பதும் தான்
இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

கர்த்தரின் நாள் மிகவும் சமீபமாக இருப்பதினால், அரபி மொழியை
கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியரும், இன்னொரு ஊழியருக்கு இந்த மொழியை
கற்றுக்கொடுக்கும் படி கர்த்தருக்குள் கேட்டுக்கொள்கிறேன். சபைகளில்
ஊழியர்கள் பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டும் போது, அரபி மொழியில்
வசனங்களை எடுத்துக் காட்டி, பிரசங்கங்கள் செய்யும் காலம் சமீபமாக
இருக்கிறதை நான் காண்கிறேன். நம் ஊழியர்கள், போதகர்கள் குர்-ஆன் வசனங்களை
அரபியில் எடுத்துக் காட்டி, அவ்வசனங்களின் ஒவ்வொரு வார்த்தையின் பொருளை
விளக்கி சபைகளுக்கு இஸ்லாமிய விழிப்புணர்வை கொண்டு வருவார்கள் என்று
விசுவாசிக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால் வருங்காலங்களில் சில
ஊழியர்கள் குர்-ஆனை அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தாலும் நாம்
ஆச்சரியப்படத்தேவையில்லை. கிறிஸ்தவர்களின் குர்-ஆன் தமிழாக்கங்கள்
தற்போது தமிழில் நிலவும் முஸ்லிம் அறிஞர்களின் குர்-ஆன் தமிழாக்கங்களைக்
காட்டிலும் தரத்தில் உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கிறிஸ்தவர்களுக்கு புது மொழிகளை கற்றுக்கொள்வதும், அவைகளில்
மொழியாக்கங்கள் செய்வதும் புதிதான மற்றும் அறிதான விஷயமல்லவே!

எதிர்காலத்தில் அரபி மொழிக்கு தமிழ் கிறிஸ்தவர்களின் பங்கு ஒரு
குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
இப்படியெல்லாம் நடக்க கிறிஸ்தவ ஊழியர்கள் செய்யவேண்டியதெல்லாம் இவைகள்
தான்: முதலாவதாக, முஸ்லிம்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்ற ஆர்வம்
இருக்கவேண்டும், இரண்டாவதாக, அரபியை படிக்க ஒவ்வொரு நாளும் சில
நிமிடங்களை ஒதுக்கவேண்டும், மீதியானதை நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர்
பார்த்துக்கொள்வார், ஆமீன்.

இப்படிக்கு

தமிழ் கிறிஸ்தவன்

தேதி: 20-Dec-2015

________________________________

பொருளடக்கம் ஏன் பைபிள் வழியாக அரபியை கற்கவேண்டும்?

________________________________
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/learn_arabic/intro_arabic.html




--
Source : http://www.isakoran.blogspot.in/2015/12/blog-post.html

0 comments: