அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 11, 2015

மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது

முன்னுரை: "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

முந்தையை கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்: மக்காவின் பிரச்சனைகள்:அறிமுகம்123, 45, & 6.
குர்-ஆனிக் ஜியோகிரஃபி (Quranic Geography) என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிப்சன் அவர்கள், இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது பெட்ரா நகரமாகும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இதற்காக அவர் பல ஆதாரங்களை கொடுத்துள்ளார், அவைகளில் சிலவற்றை மேற்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம். 
இக்கட்டுரையில் அவர் கூறும் இன்னொரு ஆதாரத்தைப் பார்ப்போம், அதாவது "இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல, ஏனென்றால், இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தை உருவாக்கும் சக்தி அதற்கு இல்லை" என்பது தான் அது. 
இஸ்லாமிய புனித நகரமும் அதன் ஜனத்தொகையும்:
ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரம் பெரிய எண்ணிக்கையில் போர் வீரர்களையும், வியாபாரிகளையும் உருவாக்கியுள்ளது. அதாவது, புனித நகரத்திலிருந்து அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் போருக்காகவும், வியாபாரத்திற்காகவும் சென்று இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் அறிவது என்னவென்றால், புனித நகரில் அதிக அளவில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், ஆனால், "7ம் நூற்றாண்டின் மக்காவில் இது சாத்தியமா?" என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்.
சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், தம் புத்தகத்தின் 234ம் பக்கத்தில் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரியின் "சரித்திர புத்தகத்திலிருந்து" இந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளார், இவைகளை ஹதீஸ்களிலும் காணலாம். மக்காவினர் முஸ்லிம்களோடு புரிந்த போர்களில் கலந்துக்கொண்ட வீரர்களின் எண்ணிக்கை, மேலும் மக்காவினரின் வணிக கூட்டங்களில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை, இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், நமக்கு அக்கால புனித நகரின் ஜனத்தொகைக்கான அடிப்படை எண்ணிக்கை கிடைத்துவிடும்.
மூல நூல் ஹிஜ்ரி வருடம் / நிகழ்வுமக்கா இராணுவத்தின் / வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கை
தபரி, தொகுப்பு 7, பக்கம் 13ஹிஜ்ரி 1, அல் அப்வா என்ற இடத்தில் நடந்த சண்டை300 குதிரை வீரர்கள்
தபரி, தொகுப்பு 7, பக்கம் 15-16ஹிஜ்ரி 2, மக்கா வணிக கூட்டம் மீது வழிப்பறி100 நபர்கள் கொண்ட வணிக கூட்டம், 2500ஒட்டகங்கள்
தபரி தொகுப்பு 7, பக்கம் 33ஹிஜ்ரி 2, பத்ரு போர்மக்காவின் போர் வீரர்கள் 1000 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 90ஹிஜ்ரி 2, சாவிக் (Sawiq) போர்மக்காவின் போர் வீரர்கள் 200 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 98ஹிஜ்ரி 3, அல்கரதா என்ற இடம், மக்கா வணிக கூட்டம்மக்காவின் வணிக கூட்டத்திடமிருந்து 20,000திர்ஹம் கொள்ளையடிக்கப்பட்டது.
தபரி தொகுப்பு 7, பக்கம் 110ஹிஜ்ரி 3, உஹுத் போர்மக்காவின் போர் வீரர்கள் 3000 பேர், 200குதிரைப்படை வீரர்கள்
தபரி தொகுப்பு 8, பக்கம் 13ஹிஜ்ரி 5, அகழ்ப்போர், மக்காவினரும் இதர கூட்டங்களும்போர் வீரர்கள் மொத்தம் 10,000 பேர் (மக்காவின் காலாட்கள் மட்டும் 4000 பேர்) [1]
(மூலம்: Quranic Geography, பக்கம் 234) 
முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு மக்காவினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் மக்காவினரிலிருந்து அனேகர் மரித்துப் போயினர். இந்த நஷ்டத்திற்கு பிறகும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபாரிகளையும் இஸ்லாமிய புனித பூமி ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கிக்கொண்டே இருந்துள்ளது.  மேலே உள்ள பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு போரின் போதும், இரண்டு தரப்பிலிருந்தும் மக்கள் மரித்தனர். இருந்தபோதிலும், மக்காவிலிருந்த குறைஷி மக்கள்  பல ஆயிர போர் வீரர்களைக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டனர். 
உதாரணத்திற்கு, பத்ரு போரில் 1000 பேர், உஹுத் போரில் 3000 பேர், அகழ்ப்போரில் 4000 பேர் மக்காவின் சார்ப்பில் கலந்துக் கொண்டனர். 
இதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய ஆதாரங்களின் படி, இவர்களின் வியாபார கூட்டமும் மிகவும் பெரியது, இவர்களை முஸ்லிம்கள் தாக்கி பொருட்களை கொள்ளையிட்டனர். உதாரணத்திற்கு, மேற்கண்ட பட்டியலில் கொடுத்துள்ளதின் படி, ஹிஜ்ரி 3ம் ஆண்டில் அல்கரதா என்ற இடத்தில் மக்காவின் வணிக கூட்டத்தை முஸ்லிம்கள் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்வங்களை கொள்ளையடித்தனர், கொள்ளையடித்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கு சொந்தமானதாகும். இந்த ஒரு பங்கு மட்டும் 20,000 திர்ஹம் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அப்படியானால், அந்த வியாபார கூட்டம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று பாருங்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு நடந்த வழிப்பறிக் கொள்ளையின் போது, மக்காவினரின் வணிக கூட்டத்திடம் இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை 2500 ஆகும். அப்படியானால், வணிக கூட்டத்தின் சிறப்பைப் பாருங்கள். 
இதன் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி ஒரு பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபார கூட்ட மக்களையும் உருவாக்கும் அளவிற்கு விசாலமான பட்டணமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் தற்கால புனித பூமி என்று கருதப்படும் மக்காவைப் பற்றிய தொல்லியல் ஆதாரங்களின் படி மக்கா என்பது ஒரு வறண்ட இடமாகும். அதிக மக்கள் வாழ்வதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் மக்காவிற்கு இல்லை. இப்படிப்பட்ட இடத்திலிருந்து எப்படி இத்தனை போர் வீரர்கள் மற்றும் வியாபாரிகள் எழும்பமுடியும்?  இது தான் சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்களின் மற்றொரு சந்தேகம். 
இஸ்லாமிய ஆதார நூல்கள் சொல்லும் விவரங்களின் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புரியும். 
இஸ்லாமியர்களின் படி, ஏழாம் நூற்றாண்டில்:
  • மக்கா ஒரு பெரிய நகரம்
  • குர்-ஆனின் படி நகரங்களின் தாய் (உம்முல் குர்ரா)
  • செல்வ செழிப்பான வியாபாரிகள் வாழ்ந்த நகரம்
  • பல ஆயிர போர் வீரர்களைப் பெற்றிருந்த நகரம்
  • சுற்றுப்புற நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை செல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நகரம்.
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நகரம் ஒரு சிறிய கிராமம் போல சில நூறு மக்களை மட்டும் கொண்ட கிராமமாக இருக்கமுடியாது. 
புனித நகரத்தின் ஜனத்தொகை கணக்கு - ஏறக்குறைய 48,000 பேர்
மக்காவின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்று நம்மிடம் கணக்கெடுப்பு இல்லை. முஸ்லிம்களிடம் இந்த எண்ணிக்கை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். மேற்கண்ட போர் வீரர்கள் மற்றும் வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாம் புனித நகரின் ஜனத்தொகையை ஓரளவிற்கு கணக்கிடலாம். இது நூறு சதவிகிதம் சரியான கணக்கீடு என்று கருதமுடியாது, ஆனால்,  இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத் தான் புனித நகரில் ஜனத்தொகை இருந்திருக்கமுடியும் என்ற முடிவிற்கு நாம் நிச்சயமாக வரலாம்.
நான் (உமர்) எப்படி புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை 48,000 என்று கணக்கிட்டேன் என்ற விவரங்கள் இக்கட்டுரையின் கடைசியில் "அடிக்குறிப்புகள் & மேலதிக ஆய்வுகள்" என்ற பகுதியில் இரண்டாம் [2] எண்ணில் கொடுத்துள்ளேன், அதனை படித்துக் கொள்ளவும்.
மக்காவும் அதன் வேளாண்மையும்:
மக்காவின் 48,000 ஜனங்களுக்கு உணவுகளை கொடுக்கும் அளவிற்கு மக்காவில் வேளாண்மை இல்லை. 
இதற்கு சில காரணங்களை நாம் கொடுக்கமுடியும்:
1) ஆசிரியர் கிப்சன் அவர்கள் சொல்வதின் படி, மக்கா ஒரு நகரமாக இருந்ததற்கான எந்த ஒரு தொல்லியல் ஆதாரமும் கி.பி. 900க்குள் கிடைக்கவில்லை.   
பார்க்க கட்டுரைகள்: 
2) மக்காவில் திராட்சை, மாதுளை, அத்தி போன்ற கனிவகைகள் மற்றும் இதர காய்கறி, தானியங்கள் விளைவதற்கு ஏற்ற சூழல்  இல்லை. மக்கா ஒரு வறண்ட பிரதேசம், அங்கு வேளாண்மை நடப்பதற்கு ஏற்ற வசதிகள் இல்லை. பேரிச்சை தவிர வேறு வகையான வேளாண்மை அங்கு இல்லை. 
3) மக்காவின் மழையின் அளவு (பொழிவு) வருடத்திற்கு 11.1 cm or 4.4 inch ஆகும் [3]. இந்த அளவு மழையின் பொழிவுள்ள இடங்களில் எந்த ஒரு பயிர் வகையின் வேளாண்மையும் நடைப்பெறாது. காய்கறிகள், தானியங்கள் மற்றும் கனிவகைகள் போன்றவைகளின் விவசாயம் நடைப்பெறாது. மக்காவில் பேரிச்சைத் தவிர வேறு எந்த ஒரு வகையான விவசாயமும் நடைப்பெற வாய்ப்புக்கள் இல்லை.
ஆக, இதன் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல அது வேறு ஒரு நகரமாக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் வருகிறது. சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், அந்த நகரம் பெட்ரா என்று கூறுகிறார்.
முடிவுரை:
இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல என்பதற்கு "இஸ்லாமிய நூல்கள் கொடுக்கும் அதன் ஜனத்தொகை விவரங்களும்" ஒரு காரணம் என்பதை இக்கட்டுரையில் கண்டோம். நம் கணக்கின் படி, குறைந்தபட்சம் 48,000 மக்களைக் கொண்ட நகரமாக புனித பூமி இருந்திருக்கவேண்டும். 
ஆனால், மக்காவின் தொல்லியல் விவரங்களின் படி, ஏழாம் நூற்றாண்டின் மக்கா, வறண்டதும் மக்கள் நடமாற்றமற்ற இடமாகவும் இருந்துள்ளது.  
இஸ்லாமிய நூல்கள் மக்காவின் ஜனத்தொகை 48,000 ஐ விட அதிகமாக இருந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கின்றன, ஆனால் தொல்லியல் விவரங்கள் இதற்கு சாத்தியமில்லை என்றுச் சொல்கின்றன.  அப்படியானால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புலனாகிறது.
இரண்டாவதாக, மக்காவின் பொழிவு (வருடாந்திர சராசரி மழையின், ஈரப்பதத்தின் அளவு) 11 சென்டிமீட்டர் ஆகும். இது வேளாண்மைக்கு ஏற்ற சூழல் அல்ல. இப்படி இருக்க, இவ்வளவு பெரிய ஜனத்தொகைக்கு எப்படி உணவுகளை வழங்க மக்காவினால் முடிந்திருக்கும்? இது சாத்தியமில்லை. அக்காலத்தில் இத்தனை ஆயிர மக்களின் உணவுத் தெவையைப் பூர்த்திச் செய்ய, அதிகமாக வேளாண்மையுள்ள இடம் தான் தேவை, மக்காவைப் போல உள்ள ஒரு வறண்ட பூமியில் இது சாத்தியமில்லை.
குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் சொல்லும் புனித பூமி "இன்று புனித பூமி என்று முஸ்லிம்கள் கருதும் மக்கா அல்ல" என்பது தெளிவாக விளங்குகிறது. 
அடுத்த தொடர் கட்டுரையில் சந்திப்போம்.

அடிக்குறிப்புகள் & மேலதிய ஆய்வுகள்
The bulk of the Confederate armies were gathered by the pagan Quraysh of Makkah, led by Abu Sufyan, who fielded 4,000 foot soldiers, 300 horsemen, and 1,000-1,500 men on camels.[14]
[2] ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித பூமியின் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும்?
ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு என்ற விவரம் என்னிடம் இல்லாததால், அதனை நான் கணக்கிட முயன்றுள்ளேன். முஸ்லிம்களிடம் இந்த விவரம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.
மேலே கொடுக்கப்பட்ட பட்டியலின் படி, அகழ்ப்போரில் தான் அதிகமான மக்காவினர் பங்கு பெற்றனர். எனவே, அதனையே நம் கணக்கிற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு போரில் ஈடுபட்டவர்களை நாம் கூட்டத்தேவையில்லை, காரணம் என்னவென்றால், ஒவ்வொரு போரிலும் புதியவர்களே ஈடுபட்டனர் என்றுச் சொல்லமுடியாது. அதே வேளையில், ஒவ்வொரு போரிலும் சில புதிய முகங்கள் பங்குபெற்று இருந்திருக்கலாம். நம் கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையில் போர்வீரர்கள் ஈடுபட்ட போரையே நாம் கருத்தில் கொள்ளலாம்.
அகழ்ப்போரில் 4000 காலாட்கள், 300 குதிரை வீரர்கள், 1,000 – 1500 வரை ஓட்டகத்தின் மீது வந்த வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்[1]. இதில் ஒட்டகத்தின் மீது வந்தவர்கள் 1000 லிருந்து 1500 வரை இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதில் நாம் மத்திய எண்ணை எடுத்துக் கொள்வோம், அதாவது 1250ஐ நம் கணக்கிற்கு எடுத்துக் கொள்வோம் (1000க்கும் 1500க்கும் இடையே இருக்கும் மத்திய எண் 1250 ஆகும்)
மக்காவிலிருந்து வந்த மொத்த வீரர்கள்: 5550 (4000+300+1250 = 5550). 
வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை இதில் பாதியாக கருதலாம், அதாவது 2500 என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நகரத்தின் பொருளாதார வளர்ச்சி வியாபாரிகள் மீதும், விவசாயிகள் மீதும், வேலை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீதும்  சார்ந்திருக்கும். நகரத்தில் உள்ள அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால், வியாபாரம் செய்வது யார்? எனவே, வியாபார கூட்டத்தையும் நாம் கணக்கில் கொள்வோம். 
இவ்விரண்டையும் கூட்டினால் 8050 வருகிறது (5550 போர் வீரர்கள் + 2500 வியாபாரிகள்). இந்த எண்ணிக்கையை ரவுண்ட் செய்து 8000 என்று கணக்கிட்டுக் கொள்வோம் (50ஐ குறைத்துக் கொண்டோம்).
இந்த 8000 பேரில் ஆண்கள் மட்டுமே இருப்பதாக கருதுவோம். இப்போது இவர்களின் குடும்ப நபர்களையும் கணக்கில் கொண்டு, குறைந்த பட்சம் இஸ்லாமிய புனித நகரின் ஜனத்தொகையை கணக்கிடுவோம். 
உமராகிய நான் என் கட்டுரைக்காக, எண்களை வேண்டுமென்றே அதிகரித்து காட்டுகிறேன் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக, சில அனுமானங்களை (Assumptions) நாம் விதித்துக் கொள்வோம், அதாவது சில விதிகளை தளர்த்திக் கொள்வோம். 
தளர்த்தப்படும் விதி 1: முஸ்லிம்களின் படி, இஸ்லாம் வருவதற்கு முன்பாக, மக்காவின் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததாம். இஸ்லாம் வந்து "ஒரு ஆண் நான்கு பெண்களை மட்டும்" திருமணம் செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்ததாம். மக்காவினர் இஸ்லாமை ஏற்காதவர்களாக இருந்தபடியினால், நான்கை விட அதிக திருமணங்கள் செய்தவர்களாக இருந்திருப்பார்கள். இருந்த போதிலும் மக்காவின் ஜனத்தொகை கணக்கிற்காக, நாம் ஒரு ஆணுக்கு ஒரு மனைவி என்பதையே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
தளர்த்தப்படும் விதி 2: ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால், ஒரு மனைவிக்கு ஒரு பிள்ளை என்று கணக்கிட்டாலும் எண்ணிக்கை எங்கேயோ சென்றுவிடும், இருந்தபோதிலும், நம் கணக்கில் ஒரு ஆணுக்கு இரண்டு பிள்ளைகள் (நாம் இருவர் நமக்கு இருவர்) என்றே எடுத்துக் கொள்வோம். 
தளர்த்தப்படும் விதி 3: ஒவ்வொரு போரின் போதும் அனேக மக்கா போர் வீரர்கள் மரித்தார்கள். இவர்களையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளவேண்டும், அது தான் சரியானது. இருந்தபோதிலும், இவர்களையும் நான் என் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 
ஏன் இந்த தளர்த்தும் விதிகள்:
இப்படி தளர்த்தும் விதிகளை நான் கொடுப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெற்றோர்கள் இருவர் (தாய் தந்தை) என்று நாம் கணக்கிடப்போகிறோம்.  பல நேரங்களில் ஒரே பெற்றோருக்கு இரண்டு/மூன்று/நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பார்கள். இந்த நான்கு பேரும் போரில் பங்கு பெற்று இருந்திருக்கலாம். இருந்த போதும், நாம் ஒவ்வொரு வீரருக்கும் பெற்றோர்கள் இருவர் என்று கணக்கிடப்போகிறோம். இது எப்படி சரியான எண்ணிக்கையாக இருக்கும்? என்ற கேள்வி எழும். நமக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை, புனித நகரில் எத்தனை ஆண்கள், பெண்கள் அப்போது இருந்தார்கள் என்ற கணக்கு நம்மிடம் இல்லை. எனவே, மேற்கண்ட தளர்த்தும் விதிகளை நான் கொடுத்துள்ளேன். ஒரு கணக்கில் தளர்த்துகிறோம், அடுத்த கணக்கில் சில அதிகபடியான எண்ணிக்கையை விட்டுவிடப்போகிறோம். நம்முடைய ஜனத்தொகை கணக்கெடுப்பு ஒரு பக்கமாக சார்ந்து வேண்டுமென்றே தவறாக கணக்கிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதற்காக, சில தளர்த்தும் விதிகளை நாம் வைத்துள்ளோம். நமக்கு ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை தெரிந்திருந்தால், இந்த கணக்கை நாம் செய்யவேண்டிய அவசியமிருக்காது. 
மேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு, கீழ்கண்ட கணக்கெடுப்பை பார்க்கவும்.
நம்முடைய முந்தைய கணக்கின் படி, மொத்தம் 8000 ஆண்கள் (போர் வீரர்கள் + வியாபாரிகள்) என்று நாம் கணக்கிட்டோம். இந்த 8000 பேருக்கு குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோர்களும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகள், பெற்றோர்கள் இருவர் என்று கருதினால், சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் 5 பேர் குடும்ப நபர்கள் என்று வருகிறது. ஆக, 8000 பேர்களின் குடும்ப நபர்களை கணக்கிடும் போது = 8,000 X 5 = 40,000 என்று வருகிறது. 
  • ஆண்கள் 8000 பேர்
  • அவர்களின் குடும்ப நபர்கள் 40,000 பேர் 
  • மொத்தம் 48,000 என்று கணக்கு வருகிறது. 
ஆக, முஹம்மதுவின் காலத்தின் புனித பூமியில் குறைந்த பட்சம் 48,000 மக்கள் இருந்திருக்கவேண்டும் என்று நாம் கணக்கிடலாம். ஆனால், உண்மையில் இதைவிட அதிகமான மக்கள் புனித நகரத்தில் இருந்திருக்கவேண்டும். (யாராவது இந்த கணக்கெடுப்பை இன்னும் மேம்படுத்த விரும்பினால், வேறு ஒரு கணக்கை கொண்டுவந்தால், எனக்கு தெரிவிக்கவும்).

http://isakoran.blogspot.in/2015/11/7.html

0 comments: