அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 14, 2013

நச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?


நச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?

 

[உமர் தம்முடைய தம்பியுடன் செய்த நச்சென்று நாலு கேள்விகள் தொடரின் முதல் உரையாடலை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

 

1)       நச்சென்று நாலு கேள்விகள்- 1 : இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?

 

சௌதி அரேபியாவிலிருந்து வந்த தன் தம்பி, இன்று உமரிடம் இன்னொரு கேள்வியை கேட்கிறார், இயேசு மன்னித்தது போல மன்னித்துக்கொண்டுச் சென்றால், நாட்டில் எப்படி சட்ட ஒழுங்கு நிலைநிற்கும்? தண்டனை கொடுக்கவில்லையானால் நாட்டில் குற்றங்கள் எப்படி குறையும்?  இவைகள் தான் பொதுவாக இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்விகளாகும். இந்த உரையாடல், மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகளை தருகின்றது.]

 

உமரின் தம்பி அப்துல்லாஹ், இன்று ஞாயிறு ஆராதனைக்கு தன் குடும்பத்தோடு சென்றார்.  அவர் எல்லோரோடும் உடகாராமல் சபையின் கடைசி நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு கவனித்துக்கொண்டு இருந்தார். அவர் ஜெபிக்கவில்லை, ஆராதிக்கவில்லை சபை ஆராதனை முதற்கொண்டு கடைசி வரை ஏதோ முனுமுனுத்துக்கொண்டு இருந்தார். அவரது உதடுகள் மட்டும் அசைந்துக்கொண்டு இருந்தன. அடிக்கடி ஜன்னலின் பக்கம் திருப்பி ஜன்னலுக்கு வெளியே இருக்கும் தோட்டத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார். ஆராதனை முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்டார்கள். மாலை நேரத்தில் அப்துல்லாஹ் உமரிடம் பேசுவதற்கு செல்கிறார். இனி என்ன நடந்தது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

அப்துல்லாஹ்: உமரண்ணா, நீங்க ஃபிரியா இருக்கீங்களா?

 

உமர்: தம்பி வா வா. நான் ஃபிரியா தான் இருக்கேன். இப்போது தான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.

 

அப்துல்லாஹ்: சில நிமிஷங்கள் நாம் பேசலாமா?

 

உமர்: நானும் உன்னோடு இன்று பேசலாம் என்று நினைத்தேன். இன்று நீ சபைக்கு வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக ஒருவன் இஸ்லாமை தழுவிவிட்டால், அவன் கிறிஸ்தவ சபையின் ஆராதனைக்குச் செல்லமாட்டான், ஆனால், நீ கொஞ்சம் வித்தியாசமானவன். இந்தியாவிற்கு வந்த முதல் வாரத்தின் ஆராதனையில் நீ கலந்துக்கொண்டது அப்பாவிற்கும் ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது.

 

அப்துல்லாஹ்: நான் சபைக்கு இன்று வந்தது உண்மை தான், ஆனால், நான் உண்மையாகவே ஆராதனையில் ஈடுபடவில்லை, நான் ஜெபிக்கவில்லை, பாடவில்லை, எதையும் செய்யவில்லை. வெறும் உட்கார்ந்துக்கொண்டு பிரசங்கத்தை கவனித்துக்கொண்டு இருந்தேன். நீங்க ரொம்ப சந்தோஷப்படாதீங்க!

 

உமர்: நீ இவைகளையெல்லாம் செய்யவில்லை என்று எனக்கும் தெரியும்.

 

அப்துல்லாஹ்: ஆனால், ஒன்றைமட்டும் நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதாவது, ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவிவிட்டான் என்று தெரிந்தும், நீங்கள் அனைவரும் என்னை சபையில் அனுமதித்து, சர்வ சாதாரணமாக நடந்துக்கொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

 

உமர்: இது தாண்டா கிறிஸ்தவம். இந்த சுதந்திரம் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்குமா? அதாவது ஒரு முஸ்லிம் கிறிஸ்தவனாக மாறிவிட்டபிறகு, அவனிடம் இஸ்லாமியர்கள் நடந்துக்கொள்ளும் விதம் எப்படி இருக்கும்? இன்னும் முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் அவனின் நிலை அந்தோ பரிதாபம்.

 

அப்துல்லாஹ்: சரி போகட்டும், அத விடுங்க, சில முக்கியமான கேள்விகளை இப்போது உங்களிடம் கேட்கவேண்டுமென்று, மதியத்திலிருந்து தூங்காமல் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

 

உமர்: இன்று பாஸ்டர் கொடுத்த செய்திலிருந்து தான் கேள்விகளை நீ கேட்கப்போகிறாய் என்று நினைக்கிறேன்.

 

அப்துல்லாஹ்: உங்களை யார் ஏமாற்ற முடியும்? நிச்சயமாக அந்த பிரசங்கத்திலிருந்து தான் கேள்விகள், ஆனால், நடைமுறைக்கு எப்படி இயேசுவின் போதனைகள் ஒவ்வாததாக இருக்கிறது என்பதை உங்களுக்கு விவரிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எனக்கு ஆசை. அந்த ஆசை இன்று பூர்த்தியாகும் என்று நினைக்கிறேன். 

 

உமர்: உன் ஆசையின்படி ஆகக்கடவது. இதோ டீ வந்துவிட்டது,  டீயை குடித்துவிட்டு நாம் பேசலாம்.

 

[இருவரும் டீயை ருசி பார்க்கிறார்கள், உரையாடல் தொடர்கிறது]

 

அப்துல்லாஹ்: இதோ என் கேள்விக்கணைகள். இன்று உங்க பாஸ்டர் செய்தி கொடுக்கும் போது, மத்தேயு 18ம் அதிகாரத்திலிருந்து மன்னிப்பு என்ற தலைப்பில் பேசினார். மத்தேயு 18:21, 22ம் வசனங்கள் இப்படி கூறுகின்றன:


அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.   அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.  (மத்தேயு 18:21,22)

 

மேலும் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு இயேசு தண்டனை கொடுக்காமல் மன்னித்ததாக கூறினார்.

 

இப்போது என் கேள்விகள் என்னவென்றால்,

  • குற்றம் செய்தவனுக்கு தண்டனை கொடுக்காமல் மன்னித்துக்கொண்டு இருந்தால், நாடு உருப்படுமா?
  • சட்டத்திற்கு விரோதமாக விபச்சாரத்தை செய்த பெண்களை மன்னித்தால், நாட்டில் எப்படி ஒழுக்கம் நிலை நிற்கும்?
  • இயேசுவின் மன்னிப்பு சம்மந்தப்பட்ட மேற்கண்ட போதனைகள் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன? 

 

எப்படி சரியாக மடக்கினேன், பாத்தீங்களா? இது தான் நெத்தியடி என்றுச் சொல்வது? ஹா… ஹா.. ஹா..

 

உமர்: அடடே - ஒரு முஸ்லிமுக்கு கூட நகைச்சுவையாக பேசுமுடிகிறதே! தம்பி நீ தங்கக்கம்பி.

 

அப்துல்லாஹ்: ஐஸ் வெச்சது போதும், பேச்சை மாத்தாம விஷயத்துக்கு வாங்க.

 

உமர்: அதாவது சின்ன பசங்களை மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்லும் போது, ஊசி போடுவதற்கு முன்பாக, மருத்துவர் கொஞ்சம் அத இத பேசி, அந்த பையனை குஷி படுத்துவார், பேசிக் கொண்டேஇருந்து, ஊசி போட்டுவிடுவார். அதே  போலத்தான், கொஞ்சம் உன்னை குஷி படுத்துவிட்டு, ஊசி போடலாம் என்று நினைக்கிறேன்.

 

அப்துல்லாஹ்: பேசியது போதும், ஊசி போட ஆரம்பியுங்க. ஒருவேளை நான்  போட்ட ஊசி உங்களுக்கு அதிகமாக வலிக்குதா?

 

உமர்: எனக்கு பிரச்சனை இல்லை, நீ போடுவதெல்லாம் பொம்மை ஊசி தானே, எனக்கு வலிக்காது.

 

சரி விஷயத்திற்கு வருகிறேன். தன் சகோதரன் தனக்கு விரோதமாக தவறு செய்தால், எத்தனை முறை மன்னிக்கவேண்டும், ஏழுமுறையாக என்று பேதுரு  கேட்டார். அதற்கு இயேசு ஏழு எழுபது முறை என்றுச் கூறினார்.  இதனை அடிப்படையாக வைத்து, நாடு எப்படி உருப்படும்? சட்ட ஒழுங்கு எப்படி நிலைநிற்கும் என்று கேட்கிறாய். சரி, இப்போது உன்னுடைய கேள்விக்கான பதிலை காண்போம்.

 

இயேசுவிடம் கேள்வி கேட்டது யார்?

 

அப்துல்லாஹ்: பேதுரு என்று பெயர் கொண்ட இயேசுவின் சீடர்.

 

உமர்: தனக்கு விரோதமாக யார் தவறு செய்வதாக, பேதுரு கூறுகிறார்?

 

அப்துல்லாஹ்: இதைத்தான் வசனம் தெளிவாக சொல்கிறதே – "பேதுருவின் சகோதரன்" என்று?

 

உமர்: இப்போது என் கேள்வி என்னவென்றால் – பேதுரு தன் சகோதரன் செய்த குற்றம் பற்றி கேள்வி கேட்கும் போது, இயேசு அதற்கு பதில் அளித்த போது, இந்த நிகழ்ச்சியில் நாடு எங்கேயிருந்து வந்தது?

 

நான் கேட்பது உனக்கு புரியுதா? அதாவது தன் சகோதரன் தனக்கு எதிராக குற்றம் செய்யும் பொது, அதனை ஏழு முறை மன்னிக்க தயாராக இருப்பதாக பேதுரு கூறுகிறார். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், அதிகபட்சம் ஏழு முறை மன்னித்தால் போதும் என்று நினைக்கிறேன் என்ற தோரணையில் பேதுரு கேள்வி கேட்கிறார், அதற்கு இயேசு பதில் சொல்கிறார். இந்த உரையாடலில் நாடு எங்கே வந்தது? குடும்ப நபர்களின் மத்தியில் தவறுகள் செய்தால், அதனை இத்தனை முறை நான் மன்னித்தால் போதுமா? என்று கேள்வி கேட்கப்பட்டால், இல்லை ஏழு எழுபது முறை என்று இயேசு பதில் அளிக்கிறார். குடும்ப சங்கதிகளில் நாடு எப்படி வந்தது?

 

நாட்டின் அரசியல் சாசனம் அல்லது குற்றவியல் சட்டம் பற்றி இயேசு பேசியதாக நீயாகவே எப்படி கற்பனை செய்துக்கொள்கிறாய்?

 

பதில் சொல் இது தான் வசனங்களை படிக்கின்ற இலட்சனமா?

 

அப்துல்லாஹ்: ம்ம்ம்ம்ம்ம்

 

உமர்: என்ன பதிலைக்காணோம்… கேள்விக்கணைகள் என்று சொன்னாயே! என்ன ஆனது?

 

இயேசுவின் முதல் வருகை ஒரு இராஜ பவனியாக இருக்கவில்லை, அது ஒரு தாழ்மையான ஆட்டுக்குட்டியைப் போல சாந்தமாக இருந்தது. அவர் முதல் வருகையில் மக்களை நியாயம் தீர்க்க,  தண்டனை கொடுக்கவரவில்லை, அதற்கு பதிலாக தன்னையே தியாகம் செய்து,  அவர்களுக்காக மரிக்க வந்தார்.

 

அப்துல்லாஹ்: சரி, இயேசு மற்றும் பேதுருவின்  இந்த உரையாடல் அரசாங்கம் கடைபிடிக்கவேண்டிய சட்டத்தைப் பற்றி பேசவில்லை, இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லெரிந்து கொல்லவேண்டும் என்ற தோராவின் அல்லது மோசேயின் சட்டத்தையும் மீறி இயேசு மன்னித்தாரே, இது எப்படி சரியானதாக இருக்கும்? சட்டத்தை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, அதனை கையில் எடுத்துக்கொண்டு, அந்த பெண்ணையும் மன்னித்துவிட்டாரே, இது நியாயமா? இப்படி சட்டத்திற்கு விரோதமாக விபச்சாரம் செய்யும் நபர்களை மன்னித்தால் நாட்டில் ஒழுக்கம் எப்படி இருக்கும்? இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீங்க…. அண்ணே!?

 

உமர்: குற்றம் செய்தால், ஒரு இராஜாவாக அல்லது அரசாங்கமாக இருந்து எப்படி இயேசு தண்டனை கொடுப்பார் என்பதை உனக்கு பிறகு விளக்கமாக சொல்கிறேன், இப்போது இந்த பெண்ணைப் பற்றிய நிகழ்ச்சியைப் பற்றி கொஞ்சம் உனக்கு நான் விளக்குகிறேன்.

 

முதல் நூற்றாண்டு சரித்திர பின்னணியையும், இயேசுவிடம் அவர்கள் கேட்ட கேள்வியின் உள் அர்த்தத்தையும் உனக்கு நான் விளக்குகிறேன், அப்போது தான் உன் மூளையில் விஷயங்கள் சரியாக சென்று அடையும்.

 

இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யார்?

 

அப்துல்லாஹ்: யூத தலைவர்கள், இதில் என்ன சந்தேகம்.

 

உமர்: இந்த யூத தலைவர்கள் யார், மத தலைவர்களா? அல்லது அரசியல் தலைவர்களா?

 

அப்துல்லாஹ்: இவர்கள் யூத மத தலைவர்கள், அதாவது வேதபாரகர்கள் என்றும் பரிசேயர்கள் என்று அழைக்கப்பட்ட மத தலைவர்கள் (யோவான் 8:3)

 

உமர்: ஆக, இவர்கள் அரசியல் தலைவர்கள் அல்ல.

 

விபச்சாரத்தை செய்ய குறைந்தபட்சம் எத்தனை பேர் வேண்டும்? மற்றும் அவர்கள் குறைந்தபட்சம் யாராக இருக்கவேண்டும்?

 

அப்துல்லாஹ்: இது என்ன வேடிக்கையாக இருக்கிறதே! ஒரு ஆணும் பெண்ணும் வேண்டும்.

 

உமர்: அப்படியானால், அந்த யூத மத தலைவர்கள் ஆணையும், பெண்ணையும் கொண்டு வந்தார்களா?

 

அப்துல்லாஹ்: இல்லை, பெண்ணை மட்டும் கொண்டு வந்தார்கள்.

 

உமர்: ஏன் பெண்ணை மட்டும் கொண்டு வந்தார்கள்?

 

இவர்கள் உண்மையாக சட்ட ஒழுங்கை காப்பாற்றவேண்டும் என்ற ஆவலோடு அந்த பெண்ணை கொண்டுவரவில்லை, அதற்கு பதிலாக இயேசுவை பிரச்சனையில் சிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்துள்ளார்கள் என்பது தெளிவாக புரிகிறது அல்லவா? இன்னொரு முறை இதே போல அரசாங்கத்திற்கு வரி தருவது  நியாயமா இல்லையா என்று இயேசுவிடம் கேட்டார்கள். ஒரு உண்மையான யூதன் நிச்சயமாக ரோம அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது தவறு என்றுச் சொல்லுவான், இதே போல இயேசு சொன்னால், அரசரிடம் இவர் பற்றி புகார் கூறலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

 

அப்துல்லாஹ்: சரி, இன்னும் தெளிவாக சொல்லுங்க. அந்த தலைவர்கள் தான் மோசேயின் சட்டத்தின் படி கல்லெரிய வேண்டும் என்று சொன்னார்களே! அதனை ஏன் இயேசு நிறைவேற்றவில்லை?

 

உமர்: சொல்கிறேன் இரு.  இயேசுவிற்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமாக இருந்தது, அனேக அற்புதங்கள் செய்து, சமுதாயத்தின் தாழ்ந்த நிலையில் இருந்த மக்களோடு அவர் சேர்ந்து இருந்ததினால், அவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே சென்றது.  மேலும் யூத தலைவர்களின் செல்வாக்கிற்கு, பணத்திற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணமாக இயேசுவின் போதனைகள் அனேகரை கவர்ந்தது.

 

யூத மத தலைவர்கள், இயேசுவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

முதலாவது இயேசு மோசேக்கு எதிராக பேசுபவராக செயல்படுபவராக காட்டிவிட்டால், மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையும். அதே போல, அரசாங்கத்திற்கு எதிராக இயேசு செயல்படுபவர் என்று நிருபித்துவிட்டால், ரோம அரசாங்கம் தானாக இவரை சிறையில் அடைத்துவிடும். எனவே யூத தலைவர்கள்,  மேற்கண்ட காரணங்களுக்காக, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மட்டும் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு சிக்கலான கேள்வி கேட்டனர்.

 

அப்துல்லாஹ்: இதில் என்ன சிக்கல் இருக்கிறது? மோசேயின் சட்டம் சொல்வதின் படி தண்டனை கொடுங்கள் என்று கேட்டனர், இது எப்படி சிக்கலான கேள்வியாக்கும்?

 

உமர்: இங்கே தான் ஒரு உண்மையான சிக்கல் இருக்கிறது.

 

ஒரு உண்மையான  யூதன் மோசேயின் சட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்யமாட்டான். இயேசு தண்டனை கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருந்தால், "பார்த்தீர்களா! நம்முடைய மோசேயின் சட்டத்தையே மீறும்படி இவர் பேசுகிறார்" எனவே, இவரை நம்பாதீர்கள்! இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றுச் சொல்லி மக்களின் மனதில் இயேசுவிற்கு இருக்கும்  செல்வாக்கை குறைக்க முயற்சி எடுத்து இருப்பார்கள் யூத தலைவர்கள்.

 

ஒரு வேளை, ஆம், மோசேயின் சட்டத்தின் படி தண்டனை கொடுங்கள் என்றுச் சொல்லி, இயேசுவும் சேர்ந்து கல்லெரிந்து அப்பெண்ணை கொன்று இருந்தால், அரசாங்கத்திடம் இவரை ஒப்புக்கொடுத்து இருப்பர்கள். ஏனென்றால், அந்த காலத்தில் இஸ்ரவேல் நாட்டை ரோமர்கள் ஆட்சி புரிந்தார்கள். ரோமர்களின் சட்டம் தான் நாட்டில் அமுலில் இருந்தது.  யூதர்களின் நியாயப்பிரமாணத்தின் சட்டம் அமுலில் அன்று இல்லை. இயேசுவை அவர்கள் கைது செய்யும் போது கூட, அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்களே தவிர தாங்களாகவே தண்டனை கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

 

இயேசு அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தி, அவரை அரசரிடம் ஒப்புக்கொடுக்க அவரது வாயிலிருந்து எப்போது வார்த்தைகள்வரும் என்று காத்திருந்தனர்.

 

எனவே, இயேசு ஆம் என்றாலும் பிரச்சனை, இல்லை என்றாலும் பிரச்சனை. ஆனால், இயேசு ஆமுக்கும் இல்லையிக்கும் இடையே இன்னொறு ஆமேன் போட்டார்.

 

அதாவது, உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல்லை இப்பெண்ணின் மிது எறியட்டும் என்றார். எல்லாரும் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக, முக்கியமாக அந்த யூத மத தலைவர்கள் தங்களின் யுக்தி தோல்வி அடைந்துவிட்டதை உணர்ந்தவர்களாக சென்றுவிட்டார்கள்.

 

ஆக, இந்த நிகழ்ச்சியிலும் இயேசு நாட்டின் சட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. தன்னை பிரச்சனையில் சிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவர்களின் யுக்திகளை அழித்துவிட்டார். அவ்வளவு தான்.

 

அப்துல்லாஹ்: ம்ம்…..இப்போது தான் கொஞ்சம் புரியுது.

 

உமர்: புரிந்தாலும் புரியாத மாதிரி நடிப்பதில் நீ கில்லாடியாச்சே, எப்படி உண்மையை  ஒப்புக்கொள்வாய்?

 

அப்துல்லாஹ்: சரி, எனக்கு இதைச் சொல்லுங்கள். குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டுமா இல்லையா? இதைப் பற்றி இயேசு என்ன கூறுகிறார்?

 

உமர்: இயேசு தம்முடைய முதல் வருகையில் தண்டிக்க வரவில்லை, தன்னையே ஒப்புக்கொடுக்க வந்தார். காணாமல் போன ஆடுகளை தேடவந்தார். நமக்காக தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து, நம் தண்டனையை தம்மீது ஏற்றுக்கொண்டு நமக்கு சாந்தியையும், இறைவனிடம் ஒன்று சேருகின்ற வழியையும் கொடுக்க வந்தார்.

 

ஆனால், அவரது இரண்டாவது வருகை எப்படி இருக்கும் என்று உனக்கு ஏற்கனவே தெரியும் என்று நம்புகிறேன். அவர் இராஜாதி இராஜாவாக வருவார். மேகங்கள் மேல் தம்முடைய தூதர்களோடு வருவார், அனைவரையும் நியாயந்தீர்ப்பார் (தம்பி நீ நபி என்று நம்புகிற முஹம்மதுவும் இயேசு சிங்காசனத்தில் உட்கார்ந்து இருக்கும்போது, அவருக்கு முன்பாக தீர்ப்பிற்காக நிற்பார்).

 

அப்போது குற்றம் புரிந்த ஒவ்வொருவனுக்கு தண்டனை அளிப்பார். உனக்கு நேரமிருந்தால், வெளிப்படுத்தின  விஷேஷத்தை ஒரு முறை படி.

 

அப்துல்லாஹ்: இயேசு இரண்டாம் வருகையில் இராஜாவாக வரட்டும், இராஜாதி இராஜாவாக வரட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர் முதல் வருகையில் வந்திருக்கும் போது அரசாங்கம், அரசு, குற்றம் புரிந்தவர்களுக்கு தரப்படவேண்டிய தண்டனைகள் போன்றவைகள் பற்றி என்ன கூறினார்?  எங்கள் நபி முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அனேக சட்டங்களை கொடுத்துள்ளார்.

 

என்னை கேட்டால், இயேசு நாடு பற்றி அக்கரை கொள்ளவில்லை, சட்டம் பற்றி அக்கரை கொள்ளவில்லை, குற்றம் புரிவபர்களை தண்டித்து, நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்யவேண்டும் என்று அவர் ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. எப்போது பார்த்தாலும் மன்னிப்பு, மன்னிப்பு என்று சொல்லிக்கொண்டே இருந்தால், நாடு எப்படி முன்னுக்கு வரும், நாட்டில் எப்படி குற்றம் குறையும்?

 

உமர்: மறுபடியும் வேதாளம் மரம் ஏறிவிட்டதா? இவ்வளவு சொல்லியும் நீ மறுபடியும் பழைய கதைக்கே வருகிறாயே. சரி உன்னுடைய கடைசி விமர்சனத்திற்கும் பதில் தருகிறேன். அதாவது…..

 

அப்துல்லாஹ்: போதும்.. போதும்… இப்போது வேண்டாம், இன்னொருமுறை பார்ப்போம். நான் போய் என் நண்பர்களை பார்க்கவேண்டும். நான் வருகிறேன். நல்ல  சிந்திச்சு வையுங்க, நான் மேலே சொன்ன கேள்விகளுக்கு உங்களால் புதிய ஏற்பாட்டு சுவிசேஷங்களில் ஒரு பதிலும் கிடைக்காது.  உங்களுக்கு என் வாழ்த்துக்கள்…

 

உமர்: தம்பி இருடா……

போயிட்டானா…. ம்ம்ம்…  ஒரு நாள் நீ திரும்புவருவாய்.

 

[உமர் கண்களை முடி ஜெபிக்கிறார்]

 

அன்பான பிதாவே, என் தம்பியை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். அவனை சுகபத்திரத்தோடு காத்துக்கொள்ளும். உம் அன்பை அவன் மறுபடியும்  ருசி பார்க்க இன்னொரு வாய்ப்பை அவனுக்குத் தாரும். அவன் நல்ல நண்பர்களிடம் நட்பு கொள்ள உதவி புரியும்.  அவனை பிரச்சனையில் மாட்டவைக்கும் நட்பிலிருந்து அவனை காத்துக்கொள்ளும், அவனுக்கு இரட்சிப்பின் சந்தோஷத்தை மறுபடியும் தாரும். இயேசுவின் இனிய பெயரில் வேண்டிக்கொள்கிறேன், ஆமென்.

 

அடுத்த "நச்சென்று நாலு கேள்வி" தொடரில் சந்திப்போம்.


Tamil Source : http://isakoran.blogspot.in/2013/03/2.html

0 comments: