வருகிறவர் ...
கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் பல வெளிப்படையான சான்றுகள்
சாம் ஷமான்
இயேசுவும் அவரது சீடர்களும் இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி முன்வைத்த அனேக வெளிப்படையான ஆதாரங்களை இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த கட்டுரையில், புதிய ஏற்பாட்டு இறை எழுத்துக்கள் எப்படி சர்வ வல்லவராம் இயேசுக் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை பறைசாட்டுகின்றன என்பதை பல தலைப்புகளில் காணப்போகிறோம், அதாவது, மெய்யான இறைவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் இயேசு செய்கிறார் என்பதை வெளிக்காட்டும் வசனங்களை காண்போம். அவரது தனித்தன்மையான பட்டப்பெயர்கள், அவரது செயல்பாடுகள் போன்றவற்றைக் காண்போம். இவைகளில் முக்கியமாக, உலகத்தை தீர்ப்பு தீர்க்க இறைவன் தம்முடைய சேனைகளோடு (தூதர்களோடு) வரும் நிகழ்ச்சி மற்றும் செயல்பற்றி காண்போம்.
யெகோவா தேவன் (Yahweh)
ஆரம்பமாக, எபிரேய பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்களின் படி, யெகோவா தேவன் தம்மை "முதல் மற்றும் கடைசியானவர்" என்றுச் சொன்ன வாக்கியங்களை காண்போம்.
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே . (ஏசாயா 48:12)
இதே எபிரேய பைபிள் யெகோவா தேவன் மேகங்களில் பயணிக்கிறார் என்றும் சாட்சி சொல்கிறது. அதாவது மேகங்கள் தம்முடைய இரதமாக கொண்டு பயணிக்கிறார் என்று நாம் சொல்லலாம்.
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய், இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது . அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள். மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று. கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். (யாத்திராகமம் 24:9-11, 15-18)
யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். (உபாகமம் 33:26)
ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். (சங்கீதம் 104:2-3)
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. (நாகூம் 1:3)
மேலும், யெகோவா தேவன் பரலோகத்தின் சேனைகளோடு உலகத்தை தீர்ப்பு தீர்க்க வருகிறார் என்று பைபிள் சொல்கிறது.
சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது . மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். (ஏசாயா 40:9-11)
நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம்வரைக்கும் கூறுகிறார் . (ஏசாயா 62:11)
(மேலும் பார்க்க சங்கிதம் 62:12; நீதிமொழிகள் 24:12; எரேமியா 11:20; 17:10; 29:23)
அடுத்த கீழ்கண்ட வசனம் என்ன சொல்கிறதென்றால், யெகோவா தேவன் தம்முடைய பாதத்தை ஒலிவ மலையில் வைத்தவுடன் அது இரண்டாக பிளந்துவிடுகிறது என்றுச் சொல்கிறது.
இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள் . (சகரியா 14:1-5)
அல்லாஹ் (Allah)
குர்ஆனின் படி, மேகங்களில் வருவதும் அதாவது பரலோக தூதர்களுடன் வந்து உலகத்தை நியாயம் தீர்ப்பது "இறைவன் செய்யக்கூடிய செயல்" ஆகும்.
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும். (குர்-ஆன் 2:210)
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது , அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். (குர்-ஆன் 89:21-23)
மேலும், இஸ்லாமிய வேதத்தின் படி, "முதலாவதானவர், மற்றும் கடைசியானவர்" என்பது தெய்வீகத்தன்மை உடையதாகும்.
(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே , பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.(குர்-ஆன் 57:3)
இஸ்லாமின் படி, இப்படிப்பட்ட தனிப்பட்ட பெயர்கள், தகுதிகள் அனைத்தும் இறைவனுக்கு உரியதாகும். மேலும் ஒரு மனிதன் எவ்வளவு பெரிய மேன்மை உடையவனாக இருந்தாலும், இறைவனுக்கு கொடுக்கப்படும் பெயர்கள்/செயல்கள் தனக்கு உரியது என்றுச் சொல்ல அவனுக்கு அனுமதி இல்லை.
ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து (The Lord Jesus Christ)
ஆச்சரியப்படும் விதமாக, நாம் மேற்கண்ட அனைத்து பெயர்களையும், குணங்களையும், செயல்களையும் இயேசுக் கிறிஸ்துவிற்கு புதிய ஏற்பாடு சூட்டுகிறது.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ஒரு மனுஷ குமாரனாக, உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்து பரலோகத்திலிருந்து மேகங்களில் வருவார், தம்முடைய தூதர்களோடு உலகை நியாயந்தீர்க்க வருவார். இதே இயேசுக் கிறிஸ்து தான், முதலாமானவர் மற்றும் கடைசியுமானவர், மேலும் இருதயங்களின் நினைவுகளை அறிந்தவர், ஞானிகளை பரிட்சிக்கின்றவர், அதாவது ஒவ்வொரு மனிதன் தான் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்கு பலன் அளிப்பவர் இயேசு ஆவார்.
இப்போது நாம் புதிய ஏற்பாட்டிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள்களாக காட்டப்போகிறோம். அவைகளை விளக்கப்போவதில்லை, வசனங்களை அப்படியே காட்டப்போகிறோம். இயேசுக் கிறிஸ்துவும், அவரது சீடர்களும் "கிறிஸ்துவே யெகோவா தேவன்" என்பதை எப்படி அடையாளப்படுத்தினார்கள் என்பதை இதன் மூலம் வாசகர்கள் அறிந்துக்கொள்ளலாம். அதாவது, எபிரேய பழைய ஏற்பாடும், குர்ஆனும் சொல்லும் "இறைவனுக்கு மட்டும் இருக்கும் பெயர்கள், செயல்கள்" போன்றவை எப்படி இயேசுவிற்கு சூட்டப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
மாற்கு (Mark)
ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார். (மாற்கு 8:38)
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:61-62)
மத்தேயு (Matthew)
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 13:36-43)
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்தேயு 16:27)
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். (மத்தேயு 25:31-46)
லூக்கா (Luke)
சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். (லூக்கா 18:8)
அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். (லூக்கா 21:27,28,35)
யோவான் (John)
பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51)
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:22-23, 27-29)
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:1-6)
பவுல் (Paul)
ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. (1 தெச 1:9-10)
எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; (1 தெச 2:9)
இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. (1 தெச 3:13)
நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (2 தெச 1:5-10)
நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். (2 தெச 2:8)
அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். (1 கொரிந்தியர் 1:7-8)
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலிப்பியர் 3:20,21)
நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (2 தீமோத்தேயு 4:1, 8, 18)
யாக்கோபு (James)
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். (யாக்கோபு 5:7-9)
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? (யாக்கோபு 4:12)
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: (யாக்கோபு 1:1)
என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. (யாக்கோபு 2:1)
யாக்கோபு தாம் தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும் ஊழியக்காரன் என்று மட்டும் சொல்லவில்லை, மேலும், கிறிஸ்து ஆண்டவராகவும், மகிமை பொறுந்தியவராகவும் இருக்கிறார் என்று கூறுகிறார். அதாவது, தேவனுடைய மகிமை என்பது அவரது குணங்களில் ஒன்றாகும், அந்த குணமாகிய மகிமையை இயேசுக் கிறிஸ்து பெற்று இருப்பதினால், அவரது தெய்வீகத்தன்மை வெளிப்படுகிறது.
ஆகையால், சீக்கிரமாக வரப்போகிற ஆண்டவர், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து தான் என்பதில் யாக்கோபிற்கு எந்த ஒரு சந்தேகமுமில்லை.
மற்றவர்களைப் போலவே, யூதாவும் தான் இயேசுவின் ஊழியக்காரன் என்று கூறுகிறார், மேலும், இயேசுவே நம்முடைய நித்திய ஆண்டவராகவும், பரிசுத்த தூதர்களோடு வரப்போகும் தேவனாகவும் இருக்கிறார் என்றும், அவர் வந்து தீயவர்களை நியாயந்தீர்த்து, தம்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கிறவராகவும் இருக்கிறார் என்றும் எழுதுகிறார்.
யூதா (Jude)
இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது. . . ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், . . . தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், . . . நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, . . .தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். . . . தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென் (யூதா 1:1, 4, 14-15, 17, 20-21, 25)
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் (Revelation of John)
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.. . அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:7, 12-18)
தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.. . . அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். (வெளி 2:18-20, 23)
பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. (வெளி 19:11-16)
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். . . . சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். . . .நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (வெளி 22:12-13, 16, 20-21)
முடிவுரை:
இயேசு மற்றும் அவரது சீடர்களின் சாட்சி மிகவும் தெள்ளத்தெளிவாக உள்ளது. இயேசுக் கிறிஸ்து தான் "முதலும் முடிவுமானவர்" என்றும், உயிர்த்தெழுந்தவர் மேகங்கள் மீது தம் தூதர்களோடு வந்து, ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கு ஏற்ற நியாயத்தீர்ப்பு செய்வார் என்று உரிமை பாராட்டுவதின் மூலமாக, கிறிஸ்துவும், புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசு என்பவர், சர்வ வல்ல இறைவன் தான் என்பதை பறைசாற்றியுள்ளனர். இந்த உண்மையை தவறு என்றுச் சொல்ல மற்றவர்களுக்கு எந்த வழியும் இல்லை.
இதுமட்டுமல்ல, இதுவரை கண்ட விவரங்களில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம் என்னவென்றால், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் சொல்லும் விவரமாகும், அதாவது இயேசு எந்த இடத்திலிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ (ஒலிவ மலை), அதே ஒலிவ மலைமீது யெகோவா தேவனின் பாதங்கள் தொடும், அப்போது அது இரண்டாக பிளந்துவிடும் என்று சகரியா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார்.
இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். (அப் 1:9-12)
இதன் அர்த்தம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு சகரியா தீர்க்கதரிசி, உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்து வானத்திலிருந்து தம் மகிமை பொருந்திய சரீரத்தோடு இறங்குவார் என்பதை கண்டு தீர்க்கதரிசனமாக எழுதியுள்ளார்.
இதுவரை கண்ட விவரங்களின் வெளிச்சத்தில் கண்டால், "சரீரத்தில் வந்த யெகோவா தேவன் தான் இயேசுக் கிறிஸ்து என்று பைபிள் நமக்கு தெளிவாக சொல்லவில்லையா"? (அவர் பிதாவாக, பரிசுத்த ஆவியானவராக இல்லாமல் இருந்தாலும், சரீரத்தில் வெளிப்பட்ட யெகோவா தேவனாக இருக்கிறார்)
ஆமென், வாரும் யெகோவா இயேசுவே, வாரும்.
உம்மை உண்மையாக நாங்கள் நேசிக்கிறோம், நித்திய நித்தியமாக ஆராதிக்கிறோம். கனத்தையும், மகிமையையும் துதியையும் பெற தகுதியானவர் நீர் மாத்திரமே. ஆமேன்.
ஆங்கில மூலம்: He Who Comes – More Explicit Evidence for the Deity of Christ
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
0 comments:
Post a Comment