அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 30, 2013

அறிமுகம் - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்


அறிமுகம் - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்

கடந்த சில ஆண்டுகளில் விளைந்த மத எழுப்புதல்களில் மிகப்பெரிய மதஎழுப்புதல் கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களிடம் அல்லாமல், இஸ்லாமை பின்பற்றுபவர்களிடம் உண்டாகியிருக்கிறது என்றுச் சொல்வார்கள். கிறிஸ்த‌வத்திற்கு வெளியே, மிஷனரி தரிசனத்தோடு செயல்பட்டு பரப்பப்படுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும். இஸ்லாமிய பிரச்சாரக்காரர்களின் முக்கிய நோக்கம் "முழு உலகத்தையும் இஸ்லாமுக்கு மாற்றுவது" என்பதாகும், இதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இஸ்லாமியரல்லாதவர்களை இஸ்லாமுக்கு அழைக்கவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அவர்களை முஹம்மதுவின் போதனைகளின்படி நடக்கச் செய்வதும், மத சடங்குகளை செய்யச் செய்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இஸ்லாமியரல்லாதவர்களை அழைக்கும் இந்த அழைப்பிற்கு "தாவா (dawah)" என்று பெயராகும்.

துரதிஷ்டவசமாக, இஸ்லாமியர்களில் சிலர், எல்லாருமல்ல இந்த மத எழுப்புதலினால் உந்தப்பட்டு, கிறிஸ்தவத்தை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்களின் இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட மேன்மையானது என்று எண்ணிக்கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் தங்கள் இஸ்லாமின் மேன்மை நிருபிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் இந்த அழைப்பு "மரியாதைக்குரிய அழைப்பாக இருப்பதில்லை". இன்னொரு மனிதனின் மார்க்கத்திற்கு எதிராகவும், பரிசுத்த போதனைகளுக்கு எதிராகவும் ஒரு முரட்டுத்தனமாக வழிமுறையை இஸ்லாமியர்கள் பின்பற்றி தாக்குகிறார்கள், ஆனால், இது சமுதாயத்தில் வெறுப்புணர்ச்சியையும், அமைதியின்மையையுமே உண்டாக்கும். இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும், அதாவது கிறிஸ்தவர்களில் சிலர் இவர்களைப் போலவே நடந்துக்கொள்கிறார்கள் என்பதாகும். கிறிஸ்துவைப்போல சிந்தை இல்லாத கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய நபியை கேலி செய்து, முஸ்லிம்களையும் அவர்களின் பாரம்பரியங்களையும் தாக்குகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. முஹம்மதுவின் காலத்திலும், கிறிஸ்தவர்களில் இப்படிப்பட்டவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையை கேள்வி கேட்டு கேலி செய்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் குறித்து குர்‍ஆன் கீழ்கண்ட வசனத்தின் மூலமாக எச்சரிக்கை விடுகின்றது:

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.......முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். . . . .. ஸூரத்துல் மாயிதா (5):51,57

முஹம்மதுவின் ஆர்வத்தையும், உணர்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்த்த யூத மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான எச்சரிக்கை வசனத்தை குர்‍ஆன் பதிவுசெய்துள்ளது. அதே நேரத்தில் அதே குர்‍ஆன் கிறிஸ்தவர்கள் பற்றி சில வெளிப்படையான நல்ல விஷயங்களையும் சொல்லியுள்ளது என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். இந்த கிறிஸ்தவர்கள் பெயர்க் கிறிஸ்தவர்கள் அல்ல, இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாவார்கள், இவர்கள் கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்கள். கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களை கவனியுங்கள்.

.....நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. ஸூரத்துல் மாயிதா (5):82

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்."எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.). ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):52,53

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.ஸூரத்துல் அஸ்ஸஃப்(61):14

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):55

பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம். ஸூரத்துல் ஹதீத்(57):27

அனேக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் தெரிந்தோ தெரியாம‌லோ இஸ்லாமியர்களின் மார்க்க‌த்தையும், அவ‌ர்க‌ள‌து ந‌பியையும் தாக்கி பேசியுள்ள‌ன‌ர், என‌வே அவ‌ர்க‌ளுக்கு ப‌திலாக‌ நீங்க‌ள் (கிறிஸ்தவர்கள்), இஸ்லாமிய‌ ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்க‌ த‌ய‌ங்காதீர்க‌ள். குர்‍ஆனின் போத‌னைகள் அனைத்தையும் நீங்கள் அங்கீக‌ரிக்க‌முடியாது, இது உண்மையாக‌ இருந்தாலும் நாம் குர்‍ஆன் சொல்வது போல முஸ்லிம்க‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள் என்ப‌தை அவ‌ர்க‌ள் அறிய‌ட்டும். இயேசுக் கிறிஸ்துவை பின்ப‌ற்றும் "உண்மையான‌ சீட‌ர்க‌ள் நாம்" என்ப‌தை அவ‌ர்க‌ள் தெரிந்துக்கொள்ள‌ட்டும். உங்களுடைய வார்த்தைகளும், செயல்களும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நிரூபனமாக இருக்கட்டும், அதாவது ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு போல நாமும் ஒரே ஏக தேவனை வணங்குகிறோம் என்று அவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். மேலும் இறைவனின் விருப்பத்திற்கு முழுவதுமாக சமர்பணம் செய்தவர்கள் நாம் என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். அன்பாக இஸ்லாமியர்களுக்கு புரியவையுங்கள், அதாவது நீங்கள் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் உரையாட தயாராக இருப்பதாகவும், இறைவனுக்கு உதவியாளராக இருக்கவும், எதிரியை வீழ்த்த ஆன்மீக வல்லமையை உடையவராக நீங்கள் இருப்பதகாவும் தெரிவியுங்கள். எல்லா மக்களுக்காகவும் வேண்டிக்கொள்வதாகவும், அவர்களுக்காக கடைசி வரை முழு இருதயத்தோடு உழைப்பதற்கு தயாராக இருப்பதாக கூறுங்கள். இப்படிப்பட்ட எண்ணங்களோடு நீங்கள் (கிறிஸ்தவர்கள்) வாழ்ந்தால், இஸ்லாமியர்களின் இருதய கதவுகள் நிச்சயமாக திறக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்தவர்களாக, இந்த புத்தகம் (கட்டுரைகள்) எழுதப்படுவதின் நோக்கம், இஸ்லாமியர்களை தாக்கவோ, அல்லது பதிலடி கொடுக்கவோ அல்ல என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமாகும். இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கம், விவாதங்களில் ஈடுபடவோ அல்லது வாக்குவாதம் புரியவோ ஊக்குவிப்பதாக அல்லாமல், உண்மையை அறியமட்டுமே பதியப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டுகிறேன். இயேசுக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரர்களாக நீங்கள் வேத வசனங்களுக்கு கீழ்படிகின்றவர்களாக இருக்கவேண்டும்.

புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்....சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். 2 தீமோத்தேயு 2:23-26

ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. தீத்து 3:2

இந்த சிறிய புத்தகம், நான் இஸ்லாமியர்களோடு தனிப்பட்ட முறையில் உரையாடிய 15 ஆண்டுகால அனுபவத்தின் மூலமாக விளைந்ததாகும். மேலும் இதர ஆசிரியர்களின் கருத்துக்களையும் படித்து நான் இதில் சேர்த்துள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய அறிஞர்களால் தாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு இந்த கட்டுரைகள் உதவியாக இருக்கும். அதாவது கிறிஸ்தவ சமுதாயத்தில் சந்தேகங்களை உருவாக்கும் இஸ்லாமிய தாவா அறிஞர்கள் மற்றும் இதர விவாதம் புரியும் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக இருக்கும். எனினும் கிறிஸ்தவத்தை சரியாக இஸ்லாமியர்களுக்கு புரியவைக்கு ஒரு நல்ல வழிமுறை என்னவென்றால், நாம் முதலாவது கிறிஸ்தவம் சொல்வது போல வாழ்ந்து காட்டுவதாகும். முதலாவ‌து நாம் கிறிஸ்துவின் உண்மையான சீட‌ர்க‌ள் என்ப‌தை நினைவில் கொண்டு, இஸ்லாமிய‌ர்க‌ளை ச‌ந்திக்கும் ஒவ்வொரு முய‌ற்சியையும் எடுக்க‌வேண்டும். இஸ்லாமிய‌ர்க‌ளிட‌ம் ந‌ட்பாக‌ இருக்க‌வேண்டும் மேலும் ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் ம‌திக்க‌வேண்டும். வார்த்தைகளால் தாக்கி பேசும் வாக்குவாதங்கள், வெறும் தோல்வியை உண்டாக்கும் மேலும் நீண்ட கால மனக்கசப்பை உண்டாக்கிவிடும். ஒரு முஸ்லிம் நண்பனை உண்டாக்கி அவனுக்கு முன்னால் நாம் எந்த அளவிற்கு நேர்மையுள்ள வாழ்வை வாழ்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். மேலும், கிறிஸ்துவின் அன்பை நடைமுறையில் பிரதிபலிக்கச் செய்யவேண்டும், இப்படி செய்யும் போது கடினமான இருதயமும் உருகும் மேலும் சம்பூர்ண சத்தியம் அதில் தங்க அந்த இருதயத்தின் வாசல் திறக்கப்படும்.

இஸ்லாமியர்களுடன் பரஸ்பர மரியாதை மற்றும் நட்புறவுடன் நடந்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இந்த சிறிய புத்தகம் பேருதவியாக இருக்கும். அதாவது உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு, நம்மிடம் கேள்வி கேட்கும் இஸ்லாமியர்களுக்கு பதில் அளிக்க இது உதவியாக இருக்கும். அனேக இஸ்லாமியர்களுக்கு தாங்கள் முன்வைக்கும் இஸ்லாமிய வாதங்கள் மற்றும் உரிமைப் பாராட்டல்கள் எல்லாம் என்னவென்றே தெரியாது, ஆகையால், அவர்களுக்கு பதில் அளிக்க இந்த சிறிய தொகுப்பு உதவியாக இருக்கும். ஒரு இஸ்லாமிய நண்பரோடு விருப்பு வெறுப்பின்றி செய்யும் உரையாடல்கள் அவரின் மனதிலே பைபிளைப் பற்றிய உண்மைகளை அறியும் ஆர்வம் உண்டாகும். இதன் பயனாக மஸியாவாகிய இயேசுக் கிறிஸ்துவின் இரட்சிப்பு மீது தேடல் உண்டாகி, இரட்சிக்கப்பட அது உதவியாக இருக்கும்.

இயேசுவை பின்பற்றும் உண்மை விசுவாசிகள், எந்த காலத்திலும் ஆயுதங்களை ஏந்திய போரையோ, வார்த்தைகள் ஏந்திய போரையோ செய்ய கட்டளையிடப்படவில்லை. இதற்கு பதிலாக தங்களின் இந்த உலக நோக்கங்களை தியாகம் செய்துவிட்டு, நற்செய்தியை உலகமனைத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும், அல்லது சொல்லவேண்டும். இறைவனின் ஊழியர்களாக, நம்முடைய ஒரே நோக்கம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டுவதாகும், நற்செய்தியை போதிப்பதாகும், மேலும் இயேசுவின் பெயரின் மூலமாக கிட்டும் பாவமன்னிப்பை பெற மற்றவர்களை உற்சாகப்படுத்துவதாகும். கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் மீது நியாயத்தீர்ப்பை தீர்க்கக்கூடாது, பதிலாக இயேசுவின் தூதுவர்களாக நடந்துக்கொண்டு, ஒருங்கிணைப்பின் நற்செய்தியை கிறிஸ்துவின் மூலமாக பறைசாற்றவேண்டும். அதாவது மனிதன் இறைவனோடு ஒன்றுபடவேண்டும், அதே போல தேவனும் அவனோடு ஒன்றுபடுவார். இப்படிப்பட்ட‌ உன்னதமான செயல்களைச் செய்ய இறைவன் நல்லருள் புரிவாராக.

குறிப்பு: 
குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.


ஆங்கில மூலம்: Responding Muslims - Introduction 

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்  


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.



0 comments: