அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

June 12, 2012

மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம்


மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம்

குர்‍ஆன் முரண்பாடு

 

குர்‍ஆன் மோசேயின் கதையை மட்டுமல்ல, மோசே மற்றும் பார்வோனின் கதையை அனேக இடங்களில் சொல்கிறது. குர்‍ஆன் சொல்லும் இந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் பல முரண்பாடுகள் மற்றும் தவறுகளை இந்த பக்கங்களில் குறிப்பிட்டுள்ளோம். இந்த சிறிய கட்டுரையிலும், குர்‍ஆன் எப்படி பைபிளுக்கு முரண்படுகிறது என்பதை விவரமாக காண்போம். ஏன் இப்படி குர்‍ஆன் முரண்படுகிறது என்று பார்த்தால், குர்‍ஆனின் ஆசிரியர் பைபிளில் காணப்படும் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறித்து குழம்பியுள்ளார், ஆதலால், ஒரு கதையில் வரும் விவரங்களை இன்னொரு கதையில் நுழைத்துவிட்டுள்ளார்.

மோசே மற்றும் யாக்கோபு என்பவர்களாகிய இவ்விருவர் தங்கள் ஊரை விட்டு ஓடிப்போனார்கள் (யாக்கோபு தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி ஓடிப்போனார், மோசே ஒரு எகிப்தியனை கொன்று விட்டதினால் தன் உயிர் தப்ப ஓடிப்போனார்). மட்டுமல்ல, இவ்விருவரின் திருமணம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் அல்லது தங்கள் மனைவிகளை கண்ட விதமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். இவ்விருவர் வேறு நாட்டிலிருந்து வந்தார்கள், வாலிப்பபெண்கள் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் குடிக்க வைக்க வரும்போது, மற்றும் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது, இவ்விருவரும் உதவி செய்து கிணற்றிலிருந்து தண்ணீர் வார்த்து கொடுத்தார்கள். மோசே மற்றும் யாக்கோபின் கதையில் வரும் இந்த ஒற்றுமைகள் குர்‍ஆன் ஆக்கியோனின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை முதலில் பைபிளிலிருந்து படிப்போம், அதன் பிறகு குர்‍ஆனின் வசனங்களைக் காண்போம்.

பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள். அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள். அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான். (யாத்திராகமம் 2:15-22)

குர்‍ஆனின் படி மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை இப்போது காண்போம்:

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள். ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; "என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்" என்று கூறினார். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார். அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்." அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்." (அதற்கு மூஸா) கூறினார் "இதுவே எனக்கும் உங்களுக்கிமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். ( குர்‍ஆன் 28:23-28)

மேற்கண்ட குர்‍ஆன் வசனங்கள், பைபிளில் சொல்லப்பட்ட அதே நிகழ்ச்சியைத் தான் குறிப்பிட்டு பேசுகிறது. ஆனால், அனேக முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் குர்‍ஆன் குறிப்பிடும் வசனங்களில் காணப்படும். இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன: முதலாவதாக, யாத்திராகம‌த்தில் நாம் பார்க்கும் போது, மோசே ஏழு வாலிப பெண்களை காண்கிறார், மற்றும் அந்த ஏழுபேரும் ஒரே மனிதனின் பெண் பிள்ளைகளாக இருந்தார்கள். ஆனால், குர்‍ஆனில் பார்க்கும் போது, அது வெளிப்படையாக "மோசே அங்கு சந்தித்தது இரண்டு பெண்களை" என்று கூறுகிறது, மற்றும் அவ்விருவரும் ஒரே மனிதனின் புதல்விகள் என்றும் கூறுகிறது. பைபிள் மற்றும் குர்‍ஆன் கூறும் நிகழ்ச்சிகளில், அந்த மனிதன், மோசேக்கு தன் மகள்களில் ஒரு மகளை திருமணத்திற்காக கொடுக்கிறார். ஆனால், குர்‍ஆனில் ஒரு வித்தியாசம் உள்ளது, அது என்னவென்றால், அந்த பெண்ணின் தந்தை, மோசேயிடம் "என் மகளை திருமணம் புரிய" எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கிறார். இந்த பணத்தை எப்படி கொடுப்பது என்று பார்த்தால், அந்த பெண்ணுக்காக மோசே 8 அல்லது 10 ஆண்டுகள் தன்னிடத்தில் உழைக்கவேண்டும் என்று ஒரு நிபந்தனையை போடுகிறார்.

இங்கு குறிப்பிடவேண்டிய விவரம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகள் பற்றி குர்‍ஆன் கூறுகிறது, அவைகள் அடுத்தடுத்த வரும் எண்களாக இருந்தாலும், 8 அல்லது 10 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. குர்‍ஆனின் நிகழ்ச்சிப்படி இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வருட எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்‍ஆனில் காணப்படும் இந்த விவரங்கள் எப்படி மற்றும் எங்கிருந்து வந்தது? அவைகள் பைபிளில் யாக்கோபின் கதையில் வருகிறது, அதாவது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார் என்ற விவரங்களிருந்து எடுத்து குர்‍ஆனின் ஆக்கியோன், மோசேயின் கதையில் குழப்பத்தில் நுழைத்துள்ளார். இப்போது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்தார் என்பதை பைபிளிலிருந்து காண்போம்.

யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள். அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான். அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான். அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான். அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான். அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான். அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான். (ஆதியாகமம் 29:1-30)

இது தான் அந்த இரண்டு பெண் பிள்ளைகளுடைய நிகழ்ச்சியாகும், மற்றும் யாக்கோபு தான் நேசித்த பெண்ணுக்காக இரண்டு தவனை முறையில் தன் மாமனாரிடம் வேலை செய்தார். "இல்லை.. நாங்கள் இதனை அங்கீகரிக்கமாட்டோம்", குர்‍ஆன் இப்படி யாக்கோபின் கதையில் வரும் சிலவற்றை காப்பி அடித்து மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துச் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், அடுத்த வசனத்தில் குர்‍ஆன் சொல்லும் விவரத்தை சிறிது படித்துப் பாருங்கள்.

ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார். (குர்‍ஆன் 28:29)

மோசே தன் மனைவியை திருமணம் செய்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டு இருந்த அந்த காலக்கெடு முடிந்தபிறகு அவர் தன் குடும்பத்துடன் தன் மாமனாரை விட்டு பிராயணம் மேற்கொண்டார். ஏன் ? மோசே எந்த ஊருக்குப் போகிறார்? பைபிளின்படி நாம் பார்த்தால், மோசேயை தேவன் எரியும் முட்புதரிலிருந்து சந்தித்து பேசிய நிகழ்ச்சியானது, மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்யும் போது அல்ல, அதற்கு பதிலாக, அவர் தனது அனுதின வேலையாகிய ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும் போது நடந்த நிகழ்ச்சியாகும்.

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். (யாத்திராகமம் 3:1-4)

"மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்தார், அந்த வழியில் இறைவனை சந்தித்தார்" என்ற இந்த குறிப்பிட்ட விவரமானது, மூன்றாவதாக முஹம்மது செய்த தவறாகும். அதாவது பைபிளின் படி கூறப்பட்ட யாக்கோபின் நிகழ்ச்சியிலிருந்து சில விவரங்களை எடுத்து முஹம்மது மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துள்ளார். யாக்கோபு தான் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் காலக்கெடு முடிந்தவுடன் சென்றார். இன்னும் சில ஆண்டுகள் அதிகபடியாகவும் அவர் தன் மாமனாருடன் இருந்துள்ளார் (ஆதியாகமம் 30:25 லிருந்து 31:55 வரை பார்க்கவும்). இதைத் தான் ஒரு மாதிரியான நிபந்தனையாக "எட்டு ஆண்டுகள்... பத்து ஆண்டுகள்" என்று குர்‍ஆன் ஸூரா 28:27ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாக்கோபு தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் தாய் நாட்டிற்கு (ஊருக்கு) செல்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன:

(1) லாபான் யாக்கோபை அனேகமுறை ஏமாற்றினார் (ஆதியாகமம் 31:41) மற்றும்

(2) தன் சகோதரனாகிய ஏசாவுடன் ம‌றுபடியும் ஒற்றுமையடைய செல்கிறார் (ஆதியாகமம் 32,33).


இந்த பயணத்தின் போது யாக்கோபு தேவனை சந்தித்தார் (ஆதியாகமம் 32:22 லிருந்து 30 வரை).

இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து புரியும் விவரம் என்னவென்றால், குர்‍ஆனின் ஆசிரியர் யாக்கோபின் மற்றும் மோசேயின் வாழ்க்கை வரலாறை சரியாக புரிந்துக்கொள்ளாமல் குழப்பமடைந்துள்ளார். குர்‍ஆன் ஆக்கியோன், யாக்கோபின் வாழ்வில் நடந்த அனேக விவரங்களை எடுத்து, தாமே சொந்தமாக மோசேயின் வாழ்க்கையோடு முடிச்சு போட்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அல்லது நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த குழப்படைந்த நபரே இறைவனாக இருப்பது தான் அல்லது இந்த குழப்பம் அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று முஸ்லிம்கள் நம்புவது தான். இதன் முடிவு? ஏற்கனவே குர்‍ஆனில் காணப்படும் அனேக பிழைகள் மற்றும் முரண்பாடுகளோடு சேர்ந்து, இந்த முரண்பாடும் ஒண்டிவிடுகிறது, இதன் மூலம் அறிவது என்ன? குர்‍ஆன் என்பது அறியாமையில் இருக்கும் மற்றும் தவறுகள் செய்யும் ஒரு சாதாரண மனிதனின் கைவேலை என்பது நிருபனமாவதாகும்.

தோரா அல்லது ஐந்தாகமங்களின் விவரங்களின் படி பார்க்கும் போது, குர்‍ஆன் சொல்லும் விவரங்கள் எப்படி முஹம்மதுவின் அறியாமையினாலும், குழப்பத்தினாலும் நிரம்பியுள்ளது என்பதை எளிதாக கண்டுக்கொள்ளலாம். இந்த குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால், முஹம்மது சுயமாக எபிரேய வேதத்தை பார்த்து படித்து தெரிந்துக்கொள்ள அவரால் முடியவில்லை ஆகையால், தன்னுடைய குறையுள்ள ஞானத்தோடு அங்கும் இங்கும் கேட்ட நிகழ்ச்சிகளை தன் சொந்த கதைகளோடு சேர்த்து குர்‍ஆனில் கூறியுள்ளார். குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற கற்பனை கட்டுக்கதையை இதுவரை கேட்காமல் இருக்கும் ஒரு சராசரி மனிதன், மேற்கண்ட விவரங்களைக் கண்டால், அவன் இப்படித்தான் நினைத்துக்கொள்வான், அதாவது இந்த விவரங்களை குர்‍ஆனில் சேர்த்தவர் கண்டிப்பாக இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி குழம்பிப்போய் இப்படி முரண்பட்டுள்ளார் என்று எண்ணுவான். குர்‍ஆனின் குழப்ப கதைகளுக்கு இந்த நிகழ்ச்சி மட்டும் ஒரு எடுத்துக்காட்டு என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. இது போல அனேக நிகழ்ச்சிகளை பைபிளிலிருந்து எடுத்து அதை புரிந்துக்கொள்ளாமல் குழம்பமடைந்து இப்படி முரண்பட்ட நிகழ்ச்சிகள் குர்‍ஆனில் ஏராளம் உண்டு. இவைகள் பற்றி அறிய "குர்‍ஆனின் சரித்திர பிழைகள்" என்ற தலைப்பில் உள்ள முரண்பாடுகளை படித்து தெரிந்துக்கொள்ளவும்.

மேலும், ஒருவேளை குர்‍ஆனில் சொல்லிய படியே தோராவில் இருந்தது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், இது எப்படி சாத்தியமாகும் என்பதை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்? இஸ்லாமியர்கள் "தோரா திருத்தப்பட்டது" என்று சொல்வது அவர்களுக்கு சுலபமான பதிலாக இருக்கும். ஆனால், எந்த ஒரு குற்றமும், அல்லது பரிசுத்த வார்த்தைகளை மாற்றி எழுதும் குற்றமும் வெறுமனே நடந்துவிடாது, அவைகளுக்கு பின்னே ஒரு மிகப்பெரிய காரணம் அல்லது நோக்கம் இருக்கும். இப்போது இஸ்லாமியர்கள் பதில் சொல்லுங்கள், ஒரு மனிதனுக்கு "இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்" என்ற வார்த்தைக‌ள் இருக்கும் இடத்தில் "ஏழு பெண்கள் இருக்கிறார்கள்" என்று மாற்றி எழுதவேண்டுமானால், இப்படி ஒருவன் மாற்றவேண்டியதின் அவசியம் என்ன? மட்டுமல்ல, இப்படி மாற்றுவது சுலபமானதும் அல்ல, உலகில் அந்த காலத்தில் தோராவின் எத்தனை பிரதிகள் இருந்தனவோ, அவைகள் அனைத்திலும் சென்று இந்த மாற்றம் செய்வது கூடாத காரியமாகும். இந்த "இரண்டு பெண்கள்" என்ற இடத்தில் "ஏழு பெண்கள்" என்று மாற்றுவதினால், மத ரீதியாக தத்துவ ரீதியாக எந்த முக்கியத்துவம் அடையப்போவதில்லை, இதனால் எந்த உபயோகமும் இல்லை. இப்படி எந்த ஒரு யூதனும், அல்லது கிறிஸ்தவனும் மாற்றப்போவதில்லை, அவனுக்கு இதில் விருப்பமும் இருக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை. பைபிள் மற்றும் குர்‍ஆனுக்கு இடையே காணப்பட்ட இந்த ஒரு வித்தியாசத்தை மட்டும் இஸ்லாமியர்கள் விளக்கினால் போதாது, இது போல இருக்கும் இன்னும் அனேக குழம்ப்பம் தரும் குர்‍ஆனின் தவறுகள், மற்றும் முரண்பாடுகளை அவர்கள் விளக்கவேண்டும், அதாவது அனேக கதைகளில் குர்‍ஆன் செய்த குழப்பம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் எந்த ஒரு மத கோட்பாட்டையும் மாற்றிவிடப்போவதில்லை, அதாவது "இரண்டு பெண்கள்" என்ற வார்த்தையை "ஏழு பெண்கள்" என்று ஒரு யூதன் மாற்றுவதினால், மார்க்க ரீதியாக என்ன பயன் உண்டாகப்போகிறது? எந்த ஒரு பயனும் இல்லை, ஆகவே, இது மாற்றமடைந்த ஒன்று அல்ல, இது குர்‍ஆனின் குழப்பமாகும்.

நேரடியாக ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆனின் இந்த குழப்பத்திற்கு காரணம் முந்தைய வேதங்கள் பற்றிய அறிவு முஹம்மதுவிற்கு சரியான முறையில் இல்லாமல் இருந்தது தான். இந்த ஆய்வின் மூலமாக நாம் அறிவது இது தான், இயற்கையாகவே முஹம்மது அதிகமாக குழம்பியுள்ளார். எந்த ஒரு இஸ்லாமியரும், இது வரை தங்கள் குர்‍ஆன் இறைவனின் வேதம் என்று நிருபிக்க, இப்படிப்பட்ட முரண்பாட்டுக்கு சரியான முறையில் பதில் சொல்லி, குர்‍ஆனை காப்பாற்றிக்கொள்ளவில்லை.

ஆங்கில மூலம்: Qur'an Contradiction - Moses or Jacob?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கவும்.

ஆசிரியர் ஜோசன் கட்ஜ் அவர்களின் இதர கட்டுரைகளை இங்கு படிக்கவும்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
 


0 comments: