அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 8, 2008

கனிகளினாலே அந்த மரங்களை அறிவீர்கள்

சமீபத்தில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. அதில் கட்டுரையாளர் தன்னுடைய அனுபவம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.

ரயில் ஒன்றில் டி.டி.ஆர் ஆக பணியாற்றிக் கொண்டிருந்த அவர் ஒரு முறை ரயிலில் டிக்கெட் பரிசோதிக்க வந்த போது முதல் வகுப்பு பெட்டியில் கழிவறைக்கு அருகில் செய்தித் தாள் ஒன்றை விரித்து உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒரு வெளிநாட்டு நபர்.
“இங்கே அமரக் கூடாது நீங்கள் டிக்கெட் எடுக்கவில்லையா” என்று கேட்டபோது பயணி டிக்கெட்டை எடுத்து நீட்டியிருக்கிறார்.

டிக்கெட் வாங்கிய பின் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர் என்று கேட்டபோது, “என்னுடைய இடத்தில் இன்னொரு நபர் உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் சண்டை போட எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர்.

அந்த வார்த்தை அவரிடம் ஏற்படுத்திய பாதிப்பு அவருக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி அறியவும், கிறிஸ்த்தவத்தைப் புரிந்து கொள்ளவும் வேண்டிய ஆர்வத்தைத் தூண்டியது என தன்னுடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்பது நம்மை மட்டுமல்லாமல் நாம் சார்ந்த மதத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த மதத்தைச் சார்ந்தவன் இப்படித்தான் இருப்பான் என்பன போன்ற பொதுப்படையான முடிவுகளுக்குக் கூட வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளே காரணமாகி விடுகின்றன.

இயேசு சொல்கிறார்.

கனிகளை வைத்தே மனிதர்களை அடையாளம் காணுங்கள்” பேச்சை வைத்து மனிதர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் செயல்களை வைத்தே மனிதர்கள் மதிப்பிடப் படவேண்டும் என்பதையும் இயேசு கிறிஸ்து மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.

“உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” எனவே நற்செயல்களைச் செய்யுங்கள் என்கிறார் இயேசு.
“நீங்கள் மனம் திரும்பி விட்டீர்கள் என்பதை செயலில் காட்டுங்கள்” என்பதே இயேசுவின் போதனை. அடையாளங்கள் சொல்லும் மதம் தேவையில்லை, அர்த்தங்களைச் சொல்லும் மதமே தேவை என்பதையே இயேசுவின் போதனை தெளிவு படுத்துகிறது.

பழைய ஏற்பாடு “வந்து கேளுங்கள்” என்னும் அடிப்படையில் அமைந்திருந்தது என்றும் புதிய ஏற்பாடு “வந்து பாருங்கள்” எனும் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும் விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.

இயேசுவும் “வந்து பாருங்கள்” என்றே சீடர்களை அழைத்தார். தன்னுடைய வாழ்க்கை ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடி போன்று தெளிவாக இருப்பதை வெளிப்படுத்தினார்.
மேடைகளில் சமத்துவம் முழங்கிவிட்டு, கீழே இறங்கி குழு மனப்பான்மையுடன் திரியும் இரட்டைப் போக்கை கடைபிடிக்கும் இன்றைய மனநிலை இயேசுவிடம் இருக்கவில்லை.
பணிவைப் பற்றி போதித்த இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவி துண்டால் துடைத்தார்.
“ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை “ என்று சமத்துவம் போதித்தவர், உயிர்த்தபின் பெண்ணுக்கே முதல் காட்சியளித்தார், பெண்களை சீடர்களாய் கொண்டிருந்தார்.

பெற்றோரை மதிக்க வேண்டும் என்றவர், தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்தார். தன்னுடைய முதல் புதுமையைக் கூட தாயின் விருப்பத்திற்காகவே செய்தார்.
அன்பைப் போதித்த அவர் தொழுநோயாளிகளையும் தொட்டு சுகமாக்கினார், பேய்பிடித்து அகோரமாய் இருந்தவனையும் அரவணைத்தார்.

இயேசுவின் வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் இடையே பள்ளத்தாக்குகள் இருக்கவில்லை.

இயேசு இதையே நம்மிடமும் எதிர்பார்க்கிறார். நம்முடைய வாழ்க்கை இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையின் அனுபவங்களின் வெளிச்சமாய் இருக்க வேண்டும்.
அன்னை தெரசா வார்த்தையை வாழ்ந்து காட்டினார்.

வெறும் போதனைகள் மட்டும் செய்துவிட்டு வாழ்க்கையில் சுயநலம், பொறாமை, கோபம், எரிச்சல், பகை என பட்டியலிட்டு பாவங்களை அணிந்து கொள்பவர்களை நோக்கி இயேசுவே சொல்கிறார்.

செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்

http://jebam.wordpress.com/2008/02/07/words_act/

0 comments: