குர்-ஆன் 4:3 குறிப்பிடுவது ஓர் அடிமைப் பெண்ணையா? (அ) பல அடிமைப் பெண்களையா?
(மொழியாக்கம் செய்தவர்களின் குழப்பத்திற்கு காரணமென்ன?)
முன்னுரை:
ஒரு புத்தகத்தை அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு முழு தரத்துடன் மொழியாக்கம் செய்வது என்பது சிறிது கடினமே. அதிலும், மத சம்மந்தப்பட்ட புத்தகங்களை மொழியாக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, குர்-ஆனை மற்றும் பைபிளைச் சொல்லலாம். இவைகளை தமிழாக்கம் செய்பவர்கள், தாங்கள் வாழும் காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவைகள் எழுதப்பட்ட காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
குர்-ஆனை எடுத்துக் கொண்டால், குர்-ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னணி என்ன? ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்ன? போன்ற சரித்திர விவரங்களை சரிவர அறிந்துக்கொண்டு அதன் பின்பு மொழியாக்கம் செய்யவேண்டும். குர்-ஆனின் முழு இறையியலை சரியாக புரிந்துக் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும். இதுமட்டுமல்ல, அரபி மொழியின் அக்கால இலக்கிய நடை, இலக்கணம், அரபி வார்த்தைகளின் சரியான அர்த்தங்கள் (அருஞ்சொற்பொருள்) போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும்.
முஸ்லிம் அறிஞர்களின் குர்-ஆன் மொழியாக்க குழப்பங்கள்
குர்-ஆனை மொழியாக்கம் செய்யும் முஸ்லிம் அறிஞர்களில் சிலர், இன்னொரு முக்கியமான விவரத்தையும் கவனத்தில் கொள்கிறார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் குர்-ஆன் வசனங்களை தெரிந்தே பொருளை மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் வரும் கெட்டப்பெயரை நீக்குவதற்கு சில வசனங்களின் பொருளை திருத்தி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படி செய்யப்பட்ட ஒரு வசனத்தை இந்த கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.
குர்-ஆன் 4:3ம் வசனம்:
ஒரு முஸ்லிம் எத்தனை அடிமைப் பெண்களோடு விபச்சாரம் செய்யலாம்? அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே எத்தனை அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளலாம்? இந்த விவரத்தை குர்-ஆன் 4:3ம் வசனத்தில் காணலாம். இந்த வசனத்தை ஐந்து குர்-ஆன் தமிழாக்கங்களிலிருந்து காண்போம்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
4:3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லதுநீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள்.நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.
பிஜே குர்-ஆன் தமிழாக்கம்:
4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகம் – பதித்த குர்-ஆன் தமிழாக்கம்:
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்)பெண்களில் உங்களுக்கு விருப்பமானவகளை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கிடையில், நீங்கள் நீதமாக நடக்கமுடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமான வழியாகும்.
(இந்த வாக்கியத்தில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை.
"உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்)"
"அடிமைப்பெண்ணில் உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்" என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஆபாசமாக சொல்வதுபோல உள்ளது. எனவே, தற்போதைய கட்டுரையில் இந்த தமிழாக்கத்தை நாம் புறக்கணித்துவிடுவோம், தேவைப்பட்டால் இன்னொரு ஆய்வு கட்டுரையில் இந்த மொழியாக்கம் பற்றி காண்போம்.)
ஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)
If ye fear that ye shall not be able to deal justly with the orphans, Marry women of your choice, Two or three or four; but if ye fear that ye shall not be able to deal justly (with them), then only one, or (a captive) that your right hands possess, that will be more suitable, to prevent you from doing injustice.
மூன்று இஸ்லாமிய அறிஞர்களை தர்மசங்கடத்தில் தள்ளிய வசனம்
மேற்கண்ட தமிழாக்கங்களில், முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இவ்வசனத்தை எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். மேலும் யூசுஃப் அலி அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தையும் கவனிக்கவும்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:3. . . . அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - . . .
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
4:3. . . . அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். . . .
ஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)
. . . , or (a captive) that your right hands possess, . . .
ஒரு முஸ்லிம் தன் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களோடு (அடிமைப் பெண்களோடு) உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் 4:3ம் வசனம் சொல்லியிருக்கும் போது, மேற்கண்ட மூன்று முஸ்லிம் அறிஞர்கள் "ஒருமையில் – அடிமைப் பெண்" என்று எழுதியுள்ளார்கள். இவர்களை இவ்வசனம் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனை மறைக்க அடைப்பிற்குள் "ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) என்று முஹம்மது ஜான் அவர்கள் எழுதுகிறார், அப்துல் ஹமீது பாகவி அவர்களோ, "நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே" என்று எழுதுகிறார். வலக்கரம் சொந்தமான அடிமைப்பெண் என்றோ அல்லது பெண்கள் என்றோ அவ்வசனம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையென்றாலும், அடிமைப்பெண்கள் பற்றிய இஸ்லாமிய கட்டளைகளை பார்க்கும் போது, பன்மை (அடிமைப்பெண்கள்) என்பது தான் சரியான மொழியாக்கமாக இருக்கும். இதனை மறுப்பவர்கள் தகுந்த ஆதாரத்தோடு மறுக்கட்டும்.
வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்:
முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இதர குர்-ஆன் வசனங்களில் "வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்" என்பதை பன்மையிலேயே தமிழாக்கம் செய்துள்ளார்கள். உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களை கவனிக்கவும்.
குர்-ஆன் 23:6:
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி:
23:6. எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.
குர்-ஆன் 4:24
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. . . .
அப்துல் ஹமீது பாகவி:
4:24. கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. . . .
குர்-ஆன் 33:52
இவ்வசனம் முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்பெண்கள்) பற்றி பேசுகின்றாது.
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; . . .
அப்துல் ஹமீது பாகவி:
33:52. . . . ஆயினும், உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்அவ்வாறன்று. (அவள் உங்களுக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கின்றான்.
மேற்கண்ட வசனத்தில் அப்துல் ஹமீது பாகவி அவர்கள், "முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிய அடிமைப்பெண்கள்" பற்றி தமிழாக்கம் செய்யும் போதும், "ஒருமையிலேயே" சொல்லியுள்ளார். இங்கு இவர் என்ன சொல்ல வருகிறார்? முஹம்மதுவிற்கு ஒரே ஒரு அடிமைப்பெண் மட்டுமே இருப்பாளா? இப்பெண்ணிடம் மட்டுமே முஹம்மது திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு (விபச்சாரம்) செய்யலாம் என்று சொல்ல வருகிறாரா? ஆனால், குர்-ஆன் இந்த இடத்தில் பன்மையில் தான் சொல்கிறது. இவரை இந்த வசனம் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நினைக்கிறேன்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கத்தின் மிகப்பெரிய தவறு:
"கிணறு வெட்ட பூதம் கிளம்பிய" கதை என்றுச் சொல்வார்கள், அது போல ஒரு சிறிய விவரத்திற்கு குர்-ஆன் வசனங்களை படித்து ஆய்வு செய்தால், பல விவரங்கள் வெளிப்படுகின்றன.
புத்திசாலித்தனமாக இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தன் குர்-ஆன் தமிழாக்கத்தில் ஒரு உண்மையை மறைத்துள்ளது. இதை அவர்கள் தெரிந்து செய்தார்களா அல்லது இவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்று சரியாக தெரியவில்லையா? என்று சந்தேகமாக உள்ளது. இன்னொரு முறை அவ்வசனத்தை படிப்போம்.
4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையேமனைவியாக்கிக் கொள்ளு ங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.
முஸ்லிம் ஆண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லியிருக்கும் போது, இந்த அசிங்கத்தை தர்மசங்கடத்தை ஜீரணித்துக் கொள்ளாத இவர்கள் "மனைவியாக்கிக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தையை இடையில் சொறுகி, குர்-ஆனின் அசிங்கத்தை மூட முயற்சி எடுத்துள்ளார்கள்.
இஸ்லாமில் "மனைவிக்கும், அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும்" இடையே இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா?
- குர்-ஆனின் படி, ஒரு முஸ்லிமுக்கு ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் தான் மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கமுடியும், ஆனால் அடிமைப்பெண்கள் எத்தனையானாலும் இருக்கலாம்.
- மனைவிக்கு இருக்கும் உரிமைகள், அடிமைப்பெண்களுக்கு இல்லை.
- மனைவியை மற்றவர்களுக்கு அடிமையாக விற்கமுடியாது, ஆனால், அடிமைப்பெண்களை பல நாட்கள் கற்பழித்துவிட்டு மறுபடியும் மற்றவர்களுக்கு அடிமையாக விற்றுவிடலாம்.
இப்படிப்பட்ட அடிப்படை விவரங்கள் கூட தெரியாமல் எப்படி இவர்கள் குர்-ஆன் தமிழாக்கம் செய்ய வந்துவிட்டார்கள்? உண்மையில் இவர்களுக்கு இஸ்லாம் தெரியும், ஆனால் குர்-ஆனில் உள்ள அசிங்கங்களை ஜீரணிக்க முடியாமல், இப்படி குளறுபடிகள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
முடிவுரை: தாம்பத்தியம் – கற்பழிப்பு – விபச்சாரம்:
குர்-ஆன் 4:3ம் வசனம், திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ள முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது.
ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அவளை மனைவி என்று அழைப்பார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் கட்டாயப்படுத்தி அவளோடு உடலுறவு கொண்டால், அதனை "கற்பழிப்பு" என்று கூறுவார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் அவளின் அனுமதியோடு அவளோடு உடலுறவில் கொண்டால், அதனை "விபச்சாரம்" என்று கூறுவார்கள். குர்-ஆன் 4:3ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சலுகைக்கு என்ன பெயர் சூட்டுவது? தாம்பத்தியமா? கற்பழிப்பா விபச்சாரமா? இந்த தர்ம சங்கடத்திலிருந்து எப்படி விடுபடுவது? இதிலிருந்து முழுவதுமாக விடுபடமுடியாவிட்டாலும், தங்களால் இயன்ற விதத்தில் இதன் பாதிப்பை குறைக்கலாம் என்று எண்ணி, முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்க அறிஞர்களும் முயற்சி எடுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. ஒருவேளை இவர்களுக்கு இஸ்லாமில் "வலக்கரத்துக்கு சொந்தமான அடிமைப்பெண்கள்" பற்றிய இறையியலே (கட்டளைகளே) தெரியாமல் போய்விட்டதா? இப்புதிருக்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
0 comments:
Post a Comment