அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

June 27, 2015

2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

(2015 ரமளான் கடிதம் 4ஐ படிக்க இங்கு சொடுக்கவும்)

அன்புள்ள தம்பிக்கு,

உன் மீது தேவனின் கிருபையும் சாந்தியும் உண்டாவதாக.

என் கடிதங்களை நீ தொடர்ந்து படித்துக்கொண்டும், எனக்கு பதில்
எழுதிக்கொண்டும் இருக்கிறதை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்று என் கடிதத்தை படித்தவுடன், என்னை தொலைபேசியில் அழைத்து, சில
விவரங்களைச் சொன்னாய். அவைகளுக்கான பதிலை எழுதி அனுப்புங்கள் என்று
கேட்டுக்கொண்டாய். எனவே, நீ சொன்ன விவரங்களில் இருந்த ஒரு விஷயத்தைப்
பற்றி இந்த கடிதத்தில் எழுதுகிறேன். அடுத்த கடித்தத்தில் இரண்டாவது
விஷயத்தைப் பற்றி எழுதி அனுப்புவேன்.

நீ கேட்ட முதல் கேள்வி:

1) ஃபாத்திமா தனக்கு வரவேண்டிய சொத்துக்களை அபூ பக்கரிடம் கேட்டதில் எந்த
ஒரு தவறும் இல்லை. தந்தையின் ஆஸ்தியில் மகளுக்கு பங்கு உண்டு, இதனை
குர்-ஆனும் அனுமதிக்கிறது. அபூ பக்கர் ஆஸ்தியை பங்கிட்டு கொடுக்க
மறுத்தது சரியானது அல்ல. குர்-ஆன் அனுமதிப்பதை அபூ பக்கர் அவர்கள்
மறுப்பது இஸ்லாமின் படி சரியானதாக இல்லையே.

தம்பி, இப்போது உன் கேள்விக்கு பதிலைத் தருகிறேன்.

இஸ்லாமிய நாடுகளில் தவறுதலாகவும் தவறு செய்துவிடாதே!

தம்பி, நீ என்னிடம் கேட்ட மேற்கண்ட கேள்வியை, முஸ்லிம்களிடம்
கேட்டுவிடாதே. ஏனென்றால், "அபூ பக்கர் ஆஸ்தியை பங்கிட்டு கொடுக்க
மறுத்தது சரியானது அல்ல" என்ற வாக்கியத்தை நீ இதர முஸ்லிம்களிடம்
சொல்லிவிடாதே. ஏனென்றால், சுன்னி முஸ்லிம்கள் அபூ பக்கர் செய்தது
சரியானது என்று நம்புகிறார்கள். ஷியா முஸ்லிம்கள் அபூ பக்கர் செய்தது
தவறானது, ஏனென்றால், ஃபாத்திமாவை அவர் புன்படுத்திவிட்டார், இது அநியாயம்
என்று சொல்கிறார்கள்.

நான் அறியாமையில் தானே கேட்டேன், என் கருத்தைத் தானே சொன்னேன் என்று நீ
சொன்னாலும் முஸ்லிம்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். முஹம்மது பற்றியும்,
குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் தோழர்கள் பற்றியும் அறியாமையிலும் சில
விஷயங்களைச் சொல்லக்கூடாது. முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் நீ
வார்த்தைகளை சிந்தித்து பேசவேண்டும். அறியாமையில் சிறிய தவறு செய்தாலும்,
செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி அவருக்கு தண்டனை உண்டு. எனவே, நீ
எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். உன் கேள்விக்கு
கீழ்கண்ட தலைப்புகளில் பதில் தருகிறேன்.

1) முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு மட்டுமே அபூ பக்கர் கீழ்படிந்தார்

2) அபூ பக்கர் ஃபாத்திமாவை ஏமாற்றவில்லை

3) அபூ பக்கரையும், முஹம்மதுவையும் அவமதித்த ஃபாத்திமா

________________________________

அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

1) முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு மட்டுமே அபூ பக்கர் கீழ்படிந்தார்

தம்பி, நான் என்னுடைய கடிதங்களில் வெறும் சுன்னி முஸ்லிம்களின் ஸஹீஹ்
ஹதீஸ்களையும், இதர நூல்களின் ஆதாரங்களையும் தருகிறேன். ஷியா
முஸ்லிம்களின் ஆதாரங்களை நான் சேர்க்கவில்லை. அனேக விஷயங்களில்
ஷியாக்களின் ஆதாரங்களும், சுன்னி முஸ்லிம்களின் ஆதாரங்களும் நேர் எதிராக
இருக்கும். பெரும்பான்மையாக இருப்பவர்கள் சுன்னி முஸ்லிம்கள் என்பதால்,
அவர்களின் நூல்களாகிய புகாரி, முஸ்லிம் மற்றும் இதர நூல்களிலிருந்து
ஆதரங்களை மட்டுமே தருகிறேன். ஷியாக்களின் ஆதாரங்களை எடுத்து நாம் ஆய்வு
செய்தால், நாம் தலைப்பை விட்டு வெளியே செல்லவேண்டி வரும், இதனை இஸ்லாமிய
அறிஞர்கள் செய்துக்கொள்ளட்டும்.

தம்பி, நான் முந்தைய கடிதத்தில் மேற்கோள் காட்டிய புகாரி ஹதீஸை நீ
முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிகின்றது. ஒரு முக்கியமான விஷயத்தை நீ
கவனிக்கவில்லை.

அபூ பக்கர், ஃபாத்திமாவிற்கு முஹம்மதுவின் சொத்துக்களை பகிர்ந்து
கொடுக்காமல் இருந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அந்த ஹதீஸை
மறுபடியும் ஒரு முறை படித்துப்பார். முஹம்மது தம்முடைய சொத்துக்களை
எப்படி பயன்படுத்தவேண்டும் என்று சொல்லியுள்ளார், அந்த பகுதியை கவனி.

புகாரி ஹதீஸ் எணள் 4240. & 4241.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) (நபியவர்களின் மறைவுக்குப்
பிறகு, கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர்(ஸல்)
அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக்
சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில்
மீதியிருந்ததிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள்.
அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ('நபிமார்களான) எங்கள்
சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச்
செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இச்செல்வத்திலிருந்தே
முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்' என்று
சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு
மாற்றத்தையும் செய்ய மாட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் எந்த
நிலையில் அச்சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும்.
அதில் (அச்சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி(ஸல்) அவர்கள்
செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்" என்று (ஃபாத்திமா அவர்களுக்கு)
பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும்
ஒப்படைக்க அபூ பக்ர்(ரலி) மறுத்துவிட்டார்கள். இதனால் அபூ பக்ர்(ரலி)
மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா(ரலி)
பேசவில்லை. நபி(ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாதகாலம் ஃபாத்திமா(ரலி)
உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா(ரலி) இறந்தபோது, அவர்களின் கணவர்
அலீ(ரலி), (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்
கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது
அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை.
அலீ(ரலி) அவர்களே ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுகை
நடத்தினார்கள். . . . . . .

புகாரி ஹதீஸ் மட்டுமல்ல, "கிதாப் அல்-தபாகத் அல்-கதீர்" என்ற
புத்தகத்திலும் இந்த விவரம் உள்ளது, அதனையும் மேலதிக விவரங்களுக்காக
உனக்கு தருகிறேன். ("Kitab al-Tabaqat al-Kabir, (Book of the Major
Classes), Volume 2, by Ibn Sa'd, pages 391 – 392).

அல்லாஹ்வின் தூதருடைய சொத்தின் கணக்கும், அவர் வைத்துவிட்டுப் போன ஆஸ்தியும்.

அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: "தினார்கள் மற்றும் திர்ஹாம்ஸ்கள் (பணம்)
என்னுடைய வாரிசுகளுக்கிடையில் பங்கிடப்படக் கூடாது, நான் எதை
வைத்துவிட்டுப் போகிறேனோ அது என் மனைவிமார்கள் மற்றும் வேலைக்காரர்களுடைய
பராமரிப்புக்கு செலவிடப்பட்ட பிறகு தானதர்ம செயல்களுக்கு போகவேண்டும்.
(பக்கம் 391,392)

ACCOUNT OF THE LEGACY (INHERITANCE) OF THE APOSTLE OF ALLAH, AND WHAT
PROPERTY HE LEFT BEHIND

The apostle of Allah said, "The dinars and dirhams (money) should not
be distributed among my heirs, what I leave should go into charity
after the maintenance expenses of my wives and the provisions of my
servant. (pages 391, 392).

அபூ பக்கர் முஹம்மதுவின் நெருங்கிய தோழர் ஆவார் மற்றும் அவர்
முஹம்மதுவிற்கு தம் மகளை (ஆயிஷாவை) மனைவியாக கொடுத்துள்ளார். மேற்கண்ட
ஹதீஸிலும், கிதாப் அல்தபாகத் அல்கதீர் புத்தகத்தின் மேற்கோளிலும், நாம்
காண்பது என்னவென்றால், "முஹம்மது தம்முடைய சொத்துக்களை எப்படி செலவு
செய்யவேண்டும் என்றுச் சொல்லியுள்ளார்". அதனை மேற்கோள் காட்டி தான் அபூ
பக்கர் ஃபாத்திமாவிற்கும், அலிக்கும், அப்பாஸ் அவர்களுக்கும்
முஹம்மதுவின் சொத்துக்களை பிரித்துதர மறுத்துவிட்டார்.

2) அபூ பக்கர் ஃபாத்திமாவை ஏமாற்றவில்லை

முஹம்மதுவின் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு கட்டளைக்கும் தவறாமல்
கீழ்படிந்த ஃபாத்திமாவும், அலியும், அப்பாஸும், ஏன் இந்த கட்டளைக்கு
மட்டும் கீழ்படியவில்லை? அபூ பக்கர் தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச்
சொல்லிவிட்ட பிறகும், ஏன் அவரை தொடர்ந்து ஃபாத்திமா கேட்டுக்கொண்டே
இருந்தார்கள்?

இன்னொரு விவரத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன், ஷியாக்களின்
கருத்துப்படி, ஃபாத்திமா கேட்ட அந்த ஆஸ்தியை, முஹம்மது தாம் மரிப்பதற்கு
முன்பாகவே ஃபாத்திமாவிற்கு பரிசாக கொடுத்துவிட்டாராம் (வாக்கு
கொடுத்துவிட்டாராம்). அந்த ஆஸ்தியைத் தான் இப்போது ஃபாத்திமா கேட்டார்கள்
என்று ஷியாக்கள் சொல்லுவார்கள். ஷியாக்கள் சொல்லும் இந்த ஒரு விஷயத்தை
நாம் கருத்தில் எடுத்துக்கொண்டால், அவர்கள் சொல்லும் அனைத்து
விவரங்களையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே, வெறும் சுன்னி
முஸ்லிம்களின் ஆதாரங்களை மட்டுமே நான் இந்த கடிதத்தில் எழுதுகிறேன்.

3) அபூ பக்கரையும், முஹம்மதுவையும் அவமதித்த ஃபாத்திமா

ஒரு பேச்சுக்காக ஒருவேளை ஷியாக்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், ஃபாத்திமா
செய்தது சரியானது அல்ல. தனக்கு சொத்து கிடைக்கவில்லை என்பதற்காக
கலிஃபாவிடம் பேசாமல் இருப்பது சரியான செயலாகுமா? தன் மரித்த சடலத்தையும்
அபூ பக்கர் (மற்றும் உமர்) பார்க்கக்கூடாது என்றுச் சொல்வது ஒரு ஆன்மீக
வாதிக்கு அதாவது ஒரு இஸ்லாமிய பக்தியுள்ள பெண்ணுக்கு உகந்த செயலாகாது.

இதுமட்டுமல்ல, மகளுக்கு பரிசாக முஹம்மது அந்த ஆஸ்தியை கொடுத்து
இருந்திருந்தால், அதனை ஏன் தன் மரணத்துக்கு முன்பாகவே முழுவதுமாக
ஃபாத்திமாவிற்கு முஹம்மது கொடுக்கவில்லை? என்ற கேள்வி எழுகின்றது.
மேலும், மகளிடம் ஒரு வகையாகவும், அபூ பக்கரிடம் வேறு விதமாகவும் முஹம்மது
சொல்லியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் நாம் முஹம்மது மீது
வந்துவிடுகின்றது.ஃபாத்திமாவின் செயல் முஹம்மதுவை அவமதிப்பதாக உள்ளது.
கலிஃபாவிற்கு கீழ்படியாதவர், அவருடைய குருவாகிய முஹம்மதுவிற்கு
கீழ்படியாதவராவார்.

எனவே, அபூ பக்கர் அவர்கள் ஃபாத்திமாவை ஏமாற்றவில்லை, அவர் முஹம்மதுவின்
வார்த்தைகளுக்கு கீழ்படிந்தார் அவ்வளவு தான்.

முடிவுரை:

இஸ்லாம் மனிதர்களின் பண ஆசையை கதர்த்துவிடுமானால், ஏன் ஃபாத்திமா இப்படி
நடந்துக்கொண்டார்? குர்-ஆனினாலும், அல்லாஹ்வினாலும் மற்றமுடியாத
குணமுடையவராக ஃபாத்திமா இருந்திருக்கிறார் என்று நினைக்கத்
தோன்றுகிறதல்லவா?

எனவே, இஸ்லாம் மக்களை வெளிப்புறமாக மதசடங்காச்சாரங்களை செய்ய ஏவுகின்றது.
இத்தனை முறை தொழவேண்டும், இப்படி தொழவேண்டும், இத்தனை முறை சில
ஸூராக்களை, சில துவாக்களை உச்சரிக்கவேண்டும். இப்படி செய்தால், அல்லாஹ்வை
திருப்தி படுத்திவிடலாம் என்று இஸ்லாமிய கோட்பாடுகள் சொல்வதினால்,
மக்களின் மனது மாற்றமடையால் அப்படியே இருந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும்
போது, அதாவது அல்லாஹ்விடமிருந்து வார்த்தைகளை பெற்றுத் தருகின்ற முஹம்மது
மரித்துவிட்ட பிறகு, எல்லாரும் சுதந்திரமாக தங்கள் (தீய) குணத்தை காட்ட
ஆரம்பித்துவிட்டார்கள். முஹம்மது உயிரோடு இருந்திருந்தால், ஃபாத்திமா
இப்படி கேட்டு இருப்பார்களா?

தம்பி, உன் வார்த்தைகளைக் கேட்டால், நீ ஷியாக்களுக்கு சாதகமாக பேசுவதாக
தெரிகின்றது. நீ "இல்லை" என்று மறுத்தால், அதனை நீ அறியாமையில் கேட்டாய்
என்று நான் நம்புவேன், ஆனால், சுன்னி முஸ்லிம்கள் நம்பமாட்டார்கள்,
எச்சரிக்கையாக இரு என்று கேட்டுக்கொள்கிறேன்.

அலிகும், அபூ பக்கருக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி நீ கேட்ட
கேள்விக்கு அடுத்த கடிதத்தில் பதில் அளிக்கிறேன்.

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்

தேதி: 21 ஜூன் 2015

________________________________

உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day5.html

--
Source : http://isakoran.blogspot.in/

0 comments: