அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 5, 2011

யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்

யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்

1.கல்லை வணங்குதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 28:18-ல் யாக்கோபு (கிமு 1836 முதல் 1689 வரை) எனும் ஒரு தேவமனிதன் ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு ஓடி வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். இதைக் கண்டு பயந்து அவன் விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் எனச் சொல்லி ஒரு கல்லை நிறுத்தி தான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் என்றான்.இப்படி கடவுள் தரிசனம் தந்த இடத்தை மறந்து விடாமல் நியாபகார்த்தமாக இருக்க கல்லை நாட்டி சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பழக்கங்கள் யாக்கோபு காலத்திலேயே தொடங்கியது. இப்பழக்கம் தான் இந்து மதத்திலும் நுழைந்து இன்றைக்கு வீதிகள் தோறும் அவற்றை காண்கிறோம்.பிற்பாடு லேவியராகமம் 26:1-ல் "நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்" என்ற கடவுளின் கட்டளைபடியாக கல்லை நிறுத்தும் பழக்கம் யூதமார்க்கத்தை விட்டு ஒழிந்தது. ஆனால் அது இந்து மார்க்கத்தில் இன்றும் தொடர்கிறது.

2.கும்பாபிஷேகம்
யாக்கோபு கல்லை நிறுத்தியது மட்டுமல்லாமல்,அதின் மேல் எண்ணெய் வார்த்தான் என்றும் படிக்கிறோம்.ஆதியாகமம்:35:13,14 வசனங்கள் இப்படியாக சொல்கிறது " யாக்கோபு தன்னோடே தேவன் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்" இச்சம்பவத்தை அபிசேகம் செய்தல் என்கிறோம் இதை ஆதியாகமம் 31:13-ல் பார்க்கலாம் "நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே". கும்பம் என்றால் குடம். கும்பத்தை கொண்டு சிலைகளுக்கு அபிசேகம் செய்வதால் அது கும்பாபிஷேகமாயிற்று. மனிதர்களை கடவுளுக்கென அர்பணித்து அபிசேகம் செய்தல் இன்றைக்கும் யூத மார்க்கத்தில் தொடர்ந்தாலும் கற்களை அபிசேகம் செய்தல் நடைபெறுவதில்லை.

3.பூசாரிமார்கள்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட கோவில் போன்ற ஆசரிப்புகூடாரத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய லேவியர் எனும் வம்சத்தினர் இஸ்ரேலில் தனியாக பிரித்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மட்டுமே ஆலய பணிகளை செய்ய முடியும்.எண்ணாகமம் 18:6 "ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்." இந்து சமயத்திலும் பிராமண ஐயர்கள் மட்டுமே மந்திரம் ஓதுவது முதல் மற்ற எல்லா பூஜை பணிகளும் செய்ய தகுதி உடையவர் ஆவர்.

4.கற்ப கிரக பிரவேசம்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட ஆசரிப்புகூடாரத்தின் ஒரு பகுதியான மகா பரிசுத்த ஸ்தலத்தில் லேவியர்கள் எனும் கர்த்தரால் ஆசாரிய ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.II நாளாகமம் 23:6 "ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக." என்கிறது.இந்து கோவில்களிலும் பூசாரியாக உள்ள பிராமனர்கள் மட்டுமே கற்ப கிரகம் எனப்படும் கோவிலின் முக்கிய ஸ்தானத்திற்குள் நுழைய முடியும்.

5.பூஜையில் மணி அடித்தல்
பூஜையின் போது மணி அடிப்பதும், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்திருக்கிறது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மணி அடிக்கப்படும், அந்த மணிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவன் செத்துப்போனான் என்று அர்த்தம். அப்போது அவனுடைய இடுப்பில் கட்டியிருக்கும் கயிரை பிடித்து இழுக்கவேண்டும்.யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கக் கூடாது. யாத்திராகமம்:28:34,35 "அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்."

6.பலி செலுத்துதல்
பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தது போல இன்றும் அனேக இந்து கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் (கொடையாக) பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், இரத்தம் குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் உண்டு. ஆதியாகமம் 22:13 "ஆபிரகாம் போய், ஆட்டுக்கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்" யாத்திராகமம்:24:5,8 "கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்தான்"

7.நந்தி வழிபாடு
இன்றைக்கும் நந்தி எனப்படும் ஆண் கன்றை வழிபடுதல் இந்துக்களிடையே பிரபலம். கோவில்களிலெல்லாம் நந்தி சிலைகள் காணப்படும். யூத ஜனங்கள் பின்மாறிப் போனபோது ஒரு கட்டத்தில் பொன்னை உருக்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை வணங்கினார்கள் என யாத்திராகமம் புத்தகத்தில் படிக்கிறோம். யாத்திராகமம் 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

8.குத்துவிளக்கு
ஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு.யூத சமயத்திலும் குத்துவிளக்குகள் இடம் பெறுகின்றன. லேவியராகமம் 24:4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.

9.புனித நீராடல்
இந்துக்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் முன் பொய்கையில், ஆற்றில், கடலில் அல்லது தெப்ப குளத்தில் புனித நீராடி தங்களை புற சுத்தம் செய்துவிட்டு செல்வர். இதுவே யூதர்களுக்கும் கட்டளையாக இருக்கிறது.யாத்திராகமம் 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

10.மாதவிலக்கு முறைமை
சில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் உள்ளன. பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை "தூரமானாள் உள்" என்று அழைப்பார்கள்.இது போன்ற பழக்கம் யூதர்களிலும் இருந்திருக்கின்றது.லேவியராகமம்:15:19,20 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

 

 

http://www.thewayofsalvation.org/2011/05/blog-post_05.html?showComment=1316604656119#comment-c859660790133803902

0 comments: